Saturday 25 May 2024

பரபரப்பைக் கிளப்பும் ‘தி க்ருக்டு டிம்பர் ஆப் நியூ இந்தியா’

இப்போதைய பரபரப்பான புத்தகம் என்றால் அது ‘தி க்ருக்டு டிம்பர் ஆப் நியூ இந்தியா’ என்ற புத்தகம்தான். இதை எழுதியவர் பரகலா பிரபாகர்.

யார் இந்த பரகலா பிரபாகர்? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர்தான் பரகலா பிரபாகர்.

இந்தப் புத்தகம் பரபரப்பைக் கிளப்ப காரணம் என்ன? அரசின் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளை மிகக் காரசாரமாக அந்த நூலில் விமர்சித்திருக்கிறார் பரகலா பிரபாகர். அதுவும் நிதியமைச்சரின் கணவர் என்றால் பரபரப்பு இருக்காதா என்ன?

அப்படி என்னதான் அந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் பரகலா பிரபாகர்? அதற்கு நீங்கள் முழு புத்தகத்தையும் படிக்க வேண்டும். சான்றுக்குச் சிலவற்றை மட்டும் காண்போமா?

நாட்டில் ஒரு சதவீதம் பேர் 25 சதவித வருமானத்தை எடுத்துக் கொள்கின்றனர், அத்துடன் 40 சதவீத சொத்துகளைத் தங்களிடம் வைத்திருக்கின்றனர் என்கிறார் பரகலா பிரபாகர்.

25 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு விட்டால் ஏன் இன்னும் இலவச ரேஷன் அரிசியை விநியோகிக்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பி ஆட்சியாளர்கள் வறுமைக்காக நிர்ணயித்திருக்கும் அளவுகோலே தவறானது என்று அடித்துச் சொல்கிறார்.

பொருளாதாரத்தில் நாம் இங்கிலாந்தை விட முன்னேறி விட்டோம் என்றால் நாம் வளர்ந்த நாடுதானே. ஆனால் நாம் ஏன் இன்னும் வளரும் நாடாகவே இருக்கிறோம்? என்று அவர் எழுப்பும் கேள்வியும் முக்கியமானது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கும் டபுள் இன்ஜின் சர்க்கார் என்ற கருத்தாக்கத்தை ஆட்சியாளர்கள் முன் வைக்கின்றனர் என்றும், அப்போதுதான் மாநில அரசுக்கு நிதி கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கின்றனர் என்றும் விமர்சிக்கிறார்.

பரகலா பிரபாகர் இப்படிச் சொல்கிறாரே! அப்படியானால் நாட்டில் நல்ல பல விசயங்களே இல்லையா? அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டாமா? என்ற கேள்விக்கு, இதயம் பலகீனமாக இருக்கும் போது உடலில் உள்ள மற்ற உறுப்புகள் பலமாக இருந்து என்ன பயன்? என்று எதிர்கேள்வி கேட்கிறார் பரகலா பிரபாகர்.

வாய்ப்பு கிடைத்தால் இந்த நூலைப் படித்துப் பாருங்கள்.

மனைவி நிதியமைச்சர் என்றாலும் அதற்காக எந்த வித சமரசமும் இன்றி தற்போதைய இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் நிதி நிர்வாகம் பற்றிய நூலை எழுதியிருக்கும் பரகலா பிரபாகர் பாரட்டிற்கு உரியவர்தானே.

No comments:

Post a Comment