Saturday 25 May 2024

அதிக நேர அலைபேசி பயன்பாடு ஏற்படுத்தும் அபாயங்கள்!

அதிக நேர அலைபேசி (செல்போன்) பயன்பாடு உடல் ரீதியாக, மன ரீதியாகப் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கல்வியிலும் கவனச்சிதறல் அதிகமாக ஏற்படுவதற்கு அதிக நேர அலைபேசி பயன்பாடு காரணமாக இருக்கிறது.

நீண்ட நேரம் அலைபேசியில் நேரத்தைக் கழிக்கும் குழந்தைகளின் உறக்கம் கெடுகிறது. உறக்க நேரம் குறைவது பலவித உடல் உபாதைகளை உருவாக்குகிறது.

அரை மணி நேரம் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்றாலும் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுகிறது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பல நாடுகளிலும் அதிக நேர அலைபேசி பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2018 ஆம் ஆண்டில் பிரான்சில் பள்ளிகளில் அலைபேசி பயன்படுத்த தடை விதித்து விட்டார்கள்.

நெதார்லாந்தில் 2024 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிகளுக்கு மாணவர்கள் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) எடுத்துச் செல்ல தடை விதித்திருக்கிறார்கள். பின்லாந்திலும் இதே போன்ற சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள்.

அலைபேசியைப் பிடுங்கி வைத்துக் கொண்ட அம்மாவைக் கத்தியைக் காட்டி மிரட்டிய மகள், அலைபேசியைக் கொடுக்கா விட்டால் வீட்டை விட்டு ஓடி விடுவதாக உணர்ச்சிபூர்வமாக பயமுறுத்திய மகன், அலைபேசியில் அதிகம் பேசக் கூடாது என்று கண்டித்தற்காக அண்ணனைக் கொலை செய்த தங்கை என்று நிறைய செய்திகளைக் கேள்விபடும் போது அதிக நேர அலைபேசி பயன்பாடு உருவாக்கும் அபாயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வளரிளம் பருவத்தில் இருப்போர் அதிகமாக அலைபேசியைப் பயன்படுத்துவதால் மனச் சிதைவுக்கு ஆளாகிறார்கள்.

இணைய வழி மிரட்டல் (சைபர் புல்லிங்), இணைய வழி அச்சுறுத்தல் (சைபர் ஸ்டாக்கிங்) போன்ற பிரச்சனைகளையும் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள்.

அதிக நேரம் அலைபேசியில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகள் வாழ்வியல் திறன்களில் பின்தங்கி விடுகிறார்கள். அவர்கள் படைப்பாற்றல், பிறர் கோணத்திலிருந்து பார்த்துப் புரிந்து கொள்ளுதல், மன இறுக்கத்தைச் சரியாக நிர்வகித்தல், பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல், சக மனிதர்களோடு நல்லுறவு, தகவல் தொடர்பு திறன், தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் திறன் போன்றவற்றில் பின்தங்கி விடுகிறார்கள்.

நம் நாட்டிலும் அதிக நேர அலைபேசி பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகள் குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பாக நாமே விழிப்புணர்வாகத் தேவையான கட்டுபாடுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்தானே. அதுவும் குறிப்பாகக் குழந்தைகள் அதிக நேரம் அலைபேசிப் பயன்படுத்துவதை அளவாக்கிக் கொள்வதற்கான நடைமுறைகளை உருவாக்கிப் பின்பற்றலாம்தானே!

No comments:

Post a Comment