சிறுதானியங்கள் – ஒரு சிறுபார்வை
சிறுதானியங்கள் என்ற சொல்லில் உள்ள ‘சிறு’ என்ற அடைமொழியே அதன்
அமைப்பையும் தன்மையையும் உணர்த்தும்.
சிறுதானியங்கள் பொதுவாக நெல், கோதுமை போன்ற தானியங்களை விட
அளவில் சிறியவை. அதனாலேயே அவை சிறுதானியங்கள் எனப்படுகின்றன.
குறிப்பாக தினை என்பது ஒரு சிறுதானியம். அது மிகச்சிறியது என்பதைக்
குறிப்பிடும் வகையில் ‘தினையளவு’ என்று பொருள் தரும் வகையில் ‘தினைத்துணை’ சொல்லைத்
திருவள்ளுவர்
“தினைத்துணை நன்றி செயினும்
பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.” (குறள். 104)
என்ற குறளில் பயன்படுத்துவார்.
வரகு, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களும் அளவில் சிறியவையே.
அவை சிறுதானியங்கள் என்ற வரிசையில் வரக் கூடியவை.
மேலும், தானியங்களில் இருக்கும் மாவுச்சத்து போன்ற
பிற சத்துகள் குறைவாக உள்ளதாலும் அவற்றைச் சிறுதானியங்கள் எனக் குறிப்பிடலாம்.
சிறுதானியங்கள் தானிய வகைகளில் வளரும் பயிர்களை விட விரைவாக
வளரக் கூடியவை. தானிய வகைப் பயிர்களுக்குத் தேவையான நீரை விட குறைந்த அளவு நீரிலும்
வளரக் கூடியவை. தானிய வகைப் பயிர்களை வளர்ப்பதற்குத் தேவைப்படும் மெனக்கெடலையும் உழைப்பையும்
அதிகம் கோராதவை. மானவாரிப் பயிர்களாகவும் வளரக் கூடியவை.
சிறுதானியங்களின் பயன்பாடு சங்க காலத்திலிருந்து தமிழகத்தில்
இருந்து வருகிறது. நற்றிணையில் 93 வது பாடலில்
“கூலம் எல்லாம் புலம்
புக நாளும்” (நற்றிணை, 93 : 3)
என்ற வரியில் பதினாறு வகையான கூலங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவையாவன,
நெல் |
புல் |
வரகு |
தினை |
சாமை |
கம்பு |
மூங்கில் அரிசி |
கேழ்வரகு |
எள்ளு |
கொள்ளு |
பயறு |
உளுந்து |
அவரை |
கடலை |
துவரை |
மொச்சை |
இவற்றுள் நெல் போன்ற தானியங்களும், பயறு, உளுந்து,
கடலை போன்ற பருப்பு வகைகளும் அவற்றுடன் தினை, கம்பு, சாமை, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களும்
இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
சடங்கு மற்றும் சம்பிரதாய முறைகளில் நவதானியங்கள் என்று பயன்படுத்தப்படுபவையின்
பட்டியலைக் கீழே காணலாம்.
நெல் |
கோதுமை |
பயறு |
துவரை |
அவரை |
மொச்சை |
எள்ளு |
உளுந்து |
கொள்ளு |
இது பொதுவாக நவதானியங்கள் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டாலும்
நெல், கோதுமை தவிர இவற்றுடன் கலந்திருப்பவை பருப்பு வகைகளைச் சார்ந்தவையாக இருப்பதைக்
கவனிக்கலாம்.
பொதுவாக நவதானியங்கள் எனக் குறிப்பிட பொருத்தமானவைக் குறித்து
கீழே உள்ள பட்டியலைக் குறிப்பிடலாம்.
கொன்னை |
தினை |
சாமை |
வரகு |
பனிவரகு |
குதிரைவாலி |
கேழ்வரகு |
கம்பு |
சோளம் |
•••••
No comments:
Post a Comment