Thursday 16 May 2024

எப்படி நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது?

எப்படி நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது?

மறந்து போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதற்குப் பல வழிமுறைகள் இருக்கின்றன. அதற்கான வழிமுறைகளை ஒவ்வொன்றாகக் காண்போமா?

1. பதிய வைக்க வேண்டியதைப் படமாக்குங்கள் :

படிப்பதை நினைவில் வைத்துக் கொள்ள, அதை படமாக்கி மனக்கண்ணில் திரைப்படத்தைப் போல ஓட விட்டுப் பாருங்கள். படங்களாகப் பதிபவை மனதை விட்டு அகலுவதில்லை. இதற்கு ஒரு சிறந்த பயிற்சியாக உங்கள் எதிரே உள்ள பத்து பொருட்களைப் பாருங்கள். இப்போது கண்ணை மூடிக் கொண்டு அந்தப் பத்து பொருட்களையும் மனக்கண்ணில் நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள்.

உங்களால் எத்தனை பொருட்களை நினைவில் கொண்டு வர முடிகிறது?

பத்துப் பொருட்களையும் கொண்டு வர முடிந்தால் அடுத்த இந்த எண்ணிக்கையை 15, 20 என உயர்த்திக் கொண்டு செய்து பாருங்கள். வகுப்பறையில் ஆசிரியர் மேசையின் மீது சில பொருட்களை வைத்துப் பார்க்கச் செய்து விட்டு, பின்பு அவற்றைத் துணியால் மூடி விட்டு, மேசையில் நீங்கள் பார்த்த பொருட்களைக் கூறச் செய்யும் நினைவாற்றல் பயிற்சிகளை நீங்கள் செய்திருப்பீர்கள் அல்லவா! அது போன்ற பயிற்சிதான் இது.

2. செய்வதை எழுதிப் பழகுதல் :

அன்றாடம் செய்ததை எழுதிப் பழகுங்கள். இது நினைவாற்றலை வளர்ப்பதற்கு நல்லதொரு வழிமுறையாகும். இது நாட்குறிப்பு எழுதுவது போன்றதுதான். நாம் அன்றாடம் என்ன செய்கிறோம் என்பது குறித்த ஒரு கவனக் குவிப்பு இதனால் ஏற்படும். இது நினைவாற்றலை வளர்ப்பதற்குப் பெரிதும் உதவும்.

3. விளையாடுங்கள் :

கட்டாயம் ஒரு விளையாட்டை தினந்தோறும் அரை மணி நேரம் விளையாடுங்கள். இது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைக்கும். விளையாடும் போது விதிகளுக்கு உட்பட்டு கவனத்தை ஒருங்கிணைக்கும் திறன் உங்களை அறியாமல் அனிச்சையாக நடைபெறும். இது ஒரு செயலைக் கவனித்துச் செய்யும் திறனை உங்களிடம் வளர்க்கும். கவனமோடு ஒரு செயலைச் செய்யும் திறன் உங்களுக்கு வந்து விட்டாலே, உங்கள் நினைவாற்றல் தானாக அதிகரிக்கத் தொடங்கி விடும்.

4. மனதை அமைதிப்படுத்துங்கள் :

நினைவாற்றலுக்கும் மன அமைதிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன அமைதியை வளர்க்கும் தியானம் இந்த வகையில் நினைவாற்றல் பெருக உதவும். தினந்தோறும் ஐந்து நிமிடமாவது தியானம் செய்யுங்கள்.

5. புதியன கற்றுக் கொள்ள விழையுங்கள் :

ஏதேனும் ஒரு புதிய திறனை எப்போதும் கற்றுக் கொண்டே இருங்கள். இதனால் மூளை நரம்புகள் உற்சாகமாக இருக்கும். உதாரணமாக ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வது, புதுப்புது இசைக் கருவிகளை இசைக்கக் கற்றுக் கொள்வது, ஓவியம் கற்றுக் கொள்வது, நடனமாட கற்றுக் கொள்வது,… என்று இப்படி எதையாவது புதியதாகக் கற்றுக் கொண்டே இருங்கள்.

6. கண்ணை மூடி நடந்ததை அசை போடுங்கள் :

எந்த ஒரு செயலைச் செய்ததும் பரபரப்பாக அடுத்த செயலை நோக்கி ஓடிக் கொண்டு இருக்காதீர்கள். ஒரு செயல் முடிந்ததும் கண்ணை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் அமருங்கள். அந்தச் செயலை அப்படியே நினைவுபடுத்திப் பாருங்கள். மனதில் செய்த அந்தச் செயல் குறித்து அசை போடுங்கள்.

7. செயல்பாட்டுக்குக் கொண்டு வாருங்கள் :

நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கற்றால் அதைச் செயல்படுத்திப் பாருங்கள். அப்போதுதான் அது மறக்காது. உதாரணமாக ஒரு பாடலைக் கற்றால், அதைச் சொல்லிப் பாருங்கள் அல்லது பாடிப் பாருங்கள். ஒரு கணித சமன்பாட்டைக் கற்றால் அதை எழுதிப் பாருங்கள் அல்லது அதை தேவைபடுவோருக்குக் கற்றுக் கொடுங்கள். ஏனென்றால் கற்றதை உபயோகப்படுத்திப் பார்க்கும் போதுதான் அது நினைவில் தங்குகிறது.

இந்த ஏழு உத்திகளும் உங்கள் நினைவாற்றலை இயல்பாக வளர்க்க உதவும். அபாரமான நினைவாற்றல் என்பது சாகசமோ அல்லது சாதிக்க முடியாத ஒன்றோ அல்ல. நினைவாற்றலுக்கான உத்திகளைப் பின்பற்றினால், நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு உங்கள் நினைவாற்றல் அபாரமாக வளர்ச்சியடைவதைக் காண்பீர்கள். ஆகவே நினைவாற்றலுக்கான இந்த உத்திகளைப் பயன்படுத்தி உங்களது நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

*****

No comments:

Post a Comment