Saturday, 14 December 2024

ஒரு நல்ல காப்பீட்டு முகவர் எப்படி இருப்பார்?

ஒரு நல்ல காப்பீட்டு முகவர் எப்படி இருப்பார்?

ஒரு நல்ல காப்பீட்டு முகவரானவர் காப்பீடு எடுத்தவர் எப்போது அலைபேசியில் அழைத்தாலும் எடுத்துப் பேசுபவராக இருப்பார். முக்கியமான பணிகளில் எடுத்துப் பேச முடியாத நிலையில் தன்னுடைய நிலையைக் குறுஞ்செய்தி மூலமாகவோ, புலனம் (வாட்ஸ்ஆப்) மூலமாகவோ உங்களுக்குத் தெரிவிப்பார். உங்கள் அழைப்புகளை ஒருபோதும் தவிர்க்க முயல மாட்டார்.

காப்பீடு எடுத்தவருக்கு எதிர்பாராத ஏதேனும் நடந்து விட்டால் உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருபவரே நல்ல காப்பீட்டு முகவராவார்.

ஒரு நல்ல காப்பீட்டு முகவர் தனது நிறுவனத்தை விட தன்னிடம் காப்பீடு எடுத்தவர்களையே தன்னுடைய முதலாளி என உணர்ந்து செயல்படுவார்.

ஒரு நல்ல காப்பீட்டு முகவரிடம் காப்பீடு எடுத்தவர்களின் காப்பீட்டு எண், முகவரி, அலைபேசி எண், தொடர்புடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தொடர்பு எண் என அனைத்தும் எப்போதும் கைவசம் இருக்கும்.

காப்பீடு எடுத்தவருக்கு அவசரமான நெருக்கடியான நிலையில் உடனடியாகக் காப்பீட்டு அட்டையைக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் ஒரு நல்ல காப்பீட்டு முகவரானவர் அவர்களை உடனடியாகத் தொடர்பு கொண்டு அவரது காப்பீட்டு எண், காப்பீடு குறித்த விவரங்கள் குறித்த தகவல்களை அளிப்பவராக இருப்பார்.

மருத்துவக் காப்பீடு போன்றவற்றில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொகையைக் கோர முடியும், இன்னின்ன விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பணப்பட்டுவாடா செய்யப்படும் என்பது போன்ற நுணுக்கமான விவரங்களை முன்கூட்டியே எடுத்துச் சொல்பவராக இருப்பார். அப்படிச் சொல்வதால் அம்மருத்துவக் காப்பீட்டைத் தன்னுடைய வாடிக்கையாளர் எடுக்காமல் போனாலும் அவர்களுக்குச் சரியான விவரங்களைத் தருவதைத் தன்னுடைய முதன்மையான நோக்கமாகக் கொள்வார். அதையே தன்னுடைய பணிக்குக் கிடைக்கும் வெற்றியாகவும் திருப்தியாகவும் கருதுவார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தனக்குக் கிடைக்கும் தரகுத் தொகை வருமானத்தை விட, தன்னிடம் காப்பீடு எடுக்கும் வாடிக்கையாளர் நலனையும் நன்மதிப்பையுமே ஒரு நல்ல காப்பீட்டு முகவர் முக்கியமானதாகக் கருதுவார்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

*****

No comments:

Post a Comment