கதை சொல்லும் சேதி :
உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள்!
            உங்கள் கடமை எதுவோ அதைக் கண்ணும் கருத்துமாகச் செய்யுங்கள்.
அதிலிருந்து விலகுவதோ, வெகுமதிக்கு ஆசைப்படுவதோ உங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கி
விடும். இதை விளக்கும்படியான ஒரு கதை.
            ஓர் இரவு நேரக் காவலாளிக்கு கனவு வந்தது. கனவு வந்ததது என்றால்
கடமையிலிருந்து விலகி விட்டார் என்றுதானே அர்த்தம்.
            அவரது கனவில் அவரது முதலாளி செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகி
வெடித்துச் சிதறி விடுகிறது. கனவிலிருந்து விழித்த காவலாளி தான் கடமையிலிருந்து விலகி
தூங்கியதைக் கவனத்தில் கொள்ளவில்லை.
            அந்தக் கனவு பலிக்குமானால், அது குறித்து முதலாளியிடம் சொல்லி
அவரைக் காப்பாற்றி விட்டால் வெகுமதி கிடைக்கும் என ஆசைப்பட்டார். அந்த ஆசை வந்ததும்
முதலாளியிடம் சென்ற இரவுக் காவலாளி தன்னுடைய கனவைச் சொன்னார்.
            முதலாளியும் எதற்கும் இருக்கட்டுமே என்று அன்றை விமானப் பயணத்தை
ரத்து செய்தார். இரவுக்காவலாளி சொன்னபடியே அவர் பயணம் செய்யவிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி
வெடித்துச் சிதறியது.
            முதலாளி உடனடியாக இரவுக்காவலாளியை அழைத்தார். வெகுமதி கொடுக்க
அல்ல, வேலையிலிருந்து உடனடியாகத் தூக்க. அப்போது அந்த முதலாளி சொன்னார், "இரவுக்
காவலாளியான நீ வேலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தால் என் முதலும் மூலதனமும் என்னாவது?"என்று.
            ஆகவேத்தான் இப்பிடிச் சொல்லப்படுகிறது, "உங்கள் கடமையிலிருந்து
விலகுவதோ, வெகுமதிக்கு ஆசைப்படுவதோ உங்களைத் தகுதியற்றவர்களாக்கி விடும்!" என்று.
*****
No comments:
Post a Comment