Monday, 16 September 2019

சந்திராயன் - பயோடேட்டா



            சந்திராயனைப் பற்றிக் கேட்டு சில நாட்கள் பிள்ளைகள் தொலைத்து எடுத்து விட்டார்கள்.
            எந்தப் பிள்ளைகளிடம் நிலவில் பாட்டி வடை சுடும் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தோமோ, அதே பிள்ளைகளிடம் சந்திராயன் கதையைப் பற்றிப் பேசுவதைப் பற்றி நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. பிள்ளைகளும் நிலவில் பாட்டி வடை சுட்ட கதையைக் கேட்பதிலிருந்து சந்திராயனின் கதையைக் கேட்பதற்கு மாறி விட்டார்கள்.
            சந்திராயனின் கதை என்பது சந்திராயனின் கதை மட்டுமா என்ன? சந்திராயனோடு இன்று உலகமே தேடித் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர் சிவனின் கதை, மயில்சாமி அண்ணாதுரையின் கதை, அவர்களுக்கெல்லாம் முன்னோடியான அப்துல்கலாமின் கதை என்று எவ்வளவு கதைகள்.
            அதோடு இவர்கள் எல்லாரும் அரசுப் பள்ளியிலிருந்து படித்து உச்சம் தொட்டவர்கள் என்ற இன்னொரு கதையும் அல்லவா இருக்கிறது! அரசுப் பள்ளியின் அற்புதமான மாணவச் செல்வங்களால் சாத்தியமான கனவல்லவா சந்திராயன் என்பது.
            இந்தப் பிள்ளைகள் கேட்கிறார்கள், "சந்திராயன் 2 லிருந்து சிக்னல் எப்படிங்கய்யா கட் ஆனது? செல்போன் டவர் போல அங்க ஏதும் டவர்லாம் வெச்சிருக்காங்களய்யா?" கேட்க கேட்க பரவசமாக இருக்கிறது. நம் பிள்ளைகள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.
            இப்படிக் கேள்வி கேட்கிறார்களே! எப்படிப் பதில் சொல்வது என்று திருக்குவளை அண்ணா பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக ராம் பிரகாஷ் ஐயாவிடம் கேட்டேன்.
            அவர் சொன்ன செய்திகளைச் சொன்னால் மற்ற பிள்ளைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் இல்லையா!
            சந்திராயன் - 2 ஐப் பற்றிப் பார்ப்பதற்கு முன் சந்திராயன் - 1 ஐப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
            சந்திராயன் - 1 வெற்றிகரமாக நிலவைச் சுற்றி சாதனைப் படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதை அதுதான் உலகிற்கு முதன் முதலாக உறுதிப்படுத்தியது. உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வகமாகக் கருதப்படும் நாசாவால் உறுதிப்படுத்த முடியாததை ஆதாரப்பூர்வமாக அதுதான் உறுதிப்படுத்தியது.
            அந்த வகையில் சந்திரயான் - 1 இன் வெற்றி உலகையே இந்தியாவை நோக்கித் தலைநிமிர்ந்து பார்க்க வைத்தது.
            இப்போது சந்திராயன் - 2 க்கு வந்து விடலாம். சந்திராயன் - 1க்குப் பிறகு இப்போது நிலவைச் சுற்றுவதும், படம் பிடிப்பதும் இந்தியாவுக்கு எளிதாகி விட்டது.
            நிலவில் இறங்குவதுதான் அடுத்த இலக்கு. அதற்கான இந்தியாவின் திட்டம்தான் சந்திராயன் - 2.
            சந்திரயான் - 2 இன் பயணம்,
            1. ஆர்பிட்டர்,
            2. லேண்டர்,
            3. ரோவர்
என்ற மூன்று அட்டகாசமான ஆய்வுக்கருவிகளோடு ஆரம்பித்தது. முதலாவதாகச் சொன்ன ஆர்பிட்டர் நிலவைச் சுற்றும். அதை வெற்றிகரமாக இந்தியா செய்து விட்டது. ஆர்பிட்டர் அற்புதமாக நிலவைச் சுற்றி போட்டோக்களை எடுத்துத் தள்ளுகிறது. இரண்டாவதாக லேண்டரும், மூன்றாவதாக லேண்டருக்குள் இருக்கும் ரோவரும் நிலவில் இறங்கி நடந்து ஆய்வு செய்யும். இந்த இரண்டையும் நிலவுக்குள் இறக்கும் போதுதான் தகவல் தொடர்பு அறுந்து விட்டது.
            நிலவில் தரையிறக்குவதை ஷாப்ட் லேண்டிங் என்று சொல்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா சாதித்த இந்தச் சாதனையை அதை விட வலுவாக இந்தியா சாதிக்க நினைத்தது. இந்த மூன்று நாடுகளும் நிலவில் தரையிறக்காத தென்துருவத்தை இதற்காகத் தேர்ந்தெடுத்தது இந்தியா. தென்துருவத்தில் ஷாப்ட் லேண்டிங் செய்வது சவாலானது என்று தெரிந்தும் இந்தியா அதைத் தேர்ந்தெடுத்து முயற்சித்தது. ஏனென்றால் தென்துருவத்தில்தான் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதற்காகத்தான் இந்தியா அதைத் ‍தேர்ந்தெடுத்தது.
            இப்போது தகவல் தொடர்பு அறுந்திருக்கிறது. அதைத் தொடர்பு கொள்ள இந்தியா முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நாசாவும் முயற்சிக்கிறது.
            978 கோடி மதிப்புள்ள ஆய்வு சந்திராயன் - 2.
            உலகின் எந்த நாட்டின் அறிவுத் துணையும், தொழில் நுட்ப உதவியும் இல்லாமல் இந்தியா தன்னுடைய சொந்த அறிவு மற்றும் தொழில்நுட்பத் துணையோடு இதைச் செய்திருக்கிறது.
            இப்போது சந்திராயன் - 2 இன் லேண்டரின் தகவல் தொடர்பு விட்டுப் போயிருந்தாலும், வருங்காலத்தில் நிலவு இந்தியாவுக்குத் தொட்டு விடும் தூரம்தான்.
            நிலா நிலா ஓடி வா! என்று பாடிய நாம் விரைவில் நிலாவில் ஓடிப் பிடித்து விளையாடலாம்.
            நிலவே என்னிடம் நெருங்காதே என்ற திரைப்பாடலை மாற்றி நிலவே உன்னை நெருங்கி விட்டோம் என்று பாடலாம்.
            அதற்கான அத்தனைச் சாத்தியக்கூறுகளையும் நம் விஞ்ஞானிகள் செய்யத்தான் போகிறார்கள்.
            உங்களுக்கு இந்தத் தகவல்கள் பயனுடையதாக இருந்தால் மகிழ்ச்சி. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த தகவல்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்! கூடுதலான தகவல்களையும், விவரங்களையும் பிள்ளைகளிடம் கொண்டு போய் சேர்ப்போம்!
*****

No comments:

Post a Comment