ஓ.ஆர்.எஸ்ஸிலும் கலப்படம்!
ஓ.ஆர்.எஸ்
என்பது உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் போது வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும்
உப்புச் சர்க்கரைக் கரைசல் ஆகும். இது ஆங்கிலத்தில் ORS (Oral Rehydration
Solution) எனப்படுகிறது.
கடைகளில்
விற்கப்படும் இக்கரைசலை ஒரு லிட்டர் நீரில் கரைக்கும் போது அதில் 13.5 கிராம் சர்க்கரையும்,
2.6 கிராம் சோடியம் குளோரைடும், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடும், 2.9 கிராம் சோடியம்
சிட்ரேட்டும் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் கரைசல் பொட்டலங்கள்
இப்படி இருப்பதில்லை. அவற்றை ஒரு லிட்டர் நீரில் கரைக்கும் போது 120 கிராம் சர்க்கரையும்,
1.17 கிராம் சோடியம் குளோரைடும், 0.79 கிராம் பொட்டாசியம் குளோரைடும், 1.47 கிராம்
சோடியம் சிட்ரேட்டும் இருக்கின்றன. அக்கரைசல்களில் சர்க்கரை மட்டுமே அதிகமாக உள்ளது.
மற்றவை குறைவாக உள்ளன. இதை லாபமீட்ட நினைக்கும் வியாபார நிறுவனங்கள் செய்யும் மருந்து
கலப்படம் என்றே கூறலாம். இக்கரைசல் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் உயிரைக் காப்பாற்றாது.
மாறாக உயிரை எடுத்து விடும் எமனாகவும் மாறி விடும்.
இந்த
எமகாதாத கலப்படத்தை ஹைதாராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ் என்பவர் பத்து
வருடங்களுக்கு மேலாக நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து நிரூபித்துள்ளார். இது போன்ற
கலப்பட கரைசல்கள் ஓ.ஆர்.எஸ் என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படக் கூடாது என்று அவர் நீதிமன்ற
ஆணையையே பெற்றிருந்தாலும் சந்தையில் கலப்படம் செய்பவர்களுக்கா குறைவு?
இது
போன்ற கலப்பட எமன்களிடமிருந்து காத்துக் கொள்ள ஓ.ஆர்.எஸ் கரைசலைச் சுலபமாக நாமே வீட்டில்
தயாரித்துக் கொள்ளலாம். ஒரு லிட்டர் நீரில் 6 டீஸ்பூன் சர்க்கரை, ½ டீஸ்பூன் உப்பையும்
கலந்து நாமே தயாரித்துக் கொள்ளும் கரைசல் சரியான ஓஆர்எஸ் கரைசலாக அமையும். கலப்படமில்லாமலும்
அமையும்.
*****

No comments:
Post a Comment