தினம் ஒரு கதை / இன்று ஒரு கதை / ஒரு
ஊர்ல...
ஒரு ஊர்ல... என்று தாத்தாவோ, பாட்டியோ,
பெரியப்பவோ, சித்தப்பவோ, மாமாவோ, பெரியம்மாவோ, சித்தியோ, அத்தையோ கதை சொல்ல
ஆரம்பித்து விட்டால் கண்கள் விரியும் அகலத்துக்கு அளவில்லை. காதுகள் நீளும் தூரத்தைச்
சொல்ல வேண்டியதில்லை. மனசு முழுவதும் மின்னல் வெட்ட ஆரம்பித்து விடும். சுற்றிலும்
பட்டாம்பூச்சிகள் பறப்பது போல அப்படி ஒரு சந்தோஷம் உண்டாகி விடும்.
கதை கேட்டு வளர்ந்த மரபு நம்முடையது. கதைசொல்லிகள்
இல்லாத வீடுகள் நம் சமூகத்தில் கிடையாது. ஒரே கதைதான் என்றாலும், அது யார் யாரோ சொன்ன
கதைதான் என்றாலும் அது தாத்தா சொல்லும் போது தாத்தாவினுடைய கதையாகி விடுகிறது. அதே
கதையைப் பாட்டிச் சொன்னால் பாட்டியினுடைய கதையாகி விடுகிறது. அத்தைச் சொன்னால் அது
அத்தையின் கதைதான்.
கதை ஒன்றுதான் என்றாலும் சொல்பவரின் வார்த்தைகள்,
உணர்ச்சிகள், உடல்மொழிகள் எல்லாம் அவருடையது அல்லவா! அப்படிக் கதை கேட்டு தாத்தா சொன்ன
கதைகளில் பிடித்தமான கதை தாத்தா கதையாக, மாமா சொன்னதில் பிடித்த கதை மாமா கதையாக,
சித்தி சொன்னதில் பிடித்த கதை சித்தி கதையாக, அத்தை சொன்னதில் பிடித்த கதை அத்தை
கதையாக பெயர் பெற்ற கதைகள் எத்தனையோ உள்ளன.
தொலைக்காட்சி, இணையம், கைபேசி என்று எவ்வளவோ
வந்தாலும் இன்னும் கதை கேட்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை. பாட்டா? கதையா? விளையாட்டா?
என்றால்.... முதலில் கதைதான் பிள்ளைகளின் பிரியத்திற்குரியது.
ஏதோ ஒரு ஞாபகத்தில் நேரடியாக பாடத்தை
நடத்த தொடங்கி விட்டால்... "அய்ய்யா..." என்று இழுக்கும் ராகத்தில் புரிந்த
விடும் கதை சொல்லாமல் பாடத்தை ஆரம்பித்து விட்டது. அப்படி எத்தனையோ கதைகள் பிள்ளைகளிடம்
சொல்லிய பின்பும் அவர்களின் கதை கேட்கும் ஆசை மட்டும் நின்ற பாடில்லை. கதைகளைக் கேட்பதைப்
பொருத்த வரையில் குழந்தைகளின் மனது நிறையாத அட்சயப் பாத்திரம்தான். நேற்று சொன்ன
கதையையே இன்று சொன்னாலும் அவர்களுக்கு அது ஏற்புடையதுதான், சந்தோஷம்தான். அவர்களின்
ஒரே நிபந்தனை தினம் ஒரு கதை. அதுவும் பாடம் ஆரம்பிப்பதற்கு முன். அப்படிச் சொன்ன கதைகளைத்
தொகுத்தால் என்னவென்று ஓர் எண்ணம் தோன்றி பல ஆண்டுகள் ஆகப் போகின்றன. எல்லாம் தெரிந்த
கதைகள்தானே! இதைத் தொகுத்து என்னவாகப் போகிறது என்ற நியாயமான கேள்விக்கு என்ன பதில்
சொல்வது? பதில் இல்லை!
ஒருநாள் பிள்ளைகள் வந்து, "இந்தக்
கதைகள உங்க வலைப்பூவுல போடுங்க அய்யா! படிச்சுப் பாக்குறோம்!" என்கிறார்கள்.
பிள்ளைகள் கேட்ட பிறகு அதற்கு மறுப்பேது?
தினம் ஒரு கதையைப் போட ஆசை. முடியுமா?
என்பது தெரியவில்லை. தினம் தட்டச்சு செய்ய வேண்டுமே! தினம் ஒன்று போட முடியாவிட்டாலும்
வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து கதைகளாவது போட முடியும் என்று நம்புகிறேன். பார்க்கலாம்.
இதைப் பற்றி உங்களது கருத்துகளையும் கொஞ்சம் சொல்லுங்கள். அத்துடன் பிள்ளைகளுடான
அனுபவங்களையும் அவ்வபோது எழுத ஆசை.
"இன்று ஒரு கதை' என்று தலைப்பு வைத்துக்
கொள்ளலாம் என்று நினைக்கிறேன். தேவைப்பட்டால் பிற்பாடு மாற்றிக் கொள்வோம்.
என்ன கதைகள் ரொம்ப சாதாரணமாக இருக்கிறது
என்று திட்டி விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
*****
கெட்டப் பழக்கங்கள் ஏன் வேண்டாம் என்றால்...
கருப்பாக ஆற்றின் வழியே போனதைப் புதையல்
என்று நினைத்துப் பிடித்துக் கொண்டான்.
கரையில் நின்றவர்கள் அதைப் பிடிக்க வேண்டாம்
சத்தம் போட்டனர்.
அவன் கேட்கவில்லை.
அவன் எதைப் பிடித்தானோ அது இப்போது அவனை
ஆற்றோடு இழுத்துக் கொண்டு போக ஆரம்பித்தது.
மறுபடியும் கரையில் நின்றவர்கள் இப்போதாவது
அதை விட்டு விடு என்று சத்தம் போட்டனர்.
தான் அதை விட்டு விட்டதாகவும், அது தன்னை
விடாமல் பிடித்து இழுத்துக் கொண்டு போவதாகவும் சத்தமிட்டான் ஆற்றோடு போனவன்.
ஆற்றோடு போன கரடியைப் புதையல் என நினைத்துப்
பிடித்துக் கொண்டவன் அதன் பிடியிலிருந்து விடுபட முடியாமல் ஆற்றோடு போய்க் கொண்டிருந்தான்.
கெட்ட பழக்கங்கள் கரடியைப் போன்றவை. நாமாக
அதைப் பிடித்துக் கொண்டாலும், அதுவாக நம்மைப் பிடித்துக் கொண்டாலும் அது நம்மை விடுவதில்லை.
கெட்டப் பழக்கங்கள் ஏன் வேண்டாம் என்றால்...
பிடித்துக் கொண்ட பின் நாம் விட நினைத்தாலும்
கெட்டப் பழக்கங்கள் நம்மை விடுவதில்லை.
இதன் யூடியூப் இணைப்பிற்கு...
https://youtu.be/lpJfx6Bh9dA
*****
Simple and nice message ��
ReplyDelete