Wednesday, 3 November 2021

தீபாவளி போனஸ் பிறந்த வரலாறு

தீபாவளி போனஸ் பிறந்த வரலாறு

            ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் நான்கு வாரத்திற்கு ஒரு முறை சம்பளம் வழங்கும் முறை இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. அதாவது தற்போது அலைபேசி நிறுவனங்கள் வைத்திருக்கும் 28 நாட்கள் (4 வார கால அளவு) என்ற கணக்கு இந்த நான்கு வார அளவிலிருந்து பிறந்ததுதான்.

            ஆங்கிலேயர்கள் நான்கு வார கால அளவுக்குச் சம்பள முறை நிர்ணயம் செய்திருந்தாலும் 4 வார கால அளவை ஒரு மாத கால அளவாகக் கொண்டு மாத சம்பள முறையையே வழங்கினர். இதனால் ஓர் ஊழியர் ஓர் ஆண்டிற்கு 12 முறை மட்டுமே சம்பளம் பெறுவார். ஆனால் ஓர் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு ஊதியத்திற்கான 4 வார கால அளவையும் கணக்கில் கொண்டால் ஓர் ஊழியர் 13 முறை சம்பளம் பெற வேண்டும்.

            ஊதிய நிர்ணயத்தை 4 வார கால அளவாக நிர்ணயம் செய்து ஆண்டிற்கு 13 முறை சம்பளம் வழங்காமல் மாத அளவைக் கருத்தில் கொண்டு 12 முறை சம்பளம் வழங்குவதைத் தொழிற்சங்கங்கள் ஆங்கிலேயே அரசுக்குச் சுட்டிக் காட்டின. வழங்கப்படாமல் இருக்கும் எஞ்சிய 13 வது சம்பளத்தை வழங்குமாறு தொழிற்சங்கங்கள் ஆங்கிலேய ஆரசுக்குக் கோரிக்கை விடுத்து பத்து ஆண்டுகள் வரை போராடின.

பத்தாண்டுகள் நீடித்த போராட்டத்தின் விளைவாக ஆங்கிலேய அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த உடன்பாட்டின்படி வழங்கப்படாமல் இருக்கும் 13 வது சம்பளத்தை விழாக்காலமான தீபாவளியின் போது வழங்கினால் அது விழாச் செலவினங்களுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் அதை தீபாவளி போனஸாக வழங்க ஆங்கிலேய அரசாங்கம் ஒப்புக் கொண்டது.

ஒரு வகையில் தீபாவளி போனஸ் என்று கருணை உள்ளத்தோடு வழங்குவதைப் போன்ற சொல்லால் சொல்லப்பட்டாலும் அது ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத் தொகைதான் என்பதை மேற்கண்ட வரலாற்றைப் படிக்கும் போது நாம் அறியலாம். ஆக தீபாவளிபோனஸ் என்பது ஊழியர்களின் உழைப்பிற்கான உரிமைத்தொகைதான் என்பதையும் அது கருணைத் தொகையல்ல என்பதையும் இதனின்று அறியலாம்.

*****

No comments:

Post a Comment