Wednesday 18 September 2019

உணவுக் கடை வைப்போமா? / எளிய கணித அணுகுமுறைகள்


உணவுக் கடை வைப்போமா? / எளிய கணித அணுகுமுறைகள்
            மாணவர்களைப் பெருக்கல் வாய்பாட்டைப் படிக்க வைப்பதும் அதை மனப்பாடம் செய்ய வைப்பதும் ஒரு வகைச் சவால்தான். ஏன் அவர்கள் வாய்பாட்டை நன்றாகப் படித்து மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை உணர செய்து விட்டால் அவர்களாகவே வாய்பாட்டைப் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டு விடுவார்கள். அதற்கான செயல்பாடுதான் இந்த 'உணவுக் கடை வைப்போமா?' என்ற செயல்பாடு.
            வகுப்பறைக்குச் சென்றதும் நான் கரும்பலகையில் இப்படி எழுதுகிறேன்.
            "இன்றைய உணவு விலை விவரம்
            இட்டிலி - ரூ. 4
            தோசை - ரூ. 8
            காபி - ரூ. 9"
                        - இப்படி எழுதி விட்டு மாணவர்களைப் பார்த்து இன்று நான் இரண்டு இட்டிலி, ஒரு தோசை, ஒரு காபி சாப்பிட்டேன் என்றால் நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று புரியாததைப் போல தலையைச் சொரிகிறேன். மாணவர்கள் நான் சாப்பிட்ட கணக்கைக் கொண்டு ரூ. 25 என்று கூறுகிறார்கள். ஆசிரியர் கஷ்டப்படுவதை எந்த மாணவர்களால் பொறுக்க முடியும் என்பதால் உடனடியாக கஷ்டப்பட்டாவது பெருக்கிக் கூட்டி விடையைச் சொல்லி விடுகிறார்கள் பிள்ளைகள்.
            இப்போது நான் மாணவர்களைப் பார்த்துச் சொல்கிறேன். "இப்போது நான் சாப்பிட்டு விட்டேன். நீங்களும் உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிட்டு விட்டு எவ்வளவு ரூபாய்க்குச் சாப்பிட்டீர்கள்? என்ற கணக்கைச் சொல்லுங்கள்!" என்கிறேன்.
            ஒரு மாணவர் எழுந்திரித்து, "அய்யா! நான் நான்கு இட்டிலி, மூன்று தோசை, இரண்டு காபி சாப்பிடுகிறேன்!" என்று சொல்லி விட்டு, "நந்நான்கு பதினாறு, மூவெட்டு இருபத்து நான்கு, இரண்டொன்பது பதினெட்டு ஆக ஐம்பத்தெட்டு" என்கிறார். இதை அவர் மெதுவாக சொல்வது என்றாலும் அதற்கான காலத்தை அவருக்குத் தந்து நான் காத்திருக்கிறேன்.
            இப்படியே ஒவ்வொரு மாணவராக இட்டிலி, தோசை, காபியை இஷ்டத்துக்குச் சாப்பிட்டு விட்டு கணக்கைச் சொல்கிறார்.
            திடீரென ஒரு மாணவர் எழுந்திரித்து, "நான் நூறு இட்டிலி, ஐம்பது தோசை, இருபத்தைந்து காபி!" என்று சொல்லி அதற்கும் கணக்கு சொல்லி விடையைச் சொல்கிறார்.
            வகுப்பறை வேடிக்கையாக அதே நேரத்தில் வினோதமாகப் போகிறது. அன்றிலிருந்து கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளுக்காக நாங்கள் கடை வைக்க ஆரம்பித்து விட்டோம்.
            உணவுக் கடையில் ஆரம்பித்த நாங்கள் பல்வேறு கடைகளை வைத்துக் கொண்டே போகிறோம்.
            நீங்களும் உணவுக் கடை வைக்கிறோம். வித விதமாக சாப்பிடுகிறோம்.
            ஜவுளிக் கடை வைக்கிறோம். வித விதமாக உடுத்துகிறோம்.
            கடை வைத்தால் போதும் கணக்கிற்கான விடையை மாணவர்களே கண்டுபிடித்துச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
            இந்த எண்ணோடு இந்த எண்ணைக் கூட்டு, இந்த எண்ணைக் கழி, இந்த எண்ணைப் பெருக்கு, இந்த எண்ணை வகுத்துப் பார் என்று சொல்வதை விட இம்முறை மாணவர்களை எளிமையாக கூட்டச் செய்கிறது, பெருக்கச் செய்கிறது. மாணவர்கள் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எங்கே யோசிக்க ஆரம்பிக்கிறார்களோ அங்கேயே அவர்களின் கற்றல் வெற்றி பெற்றதாகி விடுகிறது. அதைத் தாண்டி எதையும் ஆசிரியர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் அவர்களாகவே சந்தேகங்களைக் கேட்டுக் கேட்டுக் கற்றுக் கொள்கிறார்கள்.
            நாங்கள் கடை வைத்து விளையாடு இம்முறையை 'கணக்குக் கடை' என்று செல்லமாகப் பெயர் வைத்து கொண்டாடுகிறோம். நீங்களும் கொண்டாடலாம்.
            இந்த முறை உங்களுக்குப் பிடித்திருந்தால் சொல்லுங்கள்!
            உங்களுக்கு ஏதேனும் அனுபவம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
            மற்றுமொரு நாளில் மற்றுமொரு எளிமையான கணித அணுகுமுறையோடு சந்திப்போம்!
*****

No comments:

Post a Comment