Wednesday, 1 May 2024

குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள், ஒரு பயிரை வளர்ப்பதைப் போல, ஒரு மரத்தை வளர்ப்பதைப் போல.

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் அக்கறையைக் குறை சொல்ல முடியாது. குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வையும் குறைத்து மதிப்பிட விட முடியாது. இவை ஒரு குழந்தை வளர்ப்பில் எந்த எல்லை வரை இருக்கலாம் என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.

குழந்தைகளுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அடிப்படையில் அவர்களுக்கென்றும் உரிமைகள் இருக்கின்றன.

குழந்தைகள் இயற்கையான முறையில் வளர வேண்டும். அந்த இயற்கையான வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் பெற்றோர்களின் வளர்ப்பு முறை அமைய வேண்டும்.

இந்தியக் குடும்பங்களில் குழந்தை வளர்ப்புக்கென்று சில வரையறுக்கப்பட்ட அமைப்பு முறைகள் இருக்கின்றன. பொதுவான அமைப்பு முறை என்னவென்றால், குழந்தை நன்றாகப் படித்து ஓர் அரசாங்க வேலைக்குச் சென்று விட வேண்டும். அல்லது கைநிறைய சம்பளம் தரும் வேலைக்குச் சென்று விட வேண்டும். அல்லது வெளிநாட்டு வேலைக்குச் சென்று விட வேண்டும். அல்லது குடும்ப வணிகத்தை, தொழிலை விருத்தி செய்ய வேண்டும்.

ஓர் ஏழைக் குடும்பத்தின் வரையறுக்கப்பட்ட குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோர்களுக்குத் தான் பட்ட கஷ்டத்தைத் தன் பிள்ளைகள் படாத அளவுக்கு அவர்கள் படித்து ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது.

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் வரையறுக்கப்பட்ட குடும்ப வளர்ப்பு முறையில் பிள்ளைகள் படித்து பொறியாளராகவோ, மருத்துவராக ஆக வேண்டும் என்பதாக இருக்கிறது.

ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிள்ளைகள் சொத்துகளை அல்லது வணிகத்தை அல்லது தொழிலைப் பராமரித்துப் பெருக்குபவராக இருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.

அதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டைக் கட்டி, பிள்ளைகளைப் பெற்று அந்தப் பிள்ளைகளை மீண்டும் வரையறுக்கப்பட்ட குடும்ப வளர்ப்பு முறையில் வளர்த்துச் சமூகத்தில் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதாக இருக்கிறது.

அதாவது, பொதுவாகக் குழந்தைகள் நன்றாகப் படித்துப் பணமீட்டும் ஒரு வேலைக்கோ அல்லது பணமீட்டும் ஒரு தொழிலைத் தொடங்கியோ சொத்து சுகங்களைப் பெருக்கி வம்சத்தை விருத்தி செய்து அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்பதாக இருக்கிறது. இதை மையப்படுத்தியே குழந்தைகள் இந்தியச் சமூகத்தில் வளர்க்கப்படுகிறார்கள். அப்படி வளர்க்கப்படுவதே சரியான குழந்தை வளர்ப்பாகக் கருதும் ஒரு பொதுபுத்தியும் சமூகத்தில் இருக்கிறது.

பணமீட்டும் ஒரு வேலை அல்லது தொழில் என்பது பெற்றோர்களுக்குப் பெற்றோர் மாறுபடலாம். ஆனால் ‘பணமீட்டும் வேலை அல்லது தொழில்’ என்ற மையம் மாறாதது.

இப்போது நாம் இந்த முடிவுகளை வைத்து இந்த மையத்தின் மூன்று முக்கியமான தரவுகளைப் பெறலாம்.

இந்த மையத்தின் முதன்மையான இடத்தைப் பிடிப்பது அரசாங்க வேலை. இரண்டாமிடத்தைப் பிடிப்பது மருத்துவராக்கும் அல்லது பொறியாளராக்கும் கனவு. இந்த மையத்தின் இன்னொரு அச்சு என்னவென்றால் வணிகம் அல்லது தொழில் குடும்பம் என்றால் பரம்பரை பரம்பரையாக அதைத் தொடர்வது.

இந்த மையத்தில் என்ன தவறு இருக்கிறது? ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்றால், இந்த மையமானது குழந்தை வளர்ப்பில் பிசகுகளை உருவாக்கி விட வாய்ப்புள்ளது. அது எப்படியென்றால்,

பணமீட்டும் வேலை அல்லது தொழில் என்ற பெற்றோர்களின் குவிமையமானது குழந்தைகளின் பரந்துபட்ட பல்வேறு ஆர்வங்களைத் தடை செய்யும் விதமாக அமைந்து விடுகிறது.

ஒரு குழந்தையின் இயற்கையான ஆர்வம் எந்தத் திசையில் செல்லும் என்பதை அவ்வளவு எளிதாகக் கண்டறிந்து விட முடியாது. எதார்த்தம் எப்படி இருக்கிறது என்றால், பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு ஆர்வமானது குழந்தைகளைப் பணமீட்டும் வேலையை நோக்கிய கல்வியாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. குழந்தைகளின் ஆர்வம் அந்தத் திசையில் செல்லவில்லை என்றால் அந்தத் திசையை நோக்கி உந்தித் தள்ளும் வகையில் பெற்றோர்கள் தங்கள் கவலைகளையும் அக்கறைகளையும் அடுத்தடுத்து வெளிப்படுத்த தொடங்குவதாக இருக்கிறது. கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களின் இந்தக் கவலைகளையும் அக்கறைகளையும் உள்வாங்கிக் கொண்டு அதைச் சந்தைப்படுத்தும் நோக்கில் அமைகின்றது.

இந்த இடத்தில் குழந்தைகளைப் பெற்றோர்கள் எப்படி அணுக வேண்டும், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் எவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு ஆதர்சமாகக் கலீல் ஜிப்ரானின் பின்வரும் வரிகள் வழிகாட்டுகின்றன.

“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளல்ல.

அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு உங்கள் அன்பைத் தாருங்கள், உங்கள் எண்ணங்களையல்ல.

அம்பை எது எய்துகிறதோ அதுதான் தீர்மானிக்கும்.

நீங்கள் வெறும் வில்.”

அது சரி! அம்பை எய்துவது எது?

யோசித்துப் பாருங்கள்.

அம்பை எய்துவது இயற்கை.

இங்கே அம்பு என்பது குழந்தைகளின் ஆர்வம்.

அந்த ஆர்வம் எது என்பதை இயற்கையே தீர்மானிக்கிறது. குழந்தைகளின் இயற்கையான ஆர்வத்திற்கு வழிவிட்டு, அதை மதித்து குழந்தைகளைச் சுதந்திரத்தோடு அணுகுவது முக்கியமானது.

இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.

தொடர்ந்து விவாதிப்போம்.

*****

No comments:

Post a Comment