Friday, 20 December 2024

திருக்குறள் – குறிப்புகள்

திருக்குறள் – குறிப்புகள்

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

இவர் கி.மு. 31 இல் பிறந்தவராகக் குறிப்பிடப்படுகிறார்.

திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட நடப்பு ஆண்டுடன் 31 ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் தெய்வப் புலவர், முப்பால் புலவர், செந்நாப்போதர், பொய்யில் புலவர், பெருநாவலர், மாதானுபங்கி, தேவர், நாயனார் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்.

திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது. முப்பால் என்றும் குறிப்பிடப்படுகிறது. தமிழ் வேதம் எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

திருக்குறள் தோன்றிய காலம் குறித்து அறிஞர்களிடைய கருத்து வேறுபாடு நிலவுகிறது. சோமசுந்தரபாரதி, மா.ராசமாணிக்கனார் போன்றோர் திருக்குறளைக் கடைச்சங்கக் கால நூலாகக் கருதுவர். கே.கே. பிள்ளை திருக்குறளை முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகக் குறிப்பிடுவார். கமில்சுவலபில் திருக்குறளை இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட நூலாகக் குறிப்பிடுவார். வையாபுரி பிள்ளை திருக்குறளை முதல் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட நூலாகக் குறிப்பிடுவார்.

திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களைக் கொண்டது. பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல், அரசியல், அங்கவியல், ஒழிபியல், களவியல், கற்பியல் என ஒன்பது இயல்களைக் கொண்டது.

திருக்குறளில் அடங்கியுள்ள மொத்த சொற்கள் 14 ஆயிரம் ஆகும். மொத்த சீர்கள் 9310 (1330 × 7 = 9310) ஆகும்.

திருக்குறளில் அடங்கியுள்ள மொத்த எழுத்துகள் 42,194 ஆகும்.

தமிழில் உள்ள 247 எழுத்துகளில் திருக்குறளில் இடம் பெறாத எழுத்துகள் 37 ஆகும். உயிரெழுத்துகளில் திருக்குறளில் இடம் பெறாத எழுத்து ‘ஔ’ ஆகும்.

திருக்குறள் முதன் முதலில் 1812 இல் அச்சிடப்பட்டது. அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசப் பண்டிதர். தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் திருக்குறள், இரண்டாவது நூல் நாலடியார்.

திருக்குறளை முதல் முதலில் 1730 இல் மொழிபெயர்த்தவர் வீரமா முனிவர். லத்தீன் மொழியில் வீரமா முனிவர் மொழிபெயர்த்ததே திருக்குறளின் முதல் ஐரோப்பிய மொழிபெயர்ப்பாகும்.

திருக்குறளை முதல் முதலில் ஆங்கிலத்தில் 1794 இல் மொழி பெயர்த்தவர் கிண்டர்ஸ்லி.

திருக்குறளை முதல் முதலில் பிரெஞ்சில் 1848 இல் மொழி பெயர்த்தவர் ஏரியல்.

திருக்குறளை முதல் முதலில் ஜெர்மனில் 1856 இல் மொழி பெயர்த்தவர் கார்ல் கிரவுல்.

திருக்குறள் 57 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நரிக்குறவர்களின் வக்ரபோலி மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

மணக்குடவர், தருமர், தாமத்தர், நச்சர், பரிதியார், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் போன்றோர் திருக்குறளுக்கு உரை வரைந்த பதின்மர் ஆவர்.

இவர்களுள் மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிப்பெருமாள், பரிமேலழகர் உரைகளே முழுமையாகக் கிடைத்துள்ளன. தருமர், தாமத்தர், நச்சர் உரைகள் பகுதியளவே கிடைத்துள்ளன. திருமலை, மல்லர் உரைகள் கிடைக்கப் பெறவில்லை.

1818 இல் எல்லீசன் திருவள்ளுவர் உருவம் பதித்த தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளார்.

1941 இல் திருக்குறளார் வீ. முனுசாமியும், 1949 இல் தந்தை பெரியாரும் திருக்குறள் மாநாடுகளை நடத்தியுள்ளனர்.

திருவள்ளுவரின் அதிகாரப்பூர்வ படம் 1960 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா.

1964 இல் திருவள்ளுவர் படத்தைப் பாராளுமன்றத்தில் ஜாகிர் உசேன் திறந்து வைத்தார்.

1967 இல் தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படம் இடம் பெற வேண்டும் என்று அரசாணை பிறப்பித்துள்ளது.

1968 இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் சென்னை மெரினா கடற்கரையில் திருவள்ளுவருக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டது.

1968 இல் தமிழக அரசுப் பேருந்துகளில் குறள் இடம் பெறுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

1976 இல் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது.

2000 இல் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டது. அச்சிலையின் உயரம் 41 மீட்டர். அதாவது 133 அடி ஆகும்.

திருவள்ளுவரைப் பிரபஞ்சப் புலவர் என ஜி.யு.போப் குறிப்பிடுகிறார்.

திருக்குறள் காட்டும் அறத்தைத் தலைசிறந்த அறம் என ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுகிறார்.

மகாத்மா காந்தியடிகளுக்குத் திருக்குறளைப் பரிந்துரைத்தவர் லியோ டால்ஸ்டாய். டால்ஸ்டாய் திருக்குறளை இந்துக்குறள் என்கிறார்.

திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழ் பயில விரும்பினார் காந்தியடிகள். திருக்குறள் தம் உயிர் வரை ஊடுருவியிருப்பதாகவும் காந்தியடிகள் குறிப்பிடுகிறார்.

*****

No comments:

Post a Comment