Thursday, 15 December 2022

ணகர, னகர, நகர – பிழைகளைத் திருத்திக் கொள்ள…

ணகர, னகர, நகர – பிழைகளைத் திருத்திக் கொள்ள…

எழுத்துப்பிழைகளைத் திருத்திக் கொள்வதற்காக முகநூலிலும் புலனத்திலும் வந்த பயனுள்ள பதிவுகளில் இதுவும் ஒன்று. பிழையின்றித் தமிழை எழுத விரும்பும் பலருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

‘ண’, ‘ன’ மற்றும் ‘ந’ எங்கெல்லாம் வரும் என்பதற்கான ஓர் எளிய புரிதல்.

‘ண’ வை மூன்று சுழி ‘ண’ எனவும்

‘ன’வை இரண்டு சுழி ‘ன’ எனவும் குறிப்பிடுவர்.

தமிழ் எழுத்து வரிசையில் ணகரம் டகரத்தை அடுத்து வருவதால் டண்ணகரம் என்றும்,

னகரம் றகரத்தை அடுத்து வருவதால் றன்னகரம் என்றும்,

நகரம் தகரத்தை அடுத்து வருவதால் தந்நகரம் என்று குறிப்பிடும் வழக்கும் உண்டு.

இவ்வழக்கிற்கும் ணகரம், னகரம், நகரம் இடம்பெறும் சொல்லமைவுக்கும் இருக்கும் தொடர்பு ணகர, னகரப் பிழைகளைத் தவிர்க்க உதவும்.

சான்றாக,

மண்டபம், கொண்டாட்டம் – எனும் சொற்களில் டகரத்திற்கு முன்பாக ‘ண்’ வருவது கவனிக்கத்தக்கது. ணகரத்தை டண்ணகரம் என்று சொல்வதால் டகரத்திற்கு முன்பாக ‘ண்’ வருவது குறிப்பிடத்தக்கது.

தென்றல், சென்றான் எனும் சொற்களில் றகரத்திற்கு முன்பாக ‘ன்’ வருவது கவனிக்கத்தக்கது. னகரத்தை றன்னகரம் என்று சொல்வதால் றகரத்திற்கு முன்பாக ‘ன்’ வருவது குறிப்பிடத்தக்கது.

சந்தம், தந்தம் எனும் சொற்களில் தகரத்திற்கு முன்பாக ‘ந்’ வருவது கவனிக்கத்தக்கது. நகரத்தைத் தந்நகரம் என்று சொல்வதால் தகரத்திற்கு முன்பாக ‘ந்’ வருவது குறிப்பிடத்தக்கது.

ஆகவே எழுதும் போது ‘மண்டபமா’, ‘மன்டபமா’ என ஐயம் எழுந்தால் டகரத்திற்கு முன்பாக ‘ண்’ என்பதுதான் வரும் எனத் தெளிந்து ‘மண்டபம்’ என எழுதுவதே சரியானது என அறியலாம்.

அவ்வாறே ‘இன்றா’, ‘இண்றா’ என எழுதும் போது ஐயம் எழுந்தால் றகரத்திற்கு முன்பாக ‘ன்’ என்பதுதான் வரும் எனத் தெளிந்து ‘இன்று’ என எழுதுவதே சரியானது என அறியலாம்.

அவ்வாறே ‘பந்தா’, ‘பன்தா’ என எழுதும் போது ஐயம் எழுந்தால் தகரத்திற்கு முன்பாக ‘ந்’ என்பதுதான் வரும் எனத் தெளிந்து பந்து என எழுதுவதே சரியானது என அறியலாம்.

இப்பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்பயனுள்ள பதிவை மற்றவர்களும் பயன்பெற பகிரலாம் அல்லவா!

*****

No comments:

Post a Comment