Monday, 23 December 2024

பின்பற்ற வேண்டிய 10 பழக்க வழக்கங்கள்!

பின்பற்ற வேண்டிய 10 பழக்க வழக்கங்கள்!

எந்தத் துறையாக இருந்தாலும் அத்துறையில் முதன்மை பெற நீங்கள் பின்பற்ற வேண்டிய பத்து பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்வோமா?

1) அதிகாலையில் துயில் எழுங்கள். உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அல்லது யோகா இவற்றில் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.

2) அந்த நாள் வேலைகளைப் பட்டியலிட்டுக் குறித்துக் கொள்ளுங்கள். அதை தாளில் குறித்துக் கொள்வதோ, அலைபேசியில் பதிந்து கொள்வதோ உங்கள் விருப்பம். ஆனால் கட்டாயம் குறித்து அல்லது பதிந்து கொள்ளுங்கள்.

3) பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது உணர்ச்சிவசப்படாதீர்கள், கோபப்படாதீர்கள், கொந்தளிக்காதீர்கள். அமைதியாக யோசியுங்கள். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டு.

4) வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். நண்பர்களோடு அளவளாவுங்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி அரட்டை அடியுங்கள். கண்டிப்பாக வாரத்தில் சில நாட்களேனும் விளையாடுங்கள். நீங்கள் புத்துணர்வோடு இருக்க இவை அவசியம்.

5) உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் மனிதர்களோடு பழகுங்கள். முக்கியமாக உங்களை விட வயது குறைந்தவர்களோடு பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய புத்துணர்ச்சி உங்களையும் தொற்றிக் கொள்ளும்.

6) ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது வாசிப்பிற்காக ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் உங்களுக்குப் பிடித்ததைப் படியுங்கள். அது நீங்கள் இருக்கும் துறைக்குத் தொடர்பு இல்லாததாக இருந்தாலும் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதைப் படிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதிலிருந்து புதுப்புது யோசனைகள் பிறக்கும். உற்சாகமும் ஊற்றெடுக்கும்.

7) நீங்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பணிவையும் மனிதாபிமானத்தையும் கைவிடாதீர்கள். உங்களுக்கு நெருக்கடியான நேரங்களில் உங்களைக் காப்பாற்றும் இரண்டு ஆயுதங்கள் நீங்கள் காட்டிய பணிவும் மனிதாபிமானமும்தான்.

8) உயரே உயரே என்று போய்க் கொண்டிருக்காதீர்கள். எந்த இடத்தில் ஏறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து நிறுத்திக் கொள்ளுங்கள். நுனிக்கொம்பு ஏறுவது எதுவாக இருந்தாலும் அது ஆபத்தைக் கொண்டு வந்தே தீரும்.

9) எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறு சிறு உதவிகளைச் செய்யப் பழகுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு மனநிறைவையும் அர்த்தத்தையும் அது தரும்.

10) எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தூக்கத்தைக் குறைக்காதீர்கள். அவ்வபோது ஓய்வு எடுப்பதைத் தவிர்க்காதீர்கள். ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பதில் எந்தக் குறையும் வைக்காதீர்கள்.

இந்தப் பத்து பழக்கவழக்கங்களையும் பின்பற்றினால் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் நீங்கள் முதன்மையாக இருப்பீர்கள்.

நீங்கள் முதன்மை பெற வாழ்த்துகள்!

*****

No comments:

Post a Comment