Tuesday 7 March 2023

வகுப்பறைக்குள் ரோபோக்கள் வருவார்கள்!

வகுப்பறைக்குள் ரோபோக்கள் வருவார்கள்!

ஆசிரியர்கள் கோலோச்சிய வகுப்பறைகளைச் சமீப காலமாக தொழில்நுட்ப கருவிகள் பங்கு போட்டு வருகின்றன.

கணினிகள், இணையம் என்ற அளவில் இருந்த தொழில்நுட்பம் சமீப நாட்களில் செயலிகளாக வடிவமெடுத்து வகுப்பறைக்குள் நுழைந்து விட்டன.

செயலிகளைத் தாண்டி ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவானது ரோபோக்களாக நுழையும் காலமும் இதோ பிறந்து விட்டது.

கர்நாடக மாநிலத்தில் அக்சய் மசேல்கர் என்பவர் உருவாக்கிய ரோபோ நான்காம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறது.

ஆசிரியரிடம் கற்பதும் இணையத்திடம் கேள்வி கேட்பதும் இனி பழைய முறைகளாகி விடும். சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையும் மாறி விடும். அறியாதவற்றை நூலகம், இணையம் என்று தேடி அறிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையும் மாறி விடும்.

கற்பது, கேள்விக் கேட்பது, அறியாதவற்றை அறிந்து கொள்வது என அனைத்தும் இனி செயற்கை நுண்ணறிவைச் சார்ந்து இயங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அந்த அளவுக்கு செயற்கை நுண்ணறிவோடு சாட் செய்யக் கூடிய Chat GPT தற்போது வந்து விட்டது.

Chat GPT இல் இமெயில் ஐடியை பயனர் சொல்லாகக் கொண்டு கடவுச்சொல்லை உருவாக்கிக் கொண்டு நீங்கள் ரோபோட் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அலைபேசிக்கோ, மின்னஞ்சல் முகவரிக்கோ வரும் குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து விட்டு அதனோடு உரையாட முடியும்.

இன்னும் வேறென்ன என்னவெல்லாம் செய்ய முடியும்? அதனிடம் வினாக்கள் தொடுத்து விடையைக் கண்டறிய முடியும். வேண்டுமானால் ஒரு கட்டுரை எழுதி வாங்கிக் கொள்ள முடியும். உங்கள் வீட்டுப்பாடங்களை எழுதிக் காட்டச் சொல்ல முடியும். ஆசிரியர் தரும் வீட்டுக்கணக்குகளையும் போட்டு வாங்கிக் கொள்ள முடியும்.  செயல்திட்டங்களின் தலைப்புகளைச் சொல்லி அதற்குத் தேவையான அத்தனை விவரங்களை அதனிடம் பெற்றுக் கொள்ள முடியும். உங்கள் பிரச்சனைகளைச் சொல்லித் தீர்வு கேட்க முடியும். இவ்வளவுதானா என்றால் உங்கள் தேவைகளைப் பொருத்து அதன் உதவிகள் எல்லையில்லாதது.

அத்துடன் இன்னும் வேறு எப்படி எல்லாம் Chat GPT உங்களுக்கு உதவ முடியும் என்றால் ஓர் ஆசிரியராக, வழிகாட்டியாக, உதவியாளாராக, ஆலோசனை சொல்பவராக என பலவிதமாக Chat GPT அவதாரம் எடுத்து உங்களுக்கு உதவ முடியும்.

நீங்கள் ஓர் ஆசிரியராக இருந்தாலும் அல்லது மாணவராக இருந்தாலும் அல்லது பெற்றோராக இருந்தாலும் அல்லது வேறு எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் Chat GPTஐ உங்கள் உதவியாளராக வைத்துக் கொள்ள முடியும். அதற்குள் நீங்கள் ஒருமுறை அதனுள் உலவிப் பாருங்கள். ஒரு புதிய அனுபவத்தை நீங்கள் பெறுவது நிச்சயம். அதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி அதன் தளத்திற்குச் சென்று பாருங்கள்.

 https://chat.openai.com/

*****

No comments:

Post a Comment