Thursday 23 May 2024

ஏன் குரல் கொடுக்க வேண்டும் தெரியுமா?

நம்முடைய நலனுக்காகவும், நம்மைச் சுற்றி இருப்பவர்களின் நலனுக்காகவும் குரல் கொடுத்தே ஆக வேண்டும்.

நீங்களே உங்களுக்கு அநீதி நடக்கும் போது உங்களுக்காகச் சண்டை போடா விட்டால் வேறு யார் உங்களுக்காகச் சண்டை போடுவார்கள்? குரல் கொடுப்பதும் அப்படித்தான்.

உங்கள் அநீதிக்காக நீங்கள் சண்டை போடா விட்டாலும் குரல் கொடுக்காவது செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நடக்கும் அநீதி வெளியில் தெரியும். உங்களுக்கு நடக்கும் அநீதி வெளியே தெரிந்தால்தான் அதற்கு நியாயம் கிடைக்க ஒரு வழி வெளியிலிருந்து கிடைக்கும்.

குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் மௌனமாக இருக்க பழகி விட்டால் நமக்கென்று ஓர் அடையாளம் இல்லாமல் போகும். அதுவே பழக்கமாகவும் ஆகிப் போகும். உங்களுக்கு எதிராக உங்களுக்கு வன்கொடுமையும் அநீதியும் புரிபவர்களுக்கு அதுவே ஒரு வாய்ப்பாகவும் ஆகிப் போகும்.

நாள்பட இதே நிலை தொடரும் போது எதையும் எதிர்த்துப் பேசுவது என்பதே மிகவும் அசௌகரியமான நிலையாகி விடும்.

குரல் கொடுப்பது என்பது மிகவும் கடினமான காரியம் என்றும் மனதில் தோன்ற ஆரம்பித்து விடும்.

நம் நலம் மற்றும் பாதுகாப்புக் கருதி மௌனமே நம் பாதையாய் மாறி விடும்.

அவசியமானவற்றிற்காகவும், நமது நலத்திற்காகவும் குரல் கொடுத்து நாம் பழகியே ஆக வேண்டும்.

குரல் கொடுங்கள். உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

*****


No comments:

Post a Comment