இப்போதே ஏன் தங்கத்தை வாங்க வேண்டும் என்று தெரியுமா?
ஏன்
தங்கத்தை வாங்க வேண்டும் என்ற காரணம் உங்களுக்குத் தெரியுமலா இருக்கும்? உண்மையான பணம்
என்பது தங்கம்தான். தங்க மதிப்பிற்கு ஈடாகத்தான் பணம் அச்சடிக்கப்படுகிறது. ஒரு சில
நாடுகளில் டாலர் கையிருப்புக்கு ஈடாகப் பணம் அச்சடிக்கப்பட்டாலும், டாலரின் மதிப்பு
சரியும் போதெல்லாம் தங்கத்தின் மதிப்பு ஏறும். இதுதான் தங்கத்தை வாங்க வேண்டியிருப்பதற்கான
முதன்மையான காரணம்.
இப்போது ஏன் தங்கத்தை வாங்க வேண்டிய
அவசியம் ஏற்பட்டிருக்கிறது தெரியுமா?
உலகெங்கிலும்
உள்ள மத்திய வங்கிகள் (சென்ட்ரல் பேங்குகள்) தங்கத்தை வாங்குவதில் தற்போது முனைப்பு
காட்டி வருகின்றன. இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியும் தங்கத்தை வாங்கிக்
குவித்துக் கொண்டிருக்கிறது.
மத்திய வங்கிகள் ஏன் தங்கத்தை வாங்க
வேண்டும்?
டாலர்
மதிப்பில் காணப்படும் நிலையற்ற தன்மை, கச்சா எண்ணெய் விலையில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள்,
பொருளாதார மந்த நிலை குறித்த அச்சம் ஆகியன நிலையான ஒரு பொருளாதார மதிப்பின் மீது மத்திய
வங்கிகளின் முதலீட்டுக் கையிருப்பைக் குவிக்க வைக்கின்றன. நிலையான பொருளாதார மதிப்பு
உள்ளதாக எப்போதும் கருதப்படுவது தங்கம்தானே. இதனால்தான் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்
தங்கம் வாங்குவதில் போட்டிப் போட்டுக் கொண்டு, வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கின்றன.
கடந்த
பத்தாண்டுகள் வரை தங்கம் வாங்குவதைத் தவிர்த்து வந்த உலக நாடுகளின் மத்திய வங்கிகள்
2022 இல் 1082 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ என்பது உங்களுக்குத்
தெரியும்தானே. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 2022 இல் வாங்கிய தங்கமானது, அதற்கு முந்தைய
ஆண்டை விட 100 சதவீதம் அதிகம் என்பதிலிருந்தே தங்கம் எந்த அளவுக்கு வாங்கப்பட்டிருக்கிறது
என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
சீனாவின்
மத்திய வங்கியான பீப்புள்ஸ் பேங்க் ஆப் சைனா 2022 இல் 62 டன் அளவுக்கும், 2023 இல்
225 டன் அளவுக்கும் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறது. 2024 இல் தற்போது வரை 27
டன் வரை தங்கத்தை வாங்கியுள்ளது.
இந்தியாவின்
மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 2022 இல் 34 டன்னும், 2023 இல் 16 டன்னும்,
2024 இல் தற்போது வரை 19 டன்னும் தங்கத்தை வாங்கியுள்ளது.
ஆகவே
உலக நாடுகள் ஒவ்வொன்றின் மத்திய வங்கிகளே தங்கத்தை வாங்கிக் குவிக்கும் போது பொதுமக்களாகிய
நீங்களும் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வதில் தவறு ஏதுமில்லை.
அப்படி
வாங்கும் போது உங்களிடம் நகையாக இருக்கும் தங்கம் அதாவது பிசிக்கல் கோல்ட் 50 பவுன்
வரை இருக்கலாம். அதற்கு மேலான தங்கத்தை தங்கப் பத்திரங்களாகவோ, மின்னணு தங்கமாகவோ
(டிஜிட்டல் கோல்ட்), இ.டி.எப். ஆகவோ வாங்கி வைத்துக் கொள்வதுதான் நல்லது. ஏனென்றால்
அதில்தான் செய்கூலி, சேதாரம் இல்லை. திருடு போகுமோ, காணாமல் போகுமோ என்ற அச்சமும் இல்லை.
அப்படி வாங்கும் தங்கத்தால் பணமானது முடக்கமில்லாமல் பொருளாதார சுழற்சிக்கும் உதவுவதாக
இருக்கும்.
என்ன
நீங்கள் இப்போது தங்கம் வாங்க தயார்தானே? தற்போது உங்களது தங்க கையிருப்பைப் பொருத்து,
நீங்கள் எந்த வடிவில் தங்கம் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு, இப்போதே
தங்கம் வாங்க புறப்படுங்கள்!
*****
No comments:
Post a Comment