Sunday, 28 June 2020

வாழ்க்கையின் சிறகு நம்பிக்கை!

மனதோடு வீசும் மென்காற்று :

வாழ்க்கையின் சிறகு நம்பிக்கை!
பறவையின் நம்பிக்கை சிறகு
மனிதனின் சிறகு நம்பிக்கை
மனிதன் பறக்க முடியாது என்று நினைத்திருந்தால்
வானில் விமானம் ஓட்டியிருக்க முடியாது.
கடலைக் கடக்க முடியாது என்று நினைத்திருந்தால்
கடலில் கப்பல் விட்டிருக்க முடியாது.
முடியும் என்ற நம்பிக்கைதான்
விண்ணைத் தட்டவும்
கடலை எட்டவும் துணை நின்றிருக்கிறது.

வெற்றிக்கும் தோல்விக்கும் நதிமூலம், ரிஷிமூலம் எது தெரியுமா?
நம்பிக்கைதான்!
நம்பிக்கையோடு இருப்பவர்கள்
தோல்வியிலும் வெற்றியைக் காண்கிறார்கள்!
நம்பிக்கை இல்லாதவர்கள்
வெற்றியிலும் தோல்வியைக் காண்கிறார்கள்!
நம்பிக்கையின் துணையின்றி
உங்களால் வெற்றி பெற முடியாது.
நம்பிக்கையின் துணையிருந்தால்
உங்களால் தோற்க முடியாது.

மனதில் போராட்டங்கள்
வாழ்க்கையில் பிரச்சனைகள்
எதிலும் வெறுப்புகள்
எல்லாவற்றிலும் வேதனைகள்
எல்லார்க்கும் இருக்கிறது.
ஒரு சில எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்கள்
ஒரு சிலர் ஒரு சிலதிலேயே தடுமாறுகிறார்கள்.
வாழ்க்கையில்
போராட்டங்கள், பிரச்சனைகள்,
வெறுப்புகள், வேதனைகள்
சூழவே செய்யும்.
நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்கள்
சிறகடிக்கிறார்கள்.
நம்பிக்கை இழப்பவர்கள் புதைகுழியில்
புதைகிறார்கள்.

வைரத்தின் மதிப்பு
அது
பூமிக்குள் புதையுண்டு
காத்திருந்த காலத்தின்
பொறுமையில் இருக்கிறது.
மனிதனின் மதிப்பு
தோல்விகளைக் கண்டு
துவண்டு விடாமல்
வெற்றிக்காக
நம்பிக்கையோடு காத்திருக்கும்
பொறுமையில் இருக்கிறது.
நம்பிக்கை எனும் உயர்ந்த பொருள்
இருக்கும் வரையில்
எவரும் தாழ்ந்து விடப் போவதில்லை.

எழுச்சியும் வீழ்ச்சியும்
நாம் கொள்ளும்
நம்பிக்கையில்தான் இருக்கிறது.
எழுச்சிக் கொள்வது என்பது
நம்பிக்கை கொள்வது
வீழ்ச்சி அடைவது என்பது
நம்பிக்கை இழப்பது.
நம்பிக்கை உள்ளவர்
ஒவ்வொரு வீழ்ச்சியிலும் எழுகிறார்.
நம்பிக்கை இல்லாதவர்
ஒவ்வொரு எழுச்சியிலும் வீழ்கிறார்.

இந்த உலகை யார் உருவாக்கியது என்றால்
கடவுள் என்பார் சிலர்,
தானாக உருவானது என்பார் சிலர்.
இந்த உலகை உருவாக்கியது நம்பிக்கைதான்!
பிரமாண்டமான செயல்கள்
நிகழ்ந்த முடியாத சாதனைகள்
கற்பனைக்கு எட்டாத வசதிகள் என்று
இந்த உலகை உருவாக்கியது நம்பிக்கைதான்.
ஆம்!
நம்மை, இந்த உலகை உருவாக்கியது
யார் என்று நினைக்கிறீர்கள்?
நிச்சயம் நம்பிக்கைதான்!
*****


No comments:

Post a Comment