Monday, 13 May 2024

ஐ.ஐ.எம். பற்றித் தெரிந்து கொள்வோமா?

ஐ.ஐ.எம். பற்றித் தெரிந்து கொள்வோமா?

ஐ.ஐ.எம். (IIM) என்பது Indian Institute of Management என்பதன் சுருக்கமாகும். ஐ.ஐ.எம். இந்தியாவில் மேலாண்மைக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆகும். எம்.பி.ஏ. படிப்பதற்கான தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக ஐ.ஐ.எம்கள் கருதப்படுகின்றன.

இந்தியாவில் 21 இடங்களில் ஐ.ஐ.எம்கள் உள்ளன. அதில் முதன்மையானது அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். இது 1961 இல் டாக்டர் விக்ரம் சாராபாயால் துவங்கப்பட்டது. இதுவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆகும். அமெரிக்காவின் ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் மற்றும் போர்ட் பவுன்டேஷன் பங்களிப்பால் உருவான நிறுவனம் இது.

அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். கட்டுமானத்தை அமைத்தவர் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டிசைன் நிறுவனத்தைச் சேர்ந்த லூயிஸ்கான்.

ஐ.ஐ.எம்., அகமதாபாத்தில் படித்தவர்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 34 லட்சமும், அதிகபட்சமாக 1.46 கோடியும் சம்பளமாகக் கிடைக்கிறது. ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் படித்த பலர் இவ்வளவு வருமானம் தரும் வேலையையும் உதறி விட்டு சொந்தத் தொழில் தொடங்க போய் விடுகிறார்கள். அந்த அளவுக்கு தன்னம்பிக்கையைத் தரும் விதத்தில் ஐ.ஐ.எம்., அகமதாபாத்தில் படிக்கும் மேலாண்மைப் படிப்பு அமைகிறது.

ஐ.ஐ.எம்மில் சேர்வதற்கு CAT எனப்படும் Common Admission Test எழுத வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை அல்லது ஆகஸ்டில் வெளியாகும். இத்தேர்வு 120 நிமிடங்கள் நடக்கும். 66 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தவிர பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண் 10, ப்ளஸ்டூ மதிப்பெண்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண் 10, இளநிலை பட்டபடிப்பு மதிப்பெண்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண் 10, 3 ஆண்டு பணி அனுபவத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 5 ஆக 35 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்களாக வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பில் 90 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் முழு வெயிட்டேஜ் மதிப்பெண்ணான 10 மதிப்பெண்களையும் பெறலாம். அதே போல பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல், வணிகவியல் பிரிவு என்றால் 90 சதவீத மதிப்பெண்களும், கலைப்பிரிவு என்றால் 85 சதவீத மதிப்பெண்களும் பெற்றால் முழு வெயிட்டேஜ் மதிப்பெண்ணான 10 மதிப்பெண்களையும் பெறலாம். இளநிலைப் படிப்பில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் முழு வெயிட்டேஜ் மதிப்பெண்ணான 10 மதிப்பெண்களைப் பெறலாம். இச்சதவீதங்களுக்குக் குறைந்தால் அதற்கேற்ப குறைந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இத்தேர்வை ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாடு முழுவதும் இத்தேர்வுக்காக 150 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம்களில் படிப்பதற்காக உள்ள மொத்த இடங்கள் 5500.

இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனங்களாகக் கருதப்படும் ஐ.ஐ.எம்களில், மதிப்பு வாய்ந்த படிப்பாகக் கருதப்படும் எம்.பி.ஏ. படிப்பைப் படிக்க இப்போதிலிருந்தே CAT நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி விட்டீர்கள்தானே?

*****

No comments:

Post a Comment