Sunday, 29 December 2024

திருக்குறளின் சிறப்புகள்

திருக்குறளின் சிறப்புகள்

ஒன்றா?

இரண்டா?

திருக்குறளின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அறிஞர் பெருமக்கள் திருக்குறளின் சிறப்புகளைப் பலவிதமாக விதந்தோதுகின்றனர்.

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை

மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்ற வாசகம் திருக்குறளின் சிறப்பை உணர்த்தும்.

திருவள்ளுவர் பிறந்தது கி.மு. 31 என்று மறைமலையடிகள் தலைமையில் அறிஞர்கள் கூடி முடிவெடுத்தனர். திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட நடப்பு ஆண்டோடு 31 ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

திருக்குறளுக்கு முதன் முதலில் இசையமைப்பு செய்து, இறை வணக்கப் பாடலாகப் பாடியவர் தண்டபாணி தேசிகர்.

1730 இல் திருக்குறளை முதன் முதலில் லத்தீனில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இதுவே திருக்குறளின் முதல் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு ஆகும். வீரமான முனிவர் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை மட்டுமே மொழிபெயர்த்தார். இன்பத்துப் பாலை மொழிபெயர்க்கவில்லை. அவர் திருக்குறளை,

இருளிலே வீசும் விண்மீன்

பாலைவனத்தில் பூத்த அழகு மலர்

அறியாமையை அகற்றும் ஒளிச்சுடர்

உலகிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் எனச் சிறப்பிக்கிறார்.

1794 இல் ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழி பெயர்த்தவர் கிண்டர்ஸ்லி. திருக்குறளை ஆங்கிலத்தில் முழுமையாக மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப்.

உலகில் அதிக மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. 107 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளின் மூல ஒலைச்சுவடியைக் கண்டெடுத்தவர் கந்தப்பன். இவர் அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார் ஆவார்.

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் 1812 இல் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசப் பண்டிதர். மொழிபெயர்க்கப்படாமல் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் என்ற சிறப்பு திருக்குறளுக்கு உண்டு.

பெசண்ட் நகர் உ.வே.சா நூலகத்தில் உள்ள 16 ஆம் நூற்றாண்டு ஓலைச்சுவடி திருக்குறள் மூலத்திலிருந்து படியெடுக்கப்பட்ட கடைசி ஓலைச்சுவடி ஆகும். இதுவே திருக்குறளுக்கு உள்ள உலகின் பழமையான ஓலைச்சுவடி ஆகும்.

ரஷ்ய கிரெம்ளின் மாளிகையின் குண்டு துளைக்காத பாதுகாப்பு அறையில் உள்ள உலகின் தலைசிறந்த புத்தகங்களுள் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.

விக்டோரியா மகாராணி அரண்மனை நூலகத்திலும் திருக்குறள் இடம் பெற்றுள்ளது.

திருக்குறள் ஒலித்த பிறகே தமிழ்நாடு சட்டமன்ற அவை நடவடிக்கைகள் தொடங்குகின்றன.

மேலும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைச் சிறப்பிக்கும் வகையில், திருநெல்வேலியில் உள்ள ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்தின் பெயர் திருவள்ளுவர் மேம்பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

திருக்குறளைச் சிறப்பிக்கும் வகையில் கன்னியாகுமரி – புதுடெல்லி விரைவுத் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவுத் தொடர்வண்டி எனச் சூட்டப்பட்டுள்ளது.

வள்ளுவத்தின் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை 2000 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

திருக்குறளின் பாதிப்பால் ஆல்பர்ட் சுவைட்சர், பெர்னாட்ஷா போன்றோர் புலால் மறுப்பைத் தங்கள் வாழ்க்கையில் இறுதி வரை பின்பற்றினர்.

ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் திருக்குறளின் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரே காந்தியடிகளுக்குத் திருக்குறளை அறிமுகம் செய்தார். திருக்குறளைப் படிப்பதற்காகவே காந்தியடிகள் தமிழ் பயில விரும்பினார்.

*****

 

 

No comments:

Post a Comment