Friday, 24 May 2024

ஏன் மௌனம் காக்கிறோம்?

சரியாகக் குரல் கொடுக்க வேண்டிய நேரங்களிலும் நாம் மௌனம் காத்து விடுகிறோம். இது ஏன் தெரியுமா?

சண்டை சச்சரவில்லா அமைதியை விரும்பி மௌனம் காக்கிறோம்.

எதிராளி எந்த அளவுக்குத் திருப்பி அடிப்பார் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதாக நினைத்து மௌனம் காத்து விடுகிறோம்.

நம்முடைய வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று நினைப்பினாலும் மௌனம் காக்கிறோம்.

இதைச் சொன்னால் நம்மை மிகவும் சின்னத்தனமாக நடந்து கொள்வதாக நினைப்பார்களோ என்று எண்ணிக் கொண்டும் மௌனம் காக்கிறோம்.

ஒரு குழுவாக இயங்கும் போது இதைச் சொல்வதால் நம்மை ஒரு நல்ல குழு உறுப்பினர் இல்லை என்று நினைத்து விடுவார்களோ என்று யோசித்தும் மௌனம் காக்கிறோம்.

இதைப் போய் சொல்லி என்னவாகப் போகிறது என்ற எண்ணத்தாலும் மௌனம் காக்கிறோம்.

அப்படிச் சொல்வது நம்மைச் சோர்வடையச் செய்யும் என்ற எண்ணத்தாலும் மௌனம் காக்கிறோம்.

அது நம்மை இழிவாகக் காட்டி விடுமோ என்று நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட மனோநிலையாலும் மௌனம் காக்கிறோம்.

இப்படி மௌனம் காத்தலால் என்ன நேரிடும் என்கிறீர்களா?

உங்களது உரிமையை நிலைநாட்ட முடியாமல் போகலாம்.

அதிக வேலையைச் சுமக்க நேரிடலாம்.

வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையே சமநிலை இல்லாமல் போய் விடும் நிலை ஏற்படலாம்.

அறமற்றதை ஏற்க நேரிடலாம்.

குற்றங்களுக்கு உடந்தையாக வேண்டிய நிலை ஏற்படலாம்.

குற்ற உணர்ச்சியால் அவதிப்பட நேரிடலாம்.

மனப்புழுக்கத்தால் நொந்து போகும் நிலைக்கு ஆளாகலாம்.

ஆகவே உங்கள் எண்ணத்தை, உங்கள் உணர்வை அமைதியான குரலில் எப்போதும் வெளிப்படுத்துங்கள். அப்படி வெளிப்படுத்தப் பழகுங்கள்.

அப்படியானால் மௌனம் காக்க வேண்டிய சூழ்நிலைகள் இல்லையா என்றால் இருக்கிறது. அது எப்போது?

எப்போது மௌனம் காக்கலாம்?

மௌனமாய் இருப்பது என்பது பிழைத்து வாழ்வதற்கான ஒரு நுட்பம்.

வேலையும் சம்பளமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர எந்த எண்ணமும் இல்லாதவர்கள் இந்த நிலையைப் பின்பற்றலாம்.

இருப்பதே போதும் என்று நினைக்கும் போது மௌனம் காக்கலாம்.

No comments:

Post a Comment