Wednesday, 23 November 2022

வ.உ.சி. பற்றிப் படித்ததில் வலித்தது

வ.உ.சி. பற்றிப் படித்ததில் வலித்தது

வழக்கமாகப் ‘படித்ததில் பிடித்தது’ என்று பகிர்ந்த செய்திகளுக்கு மாறாகப் ‘படித்ததில் வலித்தது’ என்று பகிரத்தக்க அளவில் இப்பகிர்வு கனமான பகிர்வு. இப்பதிவும் முகநூலிலும், புலனத்திலும் பலமுறை பகிரப்பட்ட பகிர்வுதான் என்றாலும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.

வ.உ.சிதம்பரனாரே கூறுவது போலவும் வ.உ.சிதம்பரனாரைப் பற்றிக் கூறுவது போலவும் இருந்த அப்பகிர்வை நீங்களும் படித்துப் பாருங்கள்.

வ.உ.சி. கூறுவது போன்று இருந்த பகிர்வுகள் :

1) எனக்கு ஆங்கில அரசு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியதை அறிந்த என் தம்பி மீனாட்சி சுந்தரம் மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்கிறான். நான் தற்போது கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறேன். ஒருவேளை என் தம்பி தூத்துக்குடி வீதிகளில் உணவில்லாமல் அலைந்தால், என் உழைப்பை எண்ணிப் பார்த்து அவனுக்கு ஒரு கவளம் சோறு கொடுங்கள்.

அவன் உடையில்லாமல் நிர்வாணமாய் வீதி வீதியாய் அலைவதற்கான வாய்ப்பு இருக்கும். அப்படி அவனை பார்க்கும் நிலை ஏற்பட்டால், என்னை நினைத்து பார்த்து அவனுக்கு ஒரு முழம் வேட்டி கொடுங்கள்.

2).நான் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றபோது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் முழுவம் கடைகள் அடைக்கப்பட்டு மிகப்பெரிய எதிர்ப்பு அடையாளமாய் அந்த மண் விளங்கியது. ஆனால் பல வருடங்கள் சிறைச்சாலையில் கிடந்துவிட்டு வெளியில் வந்த போது, எனது உறவுகள் நான்கு பேர் மட்டுமே வரவேற்க இருந்தார்கள். இந்த நன்றி கெட்ட தமிழர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்.

3) எனது தாத்தா மிகப்பெரிய வழக்கறிஞர். எனது தந்தை மிகப்பெரிய வழக்கறிஞர். அந்தக் குடும்பத்தில் பிறந்த நானும் வழக்கறிஞரானேன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் எந்த பணியும் செய்யாமல் ஆங்கிலேயன் முடக்கி விட்டான். சிறை விட்டு வெளியே வந்த நான் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உணவுக்கு வழியில்லாமல் ஒரு மளிகை கடை வைத்தேன். அதுவும் நஷ்டமானது. பிறகு பெரம்பூரில் ஒரு மண்ணெண்ணெய் கடை வைத்தேன். அதுவும் நஷ்டமாயினது .மிக வசதியான குடும்பத்தில் பிறந்த நான் என்னை தேடி வந்த தமிழ் புலவர்களுக்கும், ஏழை மக்களுக்கும், வான் மழை பொழிவதைப் போல வாரி வாரி வழங்கினேன். ஆனால் இன்று ஒருவேளை உணவிற்கு வழியில்லாமல், வீடு வீடாய் சென்று கையேந்துகிற நிலை ஏற்பட்டிருப்பதை இருப்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

இத்துடன் வ.உ.சிதம்பரனார் பற்றிய பின்வரும் குறிப்புகளும் அப்பகிர்வில் இருந்தன. அப்பகிர்வுகளாவன,

1) ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த விருதுநகர் ராமையா தேசிகர் என்பவரை தன் இல்லத்தில் தங்க வைத்து ஆதரவளித்தவர். தமிழ் இலக்கியத்தை கற்றுத் தந்தவர். அதைப்போலவே சென்னையிலிருந்து சுவாமி சகஜானந்தவை தனது இல்லத்திற்கு வரவழைத்து இலக்கியத்தைக் கசடற கற்றுக் கொடுத்த ஆசிரியர் இவர். இப்படி சாதிய கட்டமைப்பு உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்து, சாதியத்தை உடைத்த போராளி வ .உ. சி. அவர்கள்.

2) 1934 இல் தூத்துக்குடிக்கு வர இருந்த காந்தியடிகளுக்கு வரவேற்பு தருவது தொடர்பான ஆயத்த கூட்டத்தில், தலைமை வகித்து பேசிய வ.உ.சி. தன் தலைமை உரையில், மக்கள் யாவரும் தங்களுடைய மூடநம்பிக்கைகளை விட்டு விட வேண்டும். தீண்டாமை எனும் பேயைத் துரத்த வேண்டும் என்று பேசினார்.

3) தனது மனைவி வள்ளியம்மையோடு ஆறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த வ.உ.சி, மனைவியை எப்படி நேசித்திருப்பார் என்பதற்கு ஒரு உதாரணமாய் மனைவியைப் போற்றுகிற வகையில் 215 வெண்பாக்களை ‘வள்ளியம்மை சரித்திரம்’ என்கிற பெயரில் வெளியிட்டவர்.

4) ஆங்கிலேயருக்கு எதிராய் இரண்டு சுதேசி கப்பல்களை இயக்கிய பெருமைக்குரியவர்.

5). சுப்பிரமணிய சிவாவோடும், பாரதியாரோடும் நெருங்கிய நட்பு பாராட்டியவர். வ.உ.சி. கை கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் செக்கிழுத்த செய்தியை பாரதியார் "இந்தியா இதழில், 

 மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்

நூலோர்கள் செக்கடியில் நோவதும்

காண்கிலையோ!” என்று பதிவு செய்திருக்கிறார்.

6) “நீங்கள்  சிறையில் செக்கிழுத்து இருக்கிறீர்கள். இந்திய விடுதலைக்காக. அது உங்களுக்கு மிகப்பெரிய மன வருத்தத்தை தரவில்லையா? சுமையை தரவில்லையா?” என்கிற கேள்விக்கு, “நான் சிறையில் செக்கை மட்டும் இழுத்த்திருந்தால் அது சுமையாக இருந்திருக்கும். ஆனால் நானோ செக்கோடு சேர்த்து  இந்திய விடுதலையும் அல்லவா சேர்த்து இழுத்தேன். எனவே அது எனக்கு சுமையை தரவில்லை. சுகத்தையே தந்தது.” என்று பதில் அளித்தவர் வ. உ. சி.

7) அந்த மகத்தான போராளி கடைசி மூச்சின் சுவாசத்தில் கூட அவர் தேசத்தையே நினைத்திருந்தார். அவரின் வேண்டுகோளின் படி காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதன் என்பவர் பாரதியாரின்  “என்று தனியும் இந்த சுதந்திர தாகம்” என்கிற பாடலைப் பாட அதைக் கேட்டபடியே வ .உ.சி.யின் கடைசி மூச்சு காற்றில் கலந்தது.

8) இந்திய விடுதலைக்காக தன் வாழ்க்கையே, ஒப்புக்கொடுத்த வ. உ .சி. இந்திய விடுதலை கிடைப்பதற்கு 11 ஆண்டுக்கு முன்பே 1936 இல் இறந்தார். விடுதலையை பார்க்காமல் இறந்த  சோக வரலாறு இவருக்கு உண்டு.

இப்படி சுதந்திரப் போராட்ட வீரராகச் சாதி ஒழிப்பு போராளியாகப் பகுத்தறிவு கொள்கையைத் தூக்கிப் பிடித்த வ.உ.சி.க்கு வீரவணக்கம் செலுத்துவோம்!

*****

No comments:

Post a Comment