உனது எண்ணோடு விளையாடு / எளிய கணித
அணுகுமுறைகள்
பிள்ளைகளுக்குக் கதை சொல்வதைப் போலவே
கணிதம் கற்றுக் கொடுக்கும் எளிமையான முறைகள் பற்றி எழுதினால் என்ன? என்று நண்பர்கள்
கேட்கிறார்கள். கணிதத்தைச் சுவாரசியமாகக் கற்றுக் கொடுப்பது பற்றி நான் என்னுடைய நண்பர்கள்
மூலம் பெற்றது அநேகம். அதை அநேக நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதன் அவசியத்தை உணர்கிறேன்.
அதே நேரத்தில் இந்தப் பகிர்தலில் ஏற்படும் குறைகளை நான் அறிந்து இருக்கிறேன். அந்த
முறைகள் அநேகமாக பலருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும். பலருக்கும்
தெரிந்த முறைகளைத் தாண்டி புதுமையான எளிமையான கணிதக் கற்பித்தல் பற்றி பகிர்வது என்பது
சவாலானதாகும். எனினும் பகிர்தல் என்ற அடிப்படையில் பகிரும் போது இப்பகிர்தல் மூலமாக
மேலும் சிறந்த கற்பித்தல் முறைகள் நண்பர்களாகிய உங்கள் மூலம் வர வாய்ப்புகள் இருக்கின்றன.
அதைப் பகிர்தலின் மிகப் பெரிய லாபமாகக் கருதுகிறேன். அதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு
இப்பகிர்தலை ஆரம்பிப்பதுதான் சரியாக இருக்கும்.
கணிதத்தில் மெல்ல மலரும் மாணவர்கள் எனப்படும்
மெல்ல கற்கும் மாணவர்கள் சவாலானவர்கள். ஆறாம் வகுப்பிற்கு வந்த பின்னும் அவர்களுக்குக்
கூட்ட, கழிக்க, பெருக்க, வகுக்க கற்றுக் கொடுக்க வேண்டிய அசாதாரணமான கற்பித்தல் சூழ்நிலையை
எதிர்கொள்வதிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம்.
அவர்களுக்கு எண்கள் என்றால் பயமாக இருப்பதால்,
அவர்களுடைய எண்களிலிருந்து ஆரம்பிக்கலாம். அவர்களுக்கு என்று வரிசை எண் இருக்கும் இல்லையா!
ஒன்று, இரண்டு, மூன்று,.... என.
ஒவ்வொரு மாணவரையும் அவர்களுக்குரிய எண்ணைச்
சொல்லச் சொல்லி அந்த எண்ணோடு இரண்டைக் கூட்டிச் சொல்ல வைப்பதிலிருந்துதான் நான்
இந்த மாணவர்களை எதிர்கொள்கிறான்.
உதாரணத்துக்கு ஏழு என்ற வரிசை எண்ணுள்ள
மாணவன் தன்னுடை ஏழு என்ற எண்ணைச் சொல்லி அதோடு இரண்டைக் கூட்டி ஒன்பது என்று சொல்ல
வேண்டும். இப்படியே வகுப்பறை முழுவதும் உள்ள மாணவர்களைக் கூற செய்கிறேன்.
அதைத் தொடர்ந்து அவர்களது வரிசை எண்ணிலிருந்து
இரண்டைக் கழித்துக் கூறச் செய்கிறேன். அதைத் தொடர்ந்து அவர்களது வரிசை எண்ணை இரண்டால்
பெருக்கிக் கூறச் செய்கிறேன். அதைத் தொடர்ந்து அவர்களது வரிசை எண்ணை இரண்டால் வகுத்து
ஈவு, மீதியைக் கூறச் செய்கிறேன்.
இன்று இரண்டால் அவர்களது வரிசை எண்ணில்
கணித அடிப்படைச் செயல்களைச் சொல்ல செய்த பிறகு அடுத்தடுத்த நாட்களில் அவர்களது வரிசை
எண்ணில் மூன்றால், நான்கால், ஐந்தால்,... என்று ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு எண்ணைக் கொண்டு
கணித அடிப்படைச் செயல்களைச் சொல்ல செய்கிறேன்.
இது பிள்ளைகளிடம் நல்ல மாற்றத்தை உண்டு
பண்ணுகிறது.
இதைத் தொடர்ந்து அவர்களது தேர்வு எண்ணை
எடுத்துக் கொண்டு இதே போல இரண்டால் கூட்டச் செய்தல், கழிக்கச் செய்தல், பெருக்கச்
செய்தல், வகுக்கச் செய்தல் என்று நான்கு வகை கணித அடிப்படைச் செயல்களை மனதுக்குள் செய்ய
வைத்து சொல்ல வைக்கிறேன். அதைத் தொடர்ந்து மூன்றால், நான்கால், ஐந்தால்,... என்று
ஒவ்வொரு நாளும் அவர்களது தேர்வு எண்களோடு விளையாட்டுதான்.
அந்த எண் அவர்களது எண்களாக இருப்பதால்
அந்த எண்ணோடு ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்துப் பார்ப்பது
பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்களும் இதை முயன்று பார்க்கலாம். உங்களது
அனுபவத்தைச் சொல்லுங்கள்.
மற்றுமொரு நாளில் வேறொரு எளிய கணித அணுகுமுறையோடு
சந்திப்போம்.
*****
No comments:
Post a Comment