Sunday 28 April 2024

உணர்வுள்ள குழந்தை வளர்ப்பு

உணர்வுள்ள குழந்தை வளர்ப்பு

அமெரிக்காவின் புரூஸ் லிப்டன் என்பவர் ‘உணர்வுள்ள குழந்தை வளர்ப்பு’ குறித்துக் கூறுகிறார்.

ஏழு வயதிற்குள் குழந்தையின் ஆழ் மனதில் எவையெல்லாம் பதிகிறதோ அவையெல்லாம் அக்குழந்தையின் வாழ்வு முழுமையையும் தீர்மானிக்கிறது என்கிறார்.

ஏழு வயதிற்குள் ஒரு குழந்தை நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் வளர்க்கப்பட்டால், அக்குழந்தையின் வாழ்வு முழுமையையும் அந்நேர்மறைத் தன்மையும் நம்பிக்கை உணர்வும் தீர்மானிக்கின்றன.

அதே குழந்தை ஏழு வயதிற்குள் எதிர்மறையாகவும், அவநம்பிக்கையுடன் வளர்க்கப்பட்டால் அக்குழந்தையின் வாழ்வு முழுமையையும் அவ்வெதிர்மறைத் தன்மையும் அவநம்பிக்கை உணர்வுகளும்தான் தீர்மானிக்கின்றன.

ஒரு குழந்தையின் 95 சதவீத நடத்தையானது அக்குழந்தையின் ஏழு வயதுக்குள் உருவாகும் ஆழ்மனதால் தீர்மானிக்கப்படுகிறது.

நாற்பது வயதில் திடீரெனக் குற்றமிழைக்கும் ஒருவரின் குற்றப் பின்னணியில் ஏழு வயதிற்குள் உருவான ஆழ்மனம் ஒரு காரணமாக இருக்கிறது.

இதன் காரணமாகவே புரூஸ் லிப்டன் ‘உணர்வுள்ள குழந்தை வளர்ப்பு’ குறித்து வலியுறுத்துகிறார்.

குழந்தைகள் நேர்மறையாக வளர்க்கப்பட்டால் அவர்களின் ஆழ்மனமானது நேர்மறைத் தன்மை மிகுந்ததாக இருக்கிறது. எதிர்மறை உணர்வுகளுடன் வளர்க்கப்பட்டால் அவர்களது ஆழ்மனமானது எதிர்மறைத் தன்மை மிகுந்ததாக இருக்கிறது.

குழந்தை நம்பிக்கை தரும் உணர்வுகளுடன் வளர்க்கப்பட்டால் அக்குழந்தையின் ஆழ்மனம் நம்பிக்கை தரும் உணர்வுகளால் நிரம்புகிறது. அவநம்பிக்கை தரும் உணர்வுகளுடன் வளர்க்கப்பட்டால் அக்குழந்தையின் ஆழ்மனமானது அவநம்பிக்கை நிறைந்ததாக இருக்கிறது.

நேர்மறையாகவும் நம்பிக்கை தரும் வகையிலும் ஆக்கப்பூர்வமாகவும் குழந்தைகளை வளர்ப்பது, அதுவும் குறிப்பாக குறைந்தபட்சம் ஏழு வயது வரையிலேனும் வளர்ப்பது அவர்களது ஆரோக்கியமான ஆழ்மனம் உருவாவதற்கு அடிப்படை என லிப்டன் குறிப்பிடுகிறார். குழந்தைகள் அப்படி வளர்க்கப்பட்டால் அறிவுள்ள, பண்புள்ள, ஆரோக்கியமான குடிமக்களாக வளர்வர்.

லிப்டன் கூறுவதுடன்,

“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே!

பின் நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே!”

என்ற ‘நீதிக்குத் தலைவணங்கு’ என்ற திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம் பெற்றுள்ள புலவர் புலமைப்பித்தனின் திரைப்பாடல் வரிகளும் பொருந்திப் போகின்றது அல்லவா!

ஆகவே பெற்றோர்களும் மற்றோர்களும் உணர்வுள்ள குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தினால் வருங்காலத் தலைமுறையை அருமையாகவும் பெருமையாகவும் உருவாக்க முடியும்.

*****

No comments:

Post a Comment