Sunday 28 June 2020

மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை!

கதை சொல்லும் சேதி :

மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை!
            மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை மட்டுமல்ல, அபாயகரமானவையும் கூட. ஒரு மனிதன் மூடநம்பிக்கைகளை விடுத்து, தன் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதை விளக்கும்படியான ஒரு கதை.
            ஓர் அரசர் இருந்தார். அவரிடம் ஒரு சோசியக்காரர் காலையில் எழுந்ததும் கழுதையின் முகத்தில் முழித்தால் அதிர்ஷ்டம் என்று கூறி விட்டுப் போய் விட்டார்.
            கழுதை முகத்தில் முழித்து ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்ட நாளாக்க வேண்டும் என்று ஆசை கொண்டார் அரசர்.
            அரண்மனைப் பணியாளைக் கூப்பிட்டு ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்ததும் கண் முன்னே கழுதை இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு விட்டார் அரசர்.
            பணியாளும் மறுநாள் பொழுது விடிந்ததும் கழுதையைக் கொண்டு போயி அரண்மனை முன்னால் நிறுத்தி விட்டு, அரசரை எழுப்ப போனார்.
            அரசர் எழும்பி வந்துப் பார்த்தார். கழுதையைக் காணவில்லை. அரசர் வருவதற்குள் கழுதை எங்கோ விழுந்தடித்து ஓடி விட்டது.
            அரசர்க்குக் கோபம் வந்து விட்டது. அவர் அந்தக் காலத்து அரசர். அவர்களுக்குக் கோபம் வந்தால் எதற்கெடுத்தாலும் மரண தண்டனைதான்.
            அரசர் பணியாளுக்கு மரண தண்டனை விதித்து விட்டார். அதைக் கேட்டுப் பணியாள் பயந்து நடுங்கவில்லை, சிரிக்க ஆரம்பித்து விட்டார். அரசர்க்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.
            "ஏன் சிரிக்கிறாய்?" என்று பணியாளைப் பார்த்துக் கேட்டார் அரசர்.
            "நல்ல வேளையாக காலையில் கழுதை முகத்தில் நான் முழித்தேன். அதனால் நீங்கள் தப்பித்தீர்கள். அதனால் நான் மட்டும் சாகப் போகிறேன். நீங்களும் அதன் முகத்தில் முழித்திருந்தால் என்னோடு சேர்ந்து நீங்களும் சாக வேண்டியிருந்திருக்கும். இதுதான் கழுதை முகத்தில் முழிப்பதில் இருக்கும் அதிர்ஷ்டம் போலிருக்கிறது!" என்றார் அந்தப் பணியாள்.
            அரசர் உண்மையைப் புரிந்து கொண்டார்.
            அன்றிலிருந்து மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை என்றும் அது போன்ற மூட நம்பிக்கைகளை நம்புவதில்லை என்றும் முடிவெடுத்துக் கொண்டார்.
            அதனால்தான் இப்பிடிச் சொல்லப்படுகிறது,
            மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை மட்டுமல்ல, அபாயகரமானவையும் கூட. நீங்கள் மூடநம்பிக்கை மேல் நம்பிக்கையை விட உங்கள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் உயரலாம்.
*****

No comments:

Post a Comment