கதை சொல்லும் சேதி :
உண்மையாக இருப்பதன் கஷ்டம்!
மனிதர்கள் உண்மையாக இருப்பதை விரும்புவதில்லை. அப்படியே உண்மையாக
இருப்பதை விரும்பினாலும் அவர்களின் ஆசைகள் அவர்களை அப்படி இருக்க விடுவதில்லை. இதை
விளக்கும்படியான ஒரு கதை.
ஒரு நாட்டின் அரசர் திடீரென்று இறந்து விட்டார். இறந்து விட்டார்
என்றால் வாரிசு இல்லாமல் இறந்து விட்டார். அடுத்த அரசரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை.
அடுத்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசர் நேர்மையானவராகவும்,
உண்மையானவராகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள் அமைச்சர்கள். அதற்காக ஒரு சோதனை
வைப்பதென்றும், அதில் விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தார்கள்
அமைச்சர்கள்.
அந்த அறிவிப்பைக் கேட்டு அரசராக வேண்டும் என்ற ஆசையில் அறுபது
பேர் வரை வந்து நின்றார்கள். அவர்கள் எல்லோர் கையிலும் பிடி நெல்லைக் கொடுத்து, மூன்று
மாதக் காலத்தில் அதை யார் சிறப்பாக விளைவிக்கிறார்களோ அவரே அடுத்த அரசர் என்று சொன்னார்கள்
அமைச்சர்கள்.
மூன்று மாதம் கழித்து அறுபது பேரும் விளைவித்திருந்த நெற்பயிரைப்
பார்க்க போனார்கள் அமைச்சர்கள். பார்க்கப் போனால் அறுபது பேரில் ஐம்பத்து ஒன்பது
பேர் மிகச் சிறப்பாக விளைவித்திருந்தார்கள்.
ஒருவர் மட்டும் சிறப்பாக விளைவிக்கவில்லையா என்று கேட்டால்,
அவர் விளைவிக்கவே இல்லை. அவரிடம் அமைச்சர்கள் கேட்டதற்கு, தான் விதைத்த நெல் விளையவே
இல்லை என்று பதில் தந்தார் அந்த அறுபதாவது ஆள்.
அமைச்சார்கள் பார்த்தார்கள், அந்த அறுபதாவது ஆளுதான் அரசராக
இருக்கப் பொருத்தமானவர் என்று அவரையே அரசராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். ஏனென்றால்
அவர்தான் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொண்டார்.
அமைச்சர்கள் கொடுத்த அவித்த நெல் விளையவில்லை என்று தெரிந்ததும்
வேறு நெல்லைப் பயன்படுத்தி விளைவிக்க வேண்டும் என்று நினைக்காத ஒரே ஆள் அந்த அறுபதாவது
ஆள் மட்டும்தான்.
மற்ற ஐம்பத்து ஒன்பது பேரும் அமைச்சர்கள் கொடுத்த நெல் விளையவில்லை
என்று தெரிந்ததும் வேறு நெல்லை விதைத்து சிறப்பாக விளைவித்திருந்தார்கள். அரசராக வேண்டும்
என்ற ஆசையில் அவர்கள் உண்மைக்குப் புறம்பாக நடந்து கொண்டார்கள்.
இதை வைத்துதான் மனிதர்கள் உண்மையாக இருப்பதை விரும்புவதில்லை
என்றும், அவர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டாலும் அவர்களின் ஆசைகள் அவர்களை
உண்மையாக இருக்க விடுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது உங்களிடம் ஒரு கேள்வி. அந்த அறுபது பேரில் நீங்கள்
ஒருவராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
விளையாத நெல்லைக் கொடுத்த அமைச்சர்கள் மேல் வழக்குத் தொடுத்திருப்பேன்
என்கிறீர்களா? அப்படியென்றால் இந்தக் காலத்துக்குப் பொருத்தமான அரசர் நீங்கள்தான்.
*****
No comments:
Post a Comment