தோல்விகள் உங்களை மூழ்கடிக்க விட்டு
விடாதீர்கள்!
நோபல்
பரிசு பெறும் மௌங்கி பவென்டி சொல்லும் தன்னம்பிக்கைப் பாடம்.
வேதியியலில்
2023 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறும் மௌங்கி பவென்டி கல்லூரியின் முதல் பருவத் தேர்வில்
வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்தவர் என்ற செய்தியை உங்களால் நம்ப முடிகிறதா? அந்தத்
தோல்வி அவரை வெகுவாகப் பாதித்திருக்கலாம். ஆனால் அந்தத் தோல்வி அவரை மூழ்கடித்து விடாமல்
அவர் பார்த்துக் கொண்டார். அதனால்தான் இன்று எந்த வேதியியல் தேர்வில் தோல்வியைடைந்தாரோ
அதே வேதியியல் துறையில் நோபல் பரிசு பெறும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
நுண்
குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக நடப்பாண்டில் வேதியியல்
துறைக்கான நோபல் பரிசு பெறுகிறார்
அமெரிக்காவின்
மஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் மௌங்கி பவென்டி. 62 வயதாகும் மௌங்கி பவென்டி துனிசிய
மற்றும் பிரெஞ்சு பாரம்பரியத்தை உடையவர். இவர்
தனது பள்ளிப் படிப்பு வரை எளிதாகவே அறிவியல் பாடங்களைப் படித்து வந்துள்ளார். ஆனால்,
1970 இல் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததும்,
அவரைத் திடீரென ஓர் அச்சம் தொற்றிக்கொண்டது.
அப்போது
அவர் தேர்வுகளுக்கு படிக்காமலும், அவ்வளவு பெரிய கல்லூரி மற்றும் பேராசிரியர்களைப்
பார்த்து மிரண்டும் போயிருந்திருக்கிறார்.
தான்
ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் முதல் தேர்வு எழுதிய அனுபவத்தை அவர் இப்படி நினைவு கூர்கிறார்.
“முதல்
வேதியியல் தேர்வெழுதியது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. முதல் கேள்வியைப் பார்க்கிறேன்..
பதில் தெரியவில்லை. இரண்டாவது கேள்வியைப் பார்க்கிறேன்.. அதே நிலைதான். அதற்கும் பதில்
கிடைக்கவில்லை. இறுதியாக அந்தத் தேர்வில் 100க்கு 20 மதிப்பெண்கள் எடுத்து வகுப்பிலேயே
கடைசி மதிப்பெண் எடுத்த மாணவராக அறியப்பட்டேன். அப்போது நான் நினைத்தது இதுதான், அடக்கடவுளே..
என் கதை முடிந்துவிட்டது, இனி நான் இங்கே என்ன செய்யப்போகிறேன்?”
ஆனால்,
அந்தத் தோல்விக்குப் பிறகு பவென்டி வாழ்க்கையில் நிகழ்ந்ததெல்லாம் விடாமுயற்சியும்
தன்னம்பிக்கையும் நிகழ்த்திய ஆச்சரியங்கள். பிறகு பவென்டி வேதியியலைக் காதலிக்கக் கற்றுக்கொண்டார்,
அதோடு தேர்வுகளுக்குத் தயாராகும் கலையையும் அறிந்துகொண்டார். உடனடியாக தன்னை சரி செய்யும்
பணியைத் தொடங்கிவிட்டிருந்தார்.
எப்படி
படிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டார். அதுவரை அது பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அதைக் கற்றுக் கொண்ட பிறகு சந்தித்த தேர்வுகள் அனைத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள்
எடுத்தார்.
இதன்
மூலம் நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானியான பவென்டி இளைஞர்களுக்குச் சொல்லும் செய்தி
இதுதான், “விடாமுயற்சியை விட்டு விடாதீர்கள். மற்றும் எந்த தோல்வியும் உங்களை அழிக்க
விட்டுவிடாதீர்கள். ஏனெனில் நான் சந்தித்த முதல் தோல்வி அது. அது என்னை மூழ்கடித்துவிட்டிருக்கும்.
ஆனால் அவ்வாறு நான் விட்டுவிடவில்லை.”
ஆகவே
எந்தத் தோல்வியும் உங்களை மூழ்கடிக்க விட்டு விடாதீர்கள். தோல்விகளிலிருந்து விடா முயற்சி
மூலமாக மீண்டு வாருங்கள். என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், என்ன மாற்றத்தை
உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று யோசித்து தோல்விகளிலிருந்து வெளியே வாருங்கள். தோல்விகளிலிருந்து
பாடம் படித்து வெற்றியைப் பெறுங்கள்.
*****
No comments:
Post a Comment