Friday, 13 December 2024

வெற்றிக்கு ஐந்து விதிகள்!

வெற்றிக்கு ஐந்து விதிகள்!

வெற்றிக்கு வழிகாட்டும் எத்தனையோ விதிகள் இருந்தாலும் இந்த ஐந்து விதிகளும் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் உன்னத விதிகள். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த ஐந்து விதிகளை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

விதி 1 :

எது நடந்து விடக் கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதுவே நடக்கும் என்பது மர்பி விதி. எனவே எது நடக்கக் கூடாது என்று நினைக்கிறீர்களோ அப்படி நினைக்காமல், எது நடக்க வேண்டுமோ அதை நினைக்கத் தொடங்குங்கள். இதுதான் வெற்றிக்கான முதல் விதி.

விதி 2 :

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அது எவ்வளவு தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தாலும் அதை எழுத்தால் எழுதுங்கள். அப்படி எழுதினாலே அந்தப் பிரச்சனைக்கான தீர்வு கிடைத்து விடும் என்பது கிட்லின் விதி. ஆகவே எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை எழுதுங்கள். இதுதான் வெற்றிக்கான இரண்டாம் விதி.

விதி 3 :

எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையைச் செய்வதற்கான தெளிவான வழிமுறைகளை வகுப்பதுதான் அந்த வேலையை முடிப்பதற்கான சரியான வழி என்பது கில்பர்ட் விதி. ஒரு வேலையை எப்படி செய்வது என்ற தெளிவான வழிமுறையை வகுக்கா விட்டால், அது சாதாரண வேலையாக இருந்தாலும் அதை உங்களால் செய்து முடிக்க முடியாது. ஆகவே வேலையை எப்படி செய்வது என்பதற்கான தெளிவான விதியை வகுத்து விடுங்கள். இதுவே வெற்றிக்கான மூன்றாவது விதி.

விதி 4 :

நீங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றவர் என்றாலும் உங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது வில்சன் விதி. அவ்வாறு வளர்க்கவில்லை என்றால் உங்களால் தொடர்ந்து வெற்றிகளைப் பெற முடியாது. நீங்கள் பெற்ற ஒரே ஒரு வெற்றியோடு தேங்கிப் போக வேண்டியதுதான். இதுதான் வெற்றிக்கான நான்காவது விதி.

விதி 5 :

தேவை இல்லாத நேரங்களில் தேவை இல்லாத முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது பால்கேன்ட் விதி. நிறையை பேர் தேவை இல்லாத நேரத்தில் தேவையில்லாத முடிவுகளை எடுப்பதாலேயே தோற்றுப் போகிறார்கள். ஆகவே அநாவசிய முடிவுகளை எடுத்து தேவையில்லாமல் தோற்றுப் போகாதீர்கள். இதுவே வெற்றிக்கான ஐந்தாவது விதி.

வாழ்க்கையில், வேலையில், படிப்பில் என்று எதில் வெற்றி பெற நினைத்தாலும், நீங்கள் இந்த ஐந்து விதிகளையும் பின்பற்றினால் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவது உறுதி.

நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்!

*****

No comments:

Post a Comment