Friday 20 September 2019

அன்றன்றே அன்றன்றை முடிப்போம் / இன்று ஒரு கதை



            ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது.
            அதே காட்டில் நான்கு எருதுகளும் இருந்தன.
            கொழுகொழுவென்று இருந்த எருதுகளைப் பார்த்த சிங்கத்துக்கு எருதுகளைச் சாப்பிட ஆசை உண்டானது.
            நான்கு எருதுகளும் ஒன்றாக மேய்ந்து கொண்டிருக்கும் நேரமாகப் பார்த்து எருதுகளைச் சாப்பிடப் போனது சிங்கம்.
            சிங்கத்தைப் பார்த்த நான்கு எருதுகளும் அதை முட்டித் தூக்கியதில், காட்டுக்கு வெளியே பஞ்சாய்ப் பறந்து போய் விழுந்தது.
            காட்டுக்கு வெளியே விழுந்த சிங்கம் யோசித்தது.
            எருதுகள் தனித்தனியாய் மேயும் போது வேட்டையாடிச் சாப்பிடுவது என தீர்மானித்தது.
            அப்படியே தனித்தனியாய் எருதுகள் மேய்ந்த போது ஒவ்வொன்றாய் வேட்டையாடிச் சாப்பிட்டது.
            தனித்தனியாய் இருந்த எருதுகளை சிங்கம் அசால்ட்டாய் வேட்டையாடி, ஆசை தீர சாப்பிட்டது.
            படிப்பில் நீங்கள் சிங்கமாக இருக்கலாம். பாடங்கள் எருதுகளைப் போல இருக்கலாம்.
            எருதுகளை மொத்தமாய் வேட்டையாட நினைத்தால் நீங்கள் சிங்கமாகவே இருந்தாலும் தூக்கி வீசப்படுவீர்கள்.
            ஒவ்வொன்றாய் வேட்டையாடினால் மொத்த எருதுகளையும் வேட்டையாடி முடிப்பீர்கள்.
            படிப்புச் சிங்கங்களே! நமது பாட எருதுகளும் அப்படித்தான்! மொத்தமாய்ச் சேர்த்து வைத்துப் படிக்க நினைத்தால் பாடங்கள் உங்களை விழுங்குவது போல இருக்கும். ஒவ்வொன்றாய்ப் படிக்கும் போது பாடங்களை நீங்கள் விழுங்குவது போல இருக்கும்.
            அன்றன்று படிக்க வேண்டியதை அன்றன்றே முடிப்போம்! பாடங்கள் ஒவ்வொன்றையும் ஆசை தீர வேட்டையாடி ருசிப்போம்!
*****
கதையின் யூடியூப் இணைப்பிற்குக் கீழே சொடுக்கவும் :


No comments:

Post a Comment