Monday 20 March 2023

உலக மகளிர் தினமும் உலக ஆடவர் தினமும்

உலக மகளிர் தினமும் உலக ஆடவர் தினமும்

மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம் ஆகும்.

மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான விதையை விதைத்தது 1910 இல் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற உலக மகளிர் மாநாடு ஆகும். இம்மாநாட்டின் தலைவர் கிளாரா ஜெட்கின் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

உலக மகளிர் தினம் மார்ச் எட்டாம் நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. ரஷ்யப் பெண் தொழிலாளிகளின் புரட்சியை நினைவு கூறும் வகையில் உலக மகளிர் தினம் மார்ச் எட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது.

இம்மகளிர் தினம் எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது என்றால் 1911 முதல் கொண்டாடப்படுகிறது.

2011 இல் இதன் நூற்றாண்டு தினம் கொண்டாடப்பட்டது.

மகளிர் தினத்திற்கு உலகளாவிய பார்வை கிடைக்கத் தொடங்கியது ஐக்கிய நாடுகள் சபை இந்நாளைக் கொண்டாடத் தொடங்கியதிலிருந்துதான்.

1975 இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளைக் கொண்டாடத் தொடங்கியதிலிருந்து உலகெங்கும் மகளிர் தினம் மார்ச் எட்டாம் நாளில் பரவலாகப் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகள் உலக மகளிர் தினத்தை விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றொரு முக்கிய அறிவிப்பையும் செய்துள்ளது. 1978 ஐ உலகப் பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது.

இவ்வாண்டான 2023 இல் ஐக்கிய நாடுகள் அவையின் பெண்களுக்கான அமைப்பு ‘பாலின சமத்துவத்துக்கான புதுமை புனைதல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு’ குறித்துச் சிந்தித்துச் செயல்பட அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் பெண்களில் நூற்றுக்கு ஒருவரே முழுமையாகக் கல்வியைக் கற்று முடிக்கிறார். கல்வியை முழுமையாகக் கற்பதிலிருந்து இடைநிற்கும் பெண்கள் அதிகமாக உள்ளனர்.

கல்வியிலும் முன்னேற்றத்திலும் கலாச்சார ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தடைகள் நேரிடும் போது பெண்கள் தளர்ந்து விடுகிறார்கள். பின்தங்கி நின்று விடுகிறார்கள்.

பொருளாதாரத்தைக் கையாள்வதிலும் தயக்கத்தையும் அச்சத்தையும் பெண்கள் உணர்கின்றனர். இதனால் பெண்களின் பொருளாதாரம் ஆண்களால் கையாளப்படுவதாகவே உள்ளது. இதுபோன்ற நிலைகள் மாற வேண்டுமானால் பெண்களுக்கான விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது. அந்த விழிப்புணர்வைத் தரக் கூடிய நாளாக உலக மகளிர் தினம் அமைய வேண்டும் என்பதுதான் உலக மகளிர் தினத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.

பெண்களுக்கான அன்பையும் அறிவையும் விழிப்புணர்வையும் வழங்கும் இனிய நாளாக உலக மகளிர் தினம் அமையட்டும்.

உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவது போல உலக ஆடவர் தினமும் கொண்டாடப்படுகிறது. அது எப்போது கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். உலக ஆடவர் தினம் நவம்பர் 19 ஆம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

உலக மகளிர் தினம்

மார்ச் 8

உலக ஆடவர் தினம்

நவம்பர் 19

*****

No comments:

Post a Comment