Friday, 12 December 2025

ஸ்பைடர்மேனின் பிறப்பும் புதிய ரத்த வகையும் இ20 பெட்ரோலும்!

ஸ்பைடர் மேனின் பிறப்பு

சிலந்தி மனிதன் (ஸ்பைடர் மேன்) படக்கதைகளைப் (காமிக்ஸ்) படித்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. படித்து வியந்தவர்கள் திரையில் பார்த்து ரசிக்காமலும் இருக்க முடியாது.

ஸ்பைடர் மேன் காமிக்ஸ் முதன் முதலில் வெளியானது 1962, ஆகஸ்ட் 1 இல் அமேசிங் பேன்டசி என்ற காமிக்ஸ் புத்தகத்தில். கிட்டதட்ட 63 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் பொலிவு குன்றாமல்தான் இருக்கிறார் இந்தச் சிலந்திப் பூச்சி மனிதர்.

*****

புதிய ரத்த வகை

நமக்கு ஏ, பி, ஏபி, ஓ இவற்றில் +, - என சில ரத்த வகைகளைத் தெரியும். இதைத் தாண்டிய புதிய ரத்த வகைகளும் இருக்கின்றன. அண்மையில் கர்நாடகம், கோலாரில் CRIB (Cromer India Bengaluru) என்ற புதிய ரத்த வகை 38 வயது பெண்மணியிடம் கண்டறியப்பட்டுள்ளது. வினைபுரியும் நிலையில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் இவ்வகை ரத்தத்தின் சிறப்பம்சமாகும்.

*****

இ20 பெட்ரோல்

ஒரு சில இரு சக்கர வாகனத்தில் E20 Compliance என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படியென்றால் என்ன?

20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் என்பதுதான் அதன் பொருள்.

எத்தனால் என்பது பெட்ரோலைப் போலக் கிடையாது. குறைவான கார்பனையே உமிழும். மேலும் எத்தனால் வெளியிடும் கார்பன் – டை – ஆக்சைடைத் தாவரங்கள் உள்வாங்கிக் கொள்ளும். இதெல்லாம் பெட்ரோலில் சாத்தியப்படாது.

பெட்ரோலை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். எத்தனாலை நாம் கரும்புச்சாறு, மக்காச்சோளம் மற்றும் வீணாகும் தானியங்களிலிருந்து தயாரித்துக் கொள்ள முடியும். இதனால் இறக்குமதி குறையும், விவசாயமும் பலன் பெறும், பலம் பெறும்.

ஒரு கணக்கின்படி 20 சதவீத எத்தனாலைப் பெட்ரோலோடு கலப்பதால் நமக்கு 1.1 லட்சம் கோடி அந்நிய செலவாணி மிச்சமாகும். இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் முன்பே குறிப்பிட்டது போலச் சுற்றுச்சூழலுக்கும் இணக்கமாக உள்ளது. விவசாயம் செழிக்கவும் வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலையைக் குறைக்கவும் வாய்ப்புள்ளதா? ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்குமா என்பது விடை காண முடியாத கேள்வி.

*****

No comments:

Post a Comment