Friday 20 August 2021

சிலப்பதிகாரம் ‘வரலாறு’ என்பதை உணர்த்திய கோவிந்தராசனார்

சிலப்பதிகாரம் ‘வரலாறு’ என்பதை உணர்த்திய கோவிந்தராசனார்

சிலப்பதிகாரம் என்பது வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர் பேராசிரியர் கோவிந்தராசனார். அவர் தஞ்சாவூர் கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய ஆய்வறிஞர் ஆவார்.

1945 ஆம் ஆண்டு கண்ணகி பயணித்த பாதை வழியாகப் பயணிக்க தொடங்கினார் கோவிந்தராசனார். இதற்காகத் தன் ஈட்டியிருந்த ஊதியம் முழுவதையும் செலவிட்டார். அது போதாமல் அவரது உடமைகள் ஒவ்வொன்றையும் விறறு 17 ஆண்டுகள் நடந்தும் ஆராய்ந்தும் முடிவில் சிலப்பதிகாரம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

1945 ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகில் பண்டைய புகார் நகரம் இருந்ததைக் கண்டு பிடித்தார்.

கடலடி ஆய்வு மற்றும் கடற்கோளைக் கணக்கிட்டு கடலடியில் மறைந்து நிற்கும் நிலப்பரப்பே காவேரிப் பூம்பட்டினமாகிய கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

1945 ஆம் ஆண்டு பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கி கால் நடையாக மதுரை வரை செல்வதற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆயின. அதனைத் தொடர்ந்து மதுரையினின்று கோவலனை இழந்த கண்ணகி சேரநாடு நோக்கிச் சென்ற வழியில் இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நகரத் தொடங்கினார்.

தம் ஆய்வுப் பயணத்தின் நிறைவாக 1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கண்ணகி கோயிலைக் கண்டார். அங்கு செங்குட்டுவன் இமயமலையினின்று கொணர்ந்த கல்வில் சமைத்த கண்ணகி சிலையையும் கண்டறிந்தார்.

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று கண்ணகி சிலையைத் தமிழக அரசிடமும் ஒப்படைத்தார். இவரின் இவ்வரிய சேவையைப் பாராட்டி மத்திய அரசாங்கம் 2012 இல் இவருக்குத் தொல்காப்பியர் விருது வழங்கியது.

தமிழர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஆய்வறிஞர்களில் முக்கியமானவர் பேராசிரியர் கோவிந்தராசனார்.

*****


No comments:

Post a Comment