Monday, 29 June 2020

நம்பிக்கையால் கிடைக்கும் மதிப்பு!

மனதோடு வீசும் மென்காற்று :

நம்பிக்கையால் கிடைக்கும் மதிப்பு!
நம்பிக்கை வைரம் போன்றது
எப்போதும் மதிப்பு மிக்கது
வைரத்தை வசப்படுத்துவதுப் போல
நம்பிக்கையை வசப்படுத்துவதும்
எப்போதும் மதிப்பு மிக்கதும் உயர்வானதும் ஆகும்.
வாழ்க்கையின் நம்பிக்கையைக் கூட்ட
நம்பிக்கையைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் மரிக்கலாம்
வானம் இல்லாமல் போகலாம்
பூமி புதையுண்டு போகலாம்
நம்பிக்கை அப்பிடி கிடையாது
சாசுவதமானது, நிரந்தரமானது.
நம்பிக்கை மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்
நம்பிக்கை இறவாமை உடையது!

விதைக்கும் அனைத்து விதைகளும்
முளை விட்டு விடுவதில்லை
மனதில் எழும் எண்ணங்கள் அனைத்தும்
சாதனை படைத்து விடுவதில்லை
உன்னதமான விதையே
உயர்வாக முளைத்தெழுகிறது
வைராக்யமான எண்ணமே
சாதனையாக உருபெறுகிறது
நம்பிக்கை விதைகளில் உன்னதமானது
செழுமையான வாழ்வைத் தரும் நம்பிக்கை என்பது
அளவிட முடியாத அட்சயப் பாத்திரம்.

தோற்கும் மனிதரும் பூமியில் ஒரு மனிதரே!
வெல்லும் மனிதரும் பூமியில் ஒரு மனிதரே!
இரண்டு மனிதர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்பது
அவர்களுக்கு இடையே இருக்கும்
வலிமையும், புத்துணர்ச்சியுமே ஆகும்.
புத்துணர்ச்சியோடும் வலிமையோடும்
உயிர்த்தெழச் செய்யும் வரம் நம்பிக்கையிடம் உள்ளது.
நம்பிக்கை புத்துணர்ச்சியின் ஊற்று.
நம்பிக்கை வலிமையின் கருப்பை.

வானம் அளக்க பறவைகளுக்குச் சிறகே பிரதானம்
கடலை அளக்க மீன்களுக்கு துடுப்பே பிரதானம்
வாழ்க்கைய அளக்க மனிதர்களுக்கு நம்பிக்கையே பிரதானம்
பறவைகளுக்குச் சிறகுகளைப் போல
மீன்களுக்குத் துடுப்புகளைப் போல
மனிதருக்கு நம்பிக்கை.

வாழ்க்கையின் மதிப்பு
வாழ்ந்ததைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.
நம்பிக்கையே அங்கே அளவிடவும் மதிப்பிடவும்
பயன்படுகிறது.
நம்பிக்கையோடு வாழ்ந்ததைக் கொண்டுதான்
வாழ்க்கை மதிப்பிடப்படுகிறது.
நம்பிக்கையற்ற வாழ்க்கை மதிப்பிடுவதற்கான
தகுதிக்குரியதே இல்லை.
வாழ்க்கையின் மதிப்பை உயர்த்திக் கொள்ள
நம்பிக்கையோடு இருங்கள்!
நம்பிக்கை வைரத்தைப் போன்றது
வைடூரியத்தைப் போன்றது
ரத்தினத்தைப் போன்றது
வாழ்க்கையின் மதிப்பை
நம்பிக்கைக் கூட்டுகிறது
மனிதரின் மதிப்பை
நம்பிக்கை புகழ் ஏணியில் ஏற்றுகிறது.
*****


Sunday, 28 June 2020

வாழ்க்கையின் சிறகு நம்பிக்கை!

மனதோடு வீசும் மென்காற்று :

வாழ்க்கையின் சிறகு நம்பிக்கை!
பறவையின் நம்பிக்கை சிறகு
மனிதனின் சிறகு நம்பிக்கை
மனிதன் பறக்க முடியாது என்று நினைத்திருந்தால்
வானில் விமானம் ஓட்டியிருக்க முடியாது.
கடலைக் கடக்க முடியாது என்று நினைத்திருந்தால்
கடலில் கப்பல் விட்டிருக்க முடியாது.
முடியும் என்ற நம்பிக்கைதான்
விண்ணைத் தட்டவும்
கடலை எட்டவும் துணை நின்றிருக்கிறது.

வெற்றிக்கும் தோல்விக்கும் நதிமூலம், ரிஷிமூலம் எது தெரியுமா?
நம்பிக்கைதான்!
நம்பிக்கையோடு இருப்பவர்கள்
தோல்வியிலும் வெற்றியைக் காண்கிறார்கள்!
நம்பிக்கை இல்லாதவர்கள்
வெற்றியிலும் தோல்வியைக் காண்கிறார்கள்!
நம்பிக்கையின் துணையின்றி
உங்களால் வெற்றி பெற முடியாது.
நம்பிக்கையின் துணையிருந்தால்
உங்களால் தோற்க முடியாது.

மனதில் போராட்டங்கள்
வாழ்க்கையில் பிரச்சனைகள்
எதிலும் வெறுப்புகள்
எல்லாவற்றிலும் வேதனைகள்
எல்லார்க்கும் இருக்கிறது.
ஒரு சில எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்கள்
ஒரு சிலர் ஒரு சிலதிலேயே தடுமாறுகிறார்கள்.
வாழ்க்கையில்
போராட்டங்கள், பிரச்சனைகள்,
வெறுப்புகள், வேதனைகள்
சூழவே செய்யும்.
நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்கள்
சிறகடிக்கிறார்கள்.
நம்பிக்கை இழப்பவர்கள் புதைகுழியில்
புதைகிறார்கள்.

வைரத்தின் மதிப்பு
அது
பூமிக்குள் புதையுண்டு
காத்திருந்த காலத்தின்
பொறுமையில் இருக்கிறது.
மனிதனின் மதிப்பு
தோல்விகளைக் கண்டு
துவண்டு விடாமல்
வெற்றிக்காக
நம்பிக்கையோடு காத்திருக்கும்
பொறுமையில் இருக்கிறது.
நம்பிக்கை எனும் உயர்ந்த பொருள்
இருக்கும் வரையில்
எவரும் தாழ்ந்து விடப் போவதில்லை.

எழுச்சியும் வீழ்ச்சியும்
நாம் கொள்ளும்
நம்பிக்கையில்தான் இருக்கிறது.
எழுச்சிக் கொள்வது என்பது
நம்பிக்கை கொள்வது
வீழ்ச்சி அடைவது என்பது
நம்பிக்கை இழப்பது.
நம்பிக்கை உள்ளவர்
ஒவ்வொரு வீழ்ச்சியிலும் எழுகிறார்.
நம்பிக்கை இல்லாதவர்
ஒவ்வொரு எழுச்சியிலும் வீழ்கிறார்.

இந்த உலகை யார் உருவாக்கியது என்றால்
கடவுள் என்பார் சிலர்,
தானாக உருவானது என்பார் சிலர்.
இந்த உலகை உருவாக்கியது நம்பிக்கைதான்!
பிரமாண்டமான செயல்கள்
நிகழ்ந்த முடியாத சாதனைகள்
கற்பனைக்கு எட்டாத வசதிகள் என்று
இந்த உலகை உருவாக்கியது நம்பிக்கைதான்.
ஆம்!
நம்மை, இந்த உலகை உருவாக்கியது
யார் என்று நினைக்கிறீர்கள்?
நிச்சயம் நம்பிக்கைதான்!
*****


நம்பிக்கையை நெருங்குங்கள்!

மனதோடு வீசும் மென்காற்று :

நம்பிக்கையை நெருங்குங்கள்!
நம்மை விழும் போது இறுக்கிப் பிடிப்பது
துவளும் போது தாங்கிப் பிடிப்பது
நம்பிக்கையே!

நம்பிக்கையை நெருங்குவதன் மூலம்
நம்மை நாமே நெருங்குகிறோம்.
நம்மிலிருந்து விலகி நிற்கும் நமக்கு
நம்மை நாமே நெருங்குவதற்கான ஏற்பாடு
நம்பிக்கையே!

வாழ்க்கையில் நிஜமான வேதனையையும், துன்பத்தையும்
தரக் கூடியது எது தெரியுமா?
இலட்சியத்தைக் கைவிடுவதும்,
கனவுகள் நிறைவேறாமல் போவதும்தான்.
அந்த வேதனைக்கும், துன்பத்திற்கும் மருந்திருக்கிறது
நம்பிக்கைதான் அந்த மாமருந்து.

இன்னல்களைக் கண்டு இடிந்துப் போகாதீர்கள்!
துயரங்களைக் கண்டு துவண்டுப் போகாதீர்கள்!
இன்னல்களால், துயரங்களால்
நாம் நம்பிக்கையை மிக அதிகமாக நெருங்குகிறோம்.
நமது நம்பிக்கை
இன்னல்களை இல்லாமல் போகச் செய்கிறது,
துயரங்களைத் துடைத்துத் தூர வீசி விட்டுப் போகிறது.

நோய்கள் நம்மை வாட்டலாம்
தோல்விகள் நம்மை வருத்தலாம்
வலிகள் நம்மை வேதனைப்படுத்தலாம்
தனிமைகள் நம்மை தளர்வுறச் செய்யலாம்
அவை நரகத்தின் படிகட்டுகள் அல்ல
நரகத்தைக் கடந்து
சொர்க்கத்தை நோக்கிச் செல்லும் படிகட்டுகள்
நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு
சொர்க்கத்தின் படிகட்டுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.

நம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் தோற்பதில்லை
சூரியன் மறைந்த பின்னும்
இருள் கவிந்த பின்னும்
தோல்விகள் சூழ்ந்த பின்னும்
நம்பிக்கை அணைவதில்லை
நம்பிக்கை தோற்பதில்லை
நம்பிக்கை நம்மோடு இருக்கும் வரை
தோல்விகள் தோல்விகளில்லை
நம்பிக்கையை இழந்து பெறும்
வெற்றிகளும் வெற்றிகளில்லை.

நமக்கு நம்பிக்கைத் தருவதை
வேறெந்தச் சக்தியாலும் தர முடியாது
நம்பிக்கை அசைக்க முடியாத சக்தி
தளராத மனதையும்
குறையாத பொறுமையையும்
நம்பிக்கையே நமக்குத் தருகின்றது.
தோல்வி வேண்டாத விருந்தாளியாக வரும் போது
நம்பிக்கை
வெற்றியை புதிய விருந்தாளியாக
கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது
நம்பிக்கையை நாம் கைவிடா வரை
வெற்றி நம்மை கைவிடுவதில்லை
நம்பிக்கையை நாம் கைவிடும் போதுதான்
வெற்றி நம்மை கைவிடுகிறது.
நம்பிக்கையை எப்போதும் கைவிடாதீர்கள்!
நம்பிக்கையை நெருங்குங்கள்
வெற்றி நம்மை நெருங்கும்!
*****



மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை!

கதை சொல்லும் சேதி :

மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை!
            மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை மட்டுமல்ல, அபாயகரமானவையும் கூட. ஒரு மனிதன் மூடநம்பிக்கைகளை விடுத்து, தன் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதை விளக்கும்படியான ஒரு கதை.
            ஓர் அரசர் இருந்தார். அவரிடம் ஒரு சோசியக்காரர் காலையில் எழுந்ததும் கழுதையின் முகத்தில் முழித்தால் அதிர்ஷ்டம் என்று கூறி விட்டுப் போய் விட்டார்.
            கழுதை முகத்தில் முழித்து ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்ட நாளாக்க வேண்டும் என்று ஆசை கொண்டார் அரசர்.
            அரண்மனைப் பணியாளைக் கூப்பிட்டு ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்ததும் கண் முன்னே கழுதை இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு விட்டார் அரசர்.
            பணியாளும் மறுநாள் பொழுது விடிந்ததும் கழுதையைக் கொண்டு போயி அரண்மனை முன்னால் நிறுத்தி விட்டு, அரசரை எழுப்ப போனார்.
            அரசர் எழும்பி வந்துப் பார்த்தார். கழுதையைக் காணவில்லை. அரசர் வருவதற்குள் கழுதை எங்கோ விழுந்தடித்து ஓடி விட்டது.
            அரசர்க்குக் கோபம் வந்து விட்டது. அவர் அந்தக் காலத்து அரசர். அவர்களுக்குக் கோபம் வந்தால் எதற்கெடுத்தாலும் மரண தண்டனைதான்.
            அரசர் பணியாளுக்கு மரண தண்டனை விதித்து விட்டார். அதைக் கேட்டுப் பணியாள் பயந்து நடுங்கவில்லை, சிரிக்க ஆரம்பித்து விட்டார். அரசர்க்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.
            "ஏன் சிரிக்கிறாய்?" என்று பணியாளைப் பார்த்துக் கேட்டார் அரசர்.
            "நல்ல வேளையாக காலையில் கழுதை முகத்தில் நான் முழித்தேன். அதனால் நீங்கள் தப்பித்தீர்கள். அதனால் நான் மட்டும் சாகப் போகிறேன். நீங்களும் அதன் முகத்தில் முழித்திருந்தால் என்னோடு சேர்ந்து நீங்களும் சாக வேண்டியிருந்திருக்கும். இதுதான் கழுதை முகத்தில் முழிப்பதில் இருக்கும் அதிர்ஷ்டம் போலிருக்கிறது!" என்றார் அந்தப் பணியாள்.
            அரசர் உண்மையைப் புரிந்து கொண்டார்.
            அன்றிலிருந்து மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை என்றும் அது போன்ற மூட நம்பிக்கைகளை நம்புவதில்லை என்றும் முடிவெடுத்துக் கொண்டார்.
            அதனால்தான் இப்பிடிச் சொல்லப்படுகிறது,
            மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை மட்டுமல்ல, அபாயகரமானவையும் கூட. நீங்கள் மூடநம்பிக்கை மேல் நம்பிக்கையை விட உங்கள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் உயரலாம்.
*****

Thursday, 25 June 2020

உங்களை வழிநடத்தும் நம்பிக்கை!

மனதோடு வீசும் மென்காற்று :

உங்களை வழிநடத்தும் நம்பிக்கை!
உங்கள் வாழ்வை, மனதை
எது வழிநடத்துகிறது என்று தெரியுமா?
நம்பிக்கைத்தான் வழிநடத்துகிறது.

அசெளகரியங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
துரதிர்ஷ்டங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
காயங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
வலிகள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
துக்கங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
அவை எங்கும் எல்லா இடத்திலும் இருக்கின்றன
ஏனென்றால் வாழ்க்கை என்பது
அசெளகரியங்களும், துரதிர்ஷ்டங்களும்,
காயங்களும், வலிகளும், துக்கங்களும் சூழ்ந்ததுதான்.

புயல் வராது என்று சொல்வதற்கில்லை
பூகம்பம் நேராது என்று சொல்வதற்கில்லை
எரிமலை வெடிக்காது என்று சொல்வதற்கில்லை
அவை எப்போது வேண்டுமானால் தாக்கலாம்
வாழ்க்கை எப்போதும் அதனால் நிச்சயமற்றது
ஆனால் நம்பிக்கை எப்போதும் நிச்சயமானது.

நீங்கள் நல்லதே செய்தாலும்
தவறாகக் கருதப்படலாம்.
உதவியே செய்தாலும்
உபத்திரவமாக உணரப்படலாம்.
உதவும் முயற்சியில் தாக்கப்படலாம்
மரணத்தைத் தொட்டு விட்டும் வரலாம்
நம்பிக்கை எப்போதும் உங்களைக் காப்பாற்றும்
நம்பிக்கை தோற்காது
நம்பிக்கை சாகாது.

நம்பிக்கை சக்தி வாய்ந்தது, ஆற்றல் மிக்கது,
எப்போதும் எழுச்சி தரக் கூடியது.
அதன் ஒளி மகத்தானது, மகோன்னதமானது.
நம்பிக்கையின் பலத்தை, வலிமையை,
அதன் பேராற்றலை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்பிக்கை கருணையோடு வழிநடத்தும்
புதியப் பாதையைக் காட்டும்
ஆறுதலை ஆலோசனையைத் தரும்.

நம்பிக்கையே மனித குலத்தை வழிநடத்துகிறது
உங்கள் வாழ்க்கையின் உன்னதமான நம்பிக்கையை
உங்கள் மனதிலிருந்து கண்டடையுங்கள்
நம்பிக்கையோடு நடக்கும் போது
நம்பிக்கையே உங்கள் கை பிடித்து வழிகாட்டும்.
நம்பிக்கையால் எந்த தொந்தரவும் உங்களை பயமுறுத்தாது.
எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் உண்டாகும்.
அதை தங்கம் என்பதா? வைரம் என்பதா?
பொக்கிஷம் என்பதா?
அதை விட இன்னும் மேலானது என்பதா?
அதனால்தான் அதை அடைந்தவர்கள்
மாபெரும் மனிதர்களாகிறார்கள்
உலகுக்கே வழிகாட்டுகிறார்கள்.
*****

Monday, 22 June 2020

பேரறிஞர் அண்ணாவின் மனிதநேயம்

பேரறிஞர் அண்ணாவின் மனிதநேயம்
வாசிக்கும் சங்கதிகளுள் எவ்வளவோ கண்களைக் கலங்க செய்து விடுகின்றன. அப்படி ஒரு சங்கதி!

பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.
“மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்!” என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.
போப்பாண்டவர் சொன்னார், “அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!” என்று.  தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து, “உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்?” என்றார்.
“என்ன கேட்டாலும் தருவீர்களா?” என்று கேட்டார் அண்ணா. 
“கேளுங்கள் தருகிறேன்! என்றார் போப்பாண்டவர்.
“போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்” என்று கேட்டார் அண்ணா.
“சரி!” என்று சொன்னார் போப்பாண்டவர்.

மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.
போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார்.
ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், “யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே?” என்று கேட்டார்.
“அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்!” என்று சொன்னார் அன்னை இந்திரா.
நாஞ்சிலாரைச் சந்தித்த பின் ரானடேயிடம், “நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்!” என்று சொன்னார் அன்னை இந்திரா.
உடைந்து போன ரானடே, “நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்!” என்றார்.
அன்னை இந்திரா உடனடியாக ரானடே மற்றும் நாஞ்சிலாரை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டார் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.
போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.
•••••