Thursday, 19 December 2024

விஷத்தன்மை வாய்ந்த தகவல் தொடர்பைத் தவிர்ப்போம்! (Avoid Toxic Communication)

விஷத்தன்மை வாய்ந்த தகவல் தொடர்பைத் தவிர்ப்போம்!

(Avoid Toxic Communication)

“இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”

என்கிறார் திருவள்ளுவர்.

தகவல் தொடர்பில் சொற்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அச்சொற்கள் இனிமையாக இருந்தால் விளைவுகளும் இனிமையாக இருக்கும். கடுமையாக இருந்தால் விளைவுகளும் கடுமையாக இருக்கும். அதுவே விஷமாக இருந்தால் விளைவுகளும் விஷமாக இருக்கும்.

ஏன் வார்த்தைகள் விஷமாக வெளிப்படுகின்றன?

பிறருடைய கோணத்தில் இருந்து பார்க்காமல், தன்னுடைய கோணத்தில் இருந்து பார்ப்பதால் இப்படிப்பட்ட விஷத்தன்மை வாய்ந்த சொற்கள் வெளிப்படுவதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள். அத்துடன் அகங்காரமாய் நடத்தல், நக்கல் செய்ய விழைதல், ஏளனம் செய்ய நினைத்தல், அவமானப்படுத்த நினைத்தல் போன்றவற்றின் காரணமாகவும் விஷத்தன்மை வாய்ந்த சொற்கள் வெளிப்படுகின்றன.

எப்படி விஷத்தன்மை வாய்ந்த சொற்களைத் தவிர்க்கலாம்?

பிறர் சொல்வதை முழுமையாகக் காது கொடுத்துக் கேளுங்கள். பிறகு உங்கள் கருத்துகளை மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள்.

பேசுவர் உயர்ந்தவர், கேட்பவர் தாழ்ந்தவர் என்ற எண்ணம் இருப்பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

சொற்களில் மேதாவித்தனத்தைக் காட்ட நினைக்காதீர்கள்.

விவாதம் சூடாகும் போது எச்சரிக்கையாக இருங்கள். உணர்ச்சிவசப்பட்டு விவாதத்தின் உச்சத்தில் கருத்துத் தெரிவிப்பதைத் தவிருங்கள்.

ஒரு விவாதத்தை வெல்லும் போது ஒரு நண்பரை இழக்கிறீர்கள் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

உத்தரவிடும் தொனி, கிண்டல் செய்யும் பாணி, குத்திக் காட்டிப் பேசும் முறை ஆகியவற்றைத் தவிருங்கள்.

மற்றவர்களது நல்ல விசயங்களைப் பாராட்டுங்கள்.

மற்றவர்களைக் குறை சொல்வதை விட, உங்கள் தேவை என்ன என்பதை மென்மையாக எடுத்து சொல்லுங்கள்.

எதிர்கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்காக அவற்றைக் கண்மூடித்தனமாக விமர்ச்சிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

மேற்படி விசயங்களைக் கடைபிடித்தாலே நீங்கள் விஷத்தன்மை வாய்ந்த தகவல் தொடர்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். அனைவரும் பேச விரும்பும் நபர்களில் ஒருவராக நீங்கள் மாறி விடுவீர்கள்.

*****

No comments:

Post a Comment