Saturday, 28 December 2024

நிர்வாகத்தில் அறிவு மற்றும் சமயோசிதத்தின் முக்கியத்துவம்!

நிர்வாகத்தில் அறிவு மற்றும் சமயோசிதத்தின் முக்கியத்துவம்!

நிர்வாகத்தில் அறிவும் சமயோசிதமும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்றை இங்கு காண்போம்.

டாட்டா ஸ்டீல் தலைவராக ருச்சி மோடி இருந்த சமயம்.

அப்போது கழிவறைத் தொடர்பான பிரச்சனை ஒன்று அவரிடம் வந்தது.

அதிகாரிகளின் கழிவறைகள் தூய்மையாகவும், தொழிலாளர்களின் கழிவறைகள் தூய்மையற்றும் இருந்தன.

இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய எத்தனை நாட்களாகும் என்று அதிகாரிகளிடம் கேட்டார் ருச்சி மோடி. அதிகாரிகள் ஒரு மாத காலம் ஆகும் என்றனர்.

ருச்சி மோடி அதை ஏற்கவில்லை. உடனடியாகச் சரி செய்ய வேண்டிய பிரச்சனைக்கு எதற்கு ஒரு மாத காலம் என்று கேட்டார்.

அத்துடன் நிற்காமல், அவர் உடனடித் தீர்வை யோசித்துச் செயல்படுத்தினார்.

அதிகாரிகளின் கழிவறை என்று எழுதப்பட்ட போர்டைத் தொழிலாளர்களின் கழிவறை என்றும் தொழிலாளர்களின் கழிவறை என்று எழுதப்பட்ட போர்டை அதிகாரிகளின் கழிவறை என்றும் மாற்ற சொன்னார். இந்த மாற்றத்தை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி செய்யுமாறு ஆணையிட்டார். அன்றே இந்தப் பிரச்சனை தீர்ந்தது. அன்றிலிருந்து அதிகாரிகளின் கழிவறைகளைப் போலவே தொழிலாளர்களின் கழிவறையும் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டது. ஏனென்றால் அன்றிலிருந்து தொழிலாளர்களின் கழிவறைகளைத்தானே அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும். இதுதான் தங்கள் கழிவறை என்று நினைத்து அதை மட்டும் தூய்மையாகப் பராமரிக்க நினைத்தால் அடுத்த பதினான்காவது நாள் அவர்கள் தொழிலாளர்களின் கழிவறைகளுக்கு மாறியாக வேண்டும். ஆகவே இப்போது அனைத்துக் கழிவறைகளையும் சரிசமமாகக் கருதி தூய்மையாகப் பராமரிப்பதைத் தவிர அதிகாரிகளுக்கு வேறு வழியில்லை. அதனால், அதற்குப் பின் கழிவறைத் தொடர்பான பிரச்சனை டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் எழவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அறிவும் சமயோசிதமும் நிறைந்த நிர்வாகத் திறன் பெரிதும் உதவக் கூடியது என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது அல்லவா!

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

******

No comments:

Post a Comment