Monday, 7 January 2019

ஜனவரி மாதத்தின் முக்கிய தினங்கள்


ஜனவரி மாதத்தின் முக்கிய தினங்கள்
ஜனவரி 04     - உலக பிரெய்லி தினம்
ஜனவரி 06     - தேசிய தொழில் நுட்ப தினம்
ஜனவரி 09     - வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
(மகாத்மா காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தினத்தைச் சிறப்பிக்கும் விதமாகக் கொண்டாடப்படுகிறது)
ஜனவரி 10     - உலக சிரிப்பு தினம்
ஜனவரி 11 - லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம்
ஜனவரி 12     - தேசிய இளைஞர் தினம்
                        (சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாகக்                                   கொண்டாடப்படுகிறது)
ஜனவரி 14     - சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்ட தினம்
ஜனவரி 15     - இந்திய ராணுவ தினம்
ஜனவரி 23     - நாட்டுப்பற்றுக்கான தேசிய தினம்
                        (நேதாஜியின் பிறந்த தினத்தைச் சிறப்பிக்கும் விதமாகக்                                           கொண்டாடப்படுகிறது)
ஜனவரி 24     - தேசிய பெண் குழந்தைகள் தினம்
ஜனவரி 25     - தேசிய வாக்காளர் தினம்
                        & தேசிய சுற்றுலா தினம்
ஜனவரி 26     - இந்திய குடியரசு தினம்
ஜனவரி 30     - தியாகிகள் தினம்
                        (மகாத்மா காந்தியடிகளின் மறைவை அனுசரிக்கும் விதமாக)
ஜனவரி 11 முதல் 17 வரை - சாலை பாதுகாப்பு வாரம்
ஜனவரி கடைசி ஞாயிறு   - உலக தொழுநோய் தினம்
*****

Wednesday, 2 January 2019

மனஅழுத்தமின்றி பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள...

மனஅழுத்தமின்றி பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள...
தேர்வுகள் என்றாலே மனஅழுத்தம் என்ற சூழல் உருவாகி விட்டது. அதுவும் பொதுத்தேர்வு என்றால் உச்சகட்ட மனஅழுத்தம் என்ற சூழல் உருவாகி விட்டது.
மனஅழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதச் சென்றால் அது தேர்வே இல்லை என்ற சூழல் உருவாகி விடுமோ என்று தோன்றுகிறது.
பெற்றோர்களும் மாணவர்களும் இதை எக்ஸாம் டென்ஷன் என்கின்றனர்.
இந்த எக்ஸாம் டென்ஷன் இல்லை என்றால் மதிப்பெண் குறைந்து விடுமோ என்று கருதும் மனநிலை உண்டாகிக் கொண்டிருக்கிறது.
எதற்கு இந்த‍ டென்ஷன்? ஏன் இந்த டென்ஷன்?
மனஅழுத்தமின்றிப் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாதா என்றால்... முடியாது என்ற சொல் உலகின் அகராதியில் எங்கு இருக்கிறது?
மனஅழுத்தமின்றிப் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள முதல்படி புரிந்து கொள்ளுதல்தான்.
யாரை நமக்குப் பிடிக்கவில்லையோ அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டால் அவர் மேல் ஒரு பிடித்தம் நம்மையும் அறியாமல் ஏற்படும். அப்படித்தான் எந்தப் பாடம் நமக்குப் புரியவில்லையோ அந்தப் பாடத்தை நாம் புரிந்து கொள்ளத் துவங்கினால் அந்தப் பாடமே நமக்கு ஆர்வமானப் பாடமாக ஆகி விடும்.
மனஅழுத்தம் என்று சொல்வதிலிருந்தே இந்த டென்ஷன் மனதிலிருந்துதான் தொடங்குகிறது என்பது புரியும். அதுவும் குறிப்பாக பொருள் புரியாமல் மனப்பாடம் செய்தால் இந்த டென்ஷன் ஏகத்துக்கும் அதிகமாகத்தான் இருக்கும்.
மனப்பாடத்துக்கு முக்கியத்துவம் தராமல் புரிந்து கொள்வதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
பொருள் புரிந்த பின் மீண்டும் மீண்டும் படித்தால் போதும். தானாகவே மனதில் பதிந்து விடும்.
பொருள் புரியாத பாடங்களை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தாலே பொருள் புரியத் துவங்கி விடும். அப்படியும் புரியாவிட்டால் ஆசிரியர்களையோ, நண்பர்களையோ நாட தயங்கக் கூடாது. எது புரியவில்லை என்பதைக் கேட்கக் கூச்சமோ, தயக்கமோ கூடாது. நமக்குப் புரியாததைப் புரிய வைக்கத்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
படித்தப் பாடங்கள் மறக்காமல் இருக்க பாடங்களை படங்களாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை மனவரைபடம் என்கிறார்கள்.
படிக்கின்ற பாடங்களை நாம் அன்றாடம் நன்கு அறிந்த நிகழ்வுகள், செய்திகளோடு இணைத்து தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். இதனால் கற்றது மறப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும்.
இப்போது அனைவரின் கரங்களிலும் அலைபேசிகள் தவழ ஆரம்பித்து விட்டதால் மனப்பாடம் செய்ய வேண்டிய செய்யுள்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் ஆகியவற்றை குரல்பதிவு செய்து வைத்து மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
தமிழ், வரலாற்றுப் பாடங்களை கதைகளாக மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம். வரிக்கு வரி அவைகளை மனப்பாடம் செய்து முட்டி மோதிக் கொண்டு இருக்கக் கூடாது.
அறிவியல் பாடங்களில் படங்கள் நிறைய இடம் பெற்றிருக்கும். அப்படங்களை வரைந்து பார்த்து அதன் அடிப்படையில் நினைவு வைத்துக் கொள்வது எளிது. படங்கள் மனதிலிருந்து மறையாது என்பதால் மிக எளிமையாக அறிவியல் பாடங்களை எளிமையாக்கிக் கொள்ளலாம்.
கணக்கில் சூத்திரங்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அந்தச் சூத்திரத்தின் பொருள் என்ன? அந்தச் சூத்திரம் எப்படி தருவிக்கப்பட்டு இருக்கிறது? என்பதைப் புரிந்து கொண்டால் கணக்கீடுகள் செய்வது அல்வா சாப்பிடுவது போல ஆகி விடும்.
ஆங்கிலம் அந்நிய மொழியாகத் தோன்றி அச்சுறுத்தினாலும் பொருள் புரியாத வார்த்தைகளின் பொருளை எழுதி வைத்துக் கொண்டு, ஆங்கில வாக்கிய கட்டமைப்பைப் புரிந்து கொண்டால் போதும். தானாகவே படிக்கம் வாக்கியங்கள் மனதில் வந்து அமர்ந்து கொள்ளும்.
ஆகவே தேர்வு அழுத்தம் என்பதிலிருந்து விடுபட முதல் விசயம் பாடங்களைக் கண்டு பயப்படுவதிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். எந்தப் பாடமும் யாரையும் பயமுறுத்துவதில்லை. எந்தப் பாடத்தை நாம் புரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லையோ அந்தப் பாடமே பயமுறுத்துகிறது.
இதைப் படிக்க உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் கீழே உள்ள யூடியுப் இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். இதே முறையை உங்களுக்குப் பிடிக்காத பாடத்தைப் படிப்பதிலும் காட்டலாம். பிடிக்காதப் பாடத்தை தற்போது இருக்கும் அலைபேசி வசதியைப் பயன்படுத்தி குரல் பதிவோ, ஒளி-ஒலிப் படப் பதிவோ செய்து கொள்ளுங்கள். திரும்பத் திரும்ப கேட்டும், பார்த்தும் கொண்டிருக்கும் போது உங்களை அறியாமலே ஒரு புரிதல் ஏற்படும். அந்தப் புரிதல் ஒரு ஆர்வத்தை உருவாக்கும். நீங்கள் மேலும் மேலும் முன்னேற வழிவகுக்கும்.
இதை யூ டியுப் காணொலியாகக் காண கீழே உள்ள காணொலி இணைப்பைச் சொடுக்கவும்...

Tuesday, 1 January 2019

இன்று ஒரு செய்தி - 02.01.2019

மூன்றாம் பருவம் தொடங்கி இருக்கிறது. இந்த இனிய நாளில் சில செய்திகளை நான் இளைய தலைமுறையாம் மாணவச் செல்வங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதல் செய்தி
அதிகாலையில் எழப் பழகுங்கள்.
இரண்டாம் செய்தி
எழுந்ததும் தன்சுத்தம் செய்து கொண்டு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மூன்றாம் செய்தி
தன்சுத்தத்தில் கவனமாக இருப்பது போல நம்மைச் சுற்றிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். முடிந்தவரை குப்பைகளை உருவாக்காமல் இருந்தாலே தூய்மைப் பணிக்கான தேவைகள் குறைந்து விடும். குப்பைகளை எப்படி உருவாக்காமல் இருக்கலாம் என்பதை தாள்களைக் கிழிப்பதற்கு முன் யோசியுங்கள். ஒருவேளை குப்பைகளை உருவாக்கி விட்டாலும் அதைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
நான்காம் செய்தி
உங்களுக்கு என்று ஒரு சுயஒழுக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாகவும் அதில் உறுதியாகவும் இருங்கள்.
ஐந்தாம் செய்தி
எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும், அலைபேசியைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள்.
ஆறாம் செய்தி
எதைத் தீர்மானித்தீர்களோ அதைச் செயல்படுத்துங்கள்.
நன்றி!
நல்ல ஒரு செய்தியோடு நாளையும் சந்திப்போம்!
இதன் யூடியுப் இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்...


நம்மை மாற்றும் நன்மொழி-4