கதை சொல்லும் சேதி :
எச்சரிக்கைகளைப் பொருட்படுத்துங்கள்!
தேவையான அறிவுரைகளை, சரியான எச்சரிக்கைகளைக் காது கொடுத்துக்
கேட்காதவர்கள் தங்கள் செயலால் தங்களது அழிவைத் தாங்களே தேடிக் கொள்கிறார்கள்.
விபரீத ஆசைகள் விபத்தில் போய் முடிகிறது.
அசட்டுப்புத்திக்காரர்கள் தாங்களே வலையில் போய் சிக்கிக் கொள்கிறார்கள்.
இதெல்லாம் பொதுவான நியதிகள்.
இந்த நியதிகளை விளக்கும்படியான கதை ஒன்று.
ஓர் ஊரில் குறும்புக்கார அசட்டுப்புத்திக்காரன் ஒருவன் இருந்தான்.
அவனுக்குக் குதிரை ஒன்றைப் பார்த்த போது, அதன் வாலில் இருந்து முடிகளை ஒவ்வொன்றாகப்
பிய்த்தெறிய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவன் குதிரையின் வாலை தொட்ட போது குதிரைக்காரன்
எச்சரித்தான், குதிரை ஓங்கி உதைத்தால் வாயில் ஒரு பல் கூட இருக்காது என. தேவையான அறிவுரையை,
சரியான எச்சரிக்கையைக் குதிரைக்காரன் வழங்கி விட்டான். அசட்டுப்புத்திகாரன் அதைப் பொருட்படுத்தவில்லை.
குதிரையின் வாலில் இருந்து ஒரு முடியைப் பிடித்து இழுத்தான்
அசட்டுப்புத்திக்காரன். குதிரை வலி தாங்க முடியாமல் ஓங்கி உதைத்தில் அவன் வாயில் இருந்த
பற்களில் முப்பத்திரண்டில் ஒன்று கூட தேறவில்லை. அவ்ன பொக்கைவாயனாகி விட்டான். அதற்கு
அந்த அசட்டுப்புத்திக்காரன் குதிரைக்காரனிடம் நட்டஈடு கேட்டான்.
வேண்டுமென்றே, வீம்பாகச் சென்று உதைபட்டதற்கெல்லாம் நட்டஈடு
கொடக்க முடியாது என்று கூறி விட்டான் குதிரைக்காரன். அசட்டுப்புத்திக்காரன் விடுவதாக
இல்லை. இந்தப் பிரச்சனைப் பெரிதாக சண்டையாகி வழக்கு மன்றத்துக்குப் போனது.
நீதிபதி குதிரைக்காரனை விசாரித்தார். ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டார்.
எந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்லாமல் மெளனமாக நின்றான் குதிரைக்காரன். கடைசியாக
நீதிபதி குதிரைக்காரனைப் பார்த்து, "எந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்லாமல் நிற்கிறாயே,
நீயென்ன ஊமையா?"என்று கேட்டார். அதற்கும் பதிலைச் சொல்லாமல் மெளனமாகக் குதிரைக்காரன்
நிற்கவே அசட்டுப்புத்திகாரனுக்குக் கோவம் வந்து விட்டது. அவனால் சும்மா இருக்க முடியவில்லை.
"குதிரையின் வாலைப் பிடித்து முடியைப் பிய்த்தால் குதிரை
உதைக்கும்! பற்கள் ஒன்று கூட தேறாது என்று நீதானேடா சொன்னாய்! இப்போது ஊமையைப் போல
ஏனடா நடிக்கிறாய்?"என்று அசட்டுப்புத்திக்காரன் குதிரைக்காரனைப் பார்த்துக் கத்தினான்.
நீதிபதி நடந்ததைப் புரிந்து கொண்டார். குதிரைக்காரனை விடுவித்தார்.
அசட்டுபுத்திக்காரனைத் தண்டித்தார்.
பேசுவதால் மட்டுமல்ல, சில நேரங்களில் மெளனத்தாலும் வெற்றியைக்
காண முடியும் என்பதை விளக்குகிறது இந்தக் கதை. அது மட்டுமா,
1. அறிவுரைகளுக்குக் காது கொடுங்கள்,
2. எச்சரிக்கைகளைப்
பொருட்படுத்துங்கள்,
3. நீங்களாகவே வாயைக் கொடுத்து அசட்டுத்தனமாக மாட்டிக் கொள்ளாதீர்கள்,
4. விபரீத ஆசைகள் விபத்தில் போய் முடியும்,
5. சரியான சேதிகளுக்குக் காது கொடுக்காதவர்கள் தாங்களாகவே மாட்டிக்
கொள்வார்கள் என்பன போன்ற உன்னத சேதிகளையும் அல்லவா சொல்கிறது இந்தக் கதை!
*****
No comments:
Post a Comment