Sunday, 1 October 2023

உங்கள் மீது முதலீடு செய்யுங்கள்!

உங்கள் மீது முதலீடு செய்யுங்கள்!

மனிதர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்வதற்கு வாரன் பப்பெட் என்ன சொல்கிறார் என்றால், உங்கள் மீது முதலீடு செய்யுங்கள் என்கிறார்.

உங்கள் மீது முதலீடு செய்யுங்கள் என்றால் உங்களுக்காகக் காப்பீடு எடுத்துக் கொள்வதா? உங்களுக்காகச் செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்த்துக் கொள்வதா? அவையும் உங்கள் மீது செய்யும் முதலீடுகள்தான் என்றாலும் வாரன் பப்பெட் சொல்வது அவற்றையல்ல.

உங்கள் திறன்களை அதிகப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதைத்தான் பப்பெட் உங்கள் மீது செய்ய வேண்டிய முதலீடு என்கிறார்.

மலுங்கிப் போன கோடரியால் உங்களால் எத்தனை மரங்களையும் வெட்ட முடியும். அதே போல திறன் குறைவைச் சுமந்து கொண்டே இருந்தால் உங்களால் எத்தனை காரியங்களைச் சாதிக்க முடியும் என்று சொல்லுங்கள்.

இப்போது என்ன செய்ய வேண்டும்?

கோடரியைக் கூர் தீட்டுங்கள். அதற்காகக் காலம் கொஞ்சம் செலவழியட்டும். பிறகு பாருங்கள் உங்கள் மரம் வெட்டும் வேகத்தையும் வீச்சையும். அதே போலத்தான் உங்கள் திறனை அதிகம் செய்யுங்கள். திறனோடு இப்போது காரியம் ஆற்றிப் பாருங்கள். உங்கள் காரியத்தின் வேகமும் வீச்சும் கூடியிருக்கும்.

உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக நீங்கள் எப்போதும் ஒன்றைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அது என்னவென்றால் உங்கள் அறிவைக் கூர் தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் திறனை, அறிவைக் கூர் தீட்டிக் கொள்வதற்காக நீங்கள் என்னென்ன செய்வீர்களோ, அதற்காக நீங்கள் என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைத்தான் பப்பெட் உங்கள் மீது நீங்கள் செய்ய வேண்டிய முதலீடு என்கிறார்.

உலகில் நஷ்டமே அடையாத முதலீடு என்றும் பப்பெட் உங்கள் மீது செய்யும் முதலீட்டைத்தான் சொல்கிறார். அவர் எப்படி தன் மீதான முதலீட்டைச் செய்தார் என்பதையும் அவர் வழியிலேயே பார்த்து விட்டால் உங்களுக்கு இன்னும் தெளிவாகும்.

பப்பெட் சிறு வயதிலிருந்தே தன்னைக் கூர் தீட்டிக் கொள்ள ஆரம்பித்தார். அவர் எப்படி பணக்காரராவது என்று யோசித்தார்.

அவருக்கு இரண்டு வழிகள் தெரிந்தன. பணக்காரராவதற்கு ஒன்று வணிகத்தை ஆரம்பிக்க வேண்டும். மற்றொன்று நல்ல வணிகத்தில் முதலீடு செய்ய வேண்டும். பப்பெட்டுக்கு இரண்டாவது வழிதான் தனக்கு ஏற்றது என்று தோன்றியது. அன்றிலிருந்து அவர் நல்ல வணிகத்தில் எப்படி முதலீடு செய்வது என்பதைத் தொடர்ந்து கற்றுக் கொண்டே வருகிறார். ஆம், அவர் தான் கற்பதை இன்னும் முடிக்கவில்லை என்றுதான் சொல்கிறார். முதலீடு செய்வது குறித்த தனது அறிவைக் கூர்மைபடுத்திக் கொண்டே வருகிறார். இதைத்தான் பப்பெட் தன் மீது செய்யும் முதலீடு என்கிறார். இந்த முதலீட்டைச் செய்யாமல் அவர் வெறுமனே தனது பண மற்றும் பங்கு முதலீடுகளைச் செய்திருந்தால் அவரும் சராசரியான ஒரு முதலீட்டாளராகவே இருந்திருப்பார்.

தனக்குத் தேவையான அறிவைப் பெறுவதில் அவர் சளைக்காமல் ஈடுபடுகிறார். இதைத்தான் அவர் தன் மீது தான் செய்து கொள்ளும் முதலீடு என்று அடிக்கடிச் சொல்கிறார். இந்த அறிவு முதலீட்டின் மூலம் பப்பெட் சிலவற்றைச் சொல்கிறார். அது உங்களுக்கும் பயன்படும்.

ü உங்களுக்குப் பல திறமைகள் தேவையில்லை. சில திறமைகள் போதுமானது. அந்தச் சில திறமைகளுக்குத் தேவையானவற்றை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள்.

ü கடினமாக உழைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அறிவை முதலீடு செய்து சாமர்த்தியமாக உழைத்தால் போதும்.

ü சிறந்தவற்றை ஈயடிச்சான் காப்பியடியுங்கள். காப்பி அடித்ததிலிருந்து சிறந்தவற்றை உருவாக்குங்கள்.

ü ஆரம்பிப்பதைத் தள்ளிப் போடாதீர்கள். இருப்பதை வைத்து ஆரம்பித்து விடுங்கள்.

*****

No comments:

Post a Comment