மாணவர்களுக்கான நேர நிர்வாகம் / நேர
நிர்வாகம்
பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த செய்திகள்
என்றாலும் நேர மேலாண்மை, ஆளுமைத் திறன் பயிற்சி சார்ந்த செய்திகள் நகர்ப்புற மாணவர்களுக்கானது
என்பது போல ஒரு தோற்றம் இருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு அதன் நுட்பங்கள் அதிகம்
தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது.
அதனால் பலருக்கும் தெரிந்த செய்திகளாக
இருந்தாலும் இது போன்ற நேர நிர்வாகம் மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சிப் பற்றியும் கொஞ்சம்
எழுதுங்கள் என்று நம் நண்பர்கள் ஒரு யோசனையை முன் வைத்தனர். அதன் பயன் கிராமப்புற
மாணவர்களுக்குப் போய் சேர வேண்டும் என்பது அவர்களது நோக்கம். கிராமப்புற பள்ளிகளில்
பணியாற்றும் நம் ஆசிரிய நண்பர்கள் நம் வலைபூவோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதால்
அவர்கள் மூலமாக அந்தச் செய்திகள் அப்பிள்ளைகளைச் சென்றடையும் என்பது அவர்களுடைய கருத்து.
இது போன்ற விசயம் தெரிந்த நம் வலைப்பூவின்
நண்பர்கள் இதைப் படித்துக் கடுப்பாகி விடுவீர்கள் என்பது தெரிந்தாலும் நண்பர்களின்
யோசனையில் இருக்கும் தார்மீக நியாயத்தை மறுக்க முடியவில்லை. ஆகவே விவரம் அறிந்த நண்பர்கள்
இதைத் தொடர்ந்து வாசிப்பதைத் தவிர்த்து விடலாம். ஆகவே தலைப்பிடும் போதே தலைப்புக்கு
அருகில் / போட்டு நேர நிர்வாகம் அல்லது ஆளுமை என்று போட்டு விடலாம் என்று இருக்கிறேன்.
இனி மாணவர்களுக்கான நேர நிர்வாகம் பற்றிக்
காண்போம்.
நம் நேர நிர்வாகம் வேலைக்கானது. நம் வேலைகளைச்
சரியான நேரத்துக்குள் முடிக்க முடியுமானால் நாம் சரியான நேர நிர்வாகத்தைக் கடைபிடிக்கிறோம்
எனலாம்.
நமது வேலைகளை நேரத்திற்குள் முடிக்க முடியாமல்
தடுமாறுகிறோம் என்றால் நம் நேர நிர்வாக அணுகுமுறையை மாற்றிப் பார்க்கலாம்.
நேரமும் வேலையும் ஒன்றுக்கொன்று நேரடித்
தொடர்பில் உள்ளது. அதாவது நாம் செய்யும் வேலைகள் நேரத்தோடும், நேரம் நாம் செய்யும்
வேலைகளோடும் தொடர்பு கொண்டுள்ளது.
நாம் செய்யும் வேலைகளிலிருந்தே நாம் நேர
நிர்வாகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் நாம் செய்யும் வேலைகளை,
1. முக்கியம்,
2. அவரசம் என இரண்டாகப் பகுத்துக் கொள்ளலாம்.
இப்போது முக்கியம் அவசரம் என்று இந்த
இரண்டு தலைப்புகளை வைத்துக் கொண்டு வேலைகளை,
1. முக்கியமான அவசரமான வேலைகள்,
2. முக்கியமில்லாத ஆனால அவசரமாக முடிக்க
வேண்டிய வேலைகள்,
3. முக்கியமான ஆனால் அவசரமில்லாத வேலைகள்,
4. முக்கியமும் இல்லாத அவசரமும் இல்லாத
வேலைகள்
என
நான்காகப் பிரித்து விடலாம்.
முக்கியமான அவசரமான வேலைகளை அப்போதே செய்து
முடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. நாளை தேர்வு எனும் போது இன்று அதற்காகப் படிக்க
வேண்டியிருப்பது என்பது முக்கியமான மற்றும் அவசரமான வேலையாகும். அதை தள்ளிப்போடவோ,
தவிர்க்கவோ முடியாது என்பதால் அது முக்கியமான அவசரமான வேலையின் இடத்தில் வரும். நாம்
செய்யும் வேலைகளில் முதன்மையாக முக்கியமாக முடிக்க வேண்டிய பட்டியிலில் முதலிடத்தில்
இருப்பவை இந்த வகை வேலைகள்தான்.
இரண்டாவதாக முக்கியமில்லாத ஆனால அவசரமான
வேலைகள். குறிப்பிட்ட நேரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டிய ஒப்படைப்புகள், செயல்திட்டங்கள்,
புள்ளிவிவரங்கள் போன்றவைகள் இந்த இரண்டாம் வகைப் பட்டியலில் அடங்கும். அந்த ஒப்படைப்புகளோ,
செயல்திட்டங்களோ, புள்ளிவிவரங்களோ உங்களுக்கு முக்கியம் இல்லாதவைகளாகப் படலாம். உங்களது
ஆர்வத்தையோ, சிந்தனையையோ தூண்டக் கூடியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறித்த நேரத்தில்
அது சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசரம். குறித்த கால கெடுவைத் தாண்டி அவைச் சமர்ப்பிக்கப்பட்டால்
அது ஏற்றுக் கொள்ளப்படாத நிலையை அடைந்து விடக் கூடும். ஆதலால் இது போன்ற வேலைகளைச்
செய்வதை நம் வேலைப் பட்டியலின் நேர நிர்வாக மேலாண்மையில் இரண்டாவதாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
மூன்றாவதாக முக்கியமான ஆனால் அவசரம் காட்டத்
தேவையில்லாத வேலைகள். எல்லா வேலைகளும் அடிப்படையில் இந்த நிலையில் இருந்தே இரண்டாவது
அல்லது முதல் நிலையை நோக்கி நகர்கின்றன. ஆகையால் மூன்றாவது நிலையில் இருக்கும் இந்த
வகை வேலைகளை அவ்வபோது தள்ளிப்போடாமல் சன்னமாக செய்து கொண்டே வந்தால் எந்த வேலையையும்
அவசர அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவே ஏற்படாது. உதாரணத்துக்கு தேர்வுக்கு ஒரு
மாத காலம் இருக்கும் போது சன்னமாகப் படிக்க வேண்டியது முக்கியம். இந்த வேலையை உடனடியாகப்
படித்து ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டிய அவசரம் இல்லைதான். ஆனால் படித்துக் கொண்டே
இருக்க வேண்டியது முக்கியம். பிறகு தேர்வு நெருங்க சில நாட்கள் இருக்கும் போது பார்த்துக்
கொள்ளலாம் என்று நினைத்தால் அவசரம் காட்ட வேண்டாத முக்கியமான இந்த வேலையானது அவசரம்
மற்றும் முக்கியமாக முடிக்க வேண்டிய முதல் நிலைக்கு நகர்ந்து பதற்றத்தையும், பரபரப்பையும்
உண்டாக்கி விடும். ஆகையால் நம் வேலைப்பட்டியிலில் இந்த வகை வேலைகள் மூன்றாவது இடத்தில்
இருக்க வேண்டும். மூன்றாவது இடத்தில் இருக்கும் இவ்வேலை சிறிது சிறிதாக அன்றன்றைக்குக்
குறிப்பிட்ட அளவில் முடிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
நான்காவதாக முக்கியமும் இல்லாத அவசரமும்
காட்ட வேண்டாத வேலைகள். தொலைக்காட்சிப் பார்த்தல், கிரிக்கெட் மேட்ச் பார்த்தல், வெட்டி
அரட்டை அடித்தல் போன்ற வேலைகள் எல்லாம் இந்த வகையறாவில் வரும். இந்த வேலைகள் பெரும்பாலும்
எந்த முக்கியத்துவமும் இல்லாதவை. அவசரம் அவசரமாக அப்போதே செய்து முடிக்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லாதவை. இந்த நான்காம் வகை வேலைகளை ஒரு பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும்
போது பார்த்துக் கொள்ளலாம். முக்கிய வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய நிலையில் இந்த
நான்காம் வகை வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் வீணாகப் போகப் போவது நமது நேரம்தான்.
இது போன்ற வேலைகளுக்கு நம் நேர நிர்வாகத் திட்டமிடலில் கடைசி இடம்தான் கொடுக்க வேண்டும்.
அதாவது நேரம் இருந்தால் அன்றைக்கு இந்த வேலைகளை ஒரு பொழுதுபோக்காகச் செய்யலாம். இல்லையென்றால்
விட்டு விடலாம். அதனால் எந்தப் பாதிப்பும் வந்து விடப் போவதில்லை.
நேர நிர்வாகத்தில் வேலைக்கானத் திட்டமிடல்
முக்கியமானது. முக்கியமான வேலையைச் செய்து முடிக்க வேண்டிய நிலையில் நாம் செய்ய வேண்டியது
முதல் வகை வேலையா, இரண்டாம் வகை வேலையா, மூன்றாம் வகை வேலையா, நான்காம் வகை வேலையா
என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
நாளை தேர்வுக்குப் படிக்க வேண்டிய நிலையில்
முக்கியமான அவசரமான அந்த வேலையைத்தான் நாம் பார்க்க வேண்டியிருக்கும். அதை விடுத்து
நான்காம் வகையான முக்கியமும் அவசரமும் இல்லாத தொலைக்காட்சிப் பார்த்தலை அப்போது தேர்வு
செய்து செய்து கொண்டிருக்க முடியாது. ஒருவேளை அப்படிச் செய்தால் தேர்வின் தோல்விக்குப்
பின், செய்யத் தவறிய அந்த வேலையை மறுபடியும் முக்கியமான அவசரமான வேலையாகக் கருதிச்
செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். முறையாக அப்போதே அந்த வேலையை முக்கியமான
அவசரமான வேலையாகக் கருதிச் செய்திருந்தால் அதே வேலையை மீண்டும் செய்து காலத்தை அதற்காக
மறுபடியும் ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காதுதானே.
ஆக நேர நிர்வாகத்தில் வேலைகளைச் சரியான
பட்டியல்படி சரியாக நிர்வகிக்க வேண்டும். எந்த வேலைகளுக்கு முதன்மை கொடுத்து செய்ய
வேண்டுமோ அந்த வேலைக்கு முதன்மை கொடுத்தும், எந்த வேலையை நேரம் கிடைக்கும் பாது செய்து
கொள்ளலாமோ அந்த வேலையை நேரம் கிடைக்கும் போதும் செய்வதில் விழிப்பாகவும், கவனமாகவும்
இருக்க வேண்டும்.
நேர நிர்வாகத்தில் வேலைக்கான இப்பட்டியல்
உங்களுக்கு நிறையவே உதவக்கூடும். நீங்கள் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் இந்த நான்கு
வகை வேலைகளுக்குள் அடக்கி விடலாம். அவ்வாறு அடக்கிய பிறகு எந்தெந்த வேலைகளை எந்தெந்த
நேரத்தில் எப்போது செய்ய வேண்டும் என்ற தெளிவு உங்களுக்கு வந்து விடும்.
நேர நிர்வாகத்தில் வேலை பற்றி இக்கருத்து
உங்களுக்கு நிறையவே உதவக் கூடும். இது போன்ற உங்களுக்குத் தெரிந்த கருத்துகளையும்
பகிர்ந்து கொள்ளுங்கள். அது எவ்வளவு மிக எளிமையான கருத்தாக இருந்தாலும், அனைவரும்
அறிந்த கருத்தாக இருந்தாலும் நம் வலைப்பூவைப் படிப்பவர்களுக்கு அது நிச்சயம் பயன்தரும்
என்று நம்புகிறேன்.
மாணவர்களுக்கான இந்நேர நிர்வாகக் கருத்தை
தொகுத்துக் கூறும் கீழே உள்ள யூடியூப் காணொலியும் உங்களுக்கு உதவக் கூடும். காணொலியைச்
சொடுக்கிப் பாருங்கள்!
*****
No comments:
Post a Comment