30 ஆண்டுகள் கழித்து 100 ரூபாய் எவ்வளவு ஆகும் தெரியுமா?!
பணவீக்கம் எப்படி வேலை செய்கிறது
என்பதை அறிந்து கொள்ள சதவீதம்தான் உதவுகிறது. சதவீதத்தைப் பயன்படுத்திதானே தனிவட்டி,
கூட்டுவட்டி சார்ந்த கணக்குகளைப் போடுகிறோம். கூட்டுவட்டிக்கான கணக்கை எடுத்துக் கொண்டால்
பணவீக்கம் எப்படி பணத்தின் மதிப்பைக் குறையச் செய்கிறது என்பதையும் செலவு செய்ய வேண்டிய
தொகையை எப்படி உயர்த்துகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணத்துக்கு 100 ரூபாயைக்
கருத்திக் கொள்வோம். இந்த 100 ரூபாயின் மதிப்பு இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து இதே
மதிப்புடன் இருக்குமா? அதாவது இன்றைய தேதியில் 100 ரூபாய் கொடுத்து வாங்கக் கூடிய பொருளை
ஐந்து ஆண்டுகள் கழித்து அதே 100 ரூபாயைக் கொடுத்து வாங்க முடியுமா என்பதுதான் கேள்வி.
அதெப்படி முடியும் என்கிறீர்களா? அப்படியானால் 100 ரூபாய்க்கு என்னவாகி விட்டது?
ஐந்து ஆண்டுகள் கழித்து
100 ரூபாயின் மதிப்பு குறைந்து விடுகிறது. பொருளின் மதிப்பு ஏறி விடுகிறது. எப்படி
100 ரூபாயின் மதிப்பு குறைகிறது? ஏன் குறைய வேண்டும்? பணவீக்கம்தான் காரணம்.
100 ரூபாய் மதிப்புள்ள பொருளின்
விலை ஐந்தாண்டுகள் கழித்து ஏன் ஏறி விடுகிறது? ஏறுவதற்கு என்ன காரணம்? அதற்கும் பணவீக்கம்தான்
காரணம்.
இப்போது நமக்கு ஒரு விசயம்
புரிகிறது அல்லவா! பணவீக்கமானது பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது. பொருளின் மதிப்பை
உயர்த்துகிறது. இந்தப் பணவீக்கத்தின் காரணமாகத்தான் நம்முடைய பாட்டனார்கள் ஐம்பது ரூபாய்க்கு
வாங்கிய ஒரு பவுன் நகையை நாம் தற்போது ஐம்பதாயிரத்துக்கு மேல் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.
பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டும் பொருளின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்
கொண்டே போவதற்கும் காரணம் இந்தப் பணவீக்கம்தான்.
கடந்த காலத்திலிருந்து தற்காலம்
வரை பணவீக்கம் பணத்தின் மதிப்பையும் பொருளின் மதிப்பையும் என்ன செய்திருக்கிறது என்பதை
நாம் ஒரு பவுன் நகையை வைத்து மேலே பார்த்தோம் அல்லவா! இதே போல இந்தப் பணவீக்கம் நிகழ்காலத்திலிருந்து
வருங்காலத்தில் எப்படி ரூபாயின் மதிப்பையும் ஒரு பொருளுக்கான செலவின மதிப்பையும் மாற்றும்
என்பதைப் பார்க்கலாமா?
இப்படிப் பார்ப்பதற்குத்தான்
நமக்குச் சதவீதமும் கூட்டுவட்டிக்கான சூத்திரமும் பயன்படுகிறது. உங்களுக்குத்தான் கூட்டுவட்டிக்கான
சூத்திரம் தெரியுமே.
p(1+i)n என்பதுதானே
அந்தச் சூத்திரம்.
p என்பது தொகை. அதாவது அசல்.
i என்பது வட்டி வீதம்.
n என்பது ஆண்டுக்கணக்கு.
இப்போது பணவீக்கத்தின் சதவீதத்தை
நாம் 5% என வைத்துக் கொள்வோமே. ஏன் அதற்குக் கீழ் இருக்காதா? அல்லது அதற்கு மேல் இருக்காதா?
இருக்கலாம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 5% க்குக் கீழ் இருக்க வாய்ப்புகள் குறைவு.
மேலும் அது 7% வரை கூட அதிகரிக்கலாம். அதைத் தாண்டியும் அதிகரிக்கலாம். இருந்தாலும்
5% என்பதை நாம் சராசரி பணவீக்கமாகக் கொள்ளலாம். அதனால் இந்த 5% என்பதை முதலில் எடுத்துக்
கொண்டு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்தப் பணவீக்கம் 100 ரூபாயை எப்படியெல்லாம்
மதிப்புக் குறைக்கிறது என்பதையும் ஒரு பொருளின் மதிப்பை எப்படி உயர்த்துகிறது என்பதையும்
கீழே உள்ள அட்டவணையில் பார்ப்போம்.
ஆண்டுகள்
|
100
ரூபாய் பணத்தாளின் மதிப்புக் குறைதல்
|
100
ரூபாய் மதிப்புள்ள பொருளின் மதிப்பு அதிகரித்தல்
|
துவக்கம்
|
100
|
100
|
5
|
77
|
128
|
10
|
60
|
163
|
15
|
46
|
208
|
20
|
36
|
265
|
25
|
28
|
338
|
30
|
22
|
431
|
மேலே உள்ள அட்டவணையிலிருந்து
நீங்கள் பல விவரங்களைப் புரிந்து கொள்ள முடியும். ஐந்து ஆண்டுகள் கழித்து ஐந்து சதவீத
பணவீக்கத்தால் 100 ரூபாய் 77 ஆகக் குறைகிறது. அதுவே 100 ரூபாய் இருந்து பொருளின் மதிப்பு
ஐந்து ஆண்டுகள் கழித்து ஐந்து சதவீத பணவீக்கத்தால் 128 ஆகிறது. இப்படியே பத்தாண்டுகள்
கழித்து ரூபாயின் மதிப்பு, பொருளின் மதிப்பு எப்படி ஆகிறது என்பதையும் பாருங்கள்.
15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என பார்த்துக் கொண்டே வந்து 30 ஆண்டுகள் கழித்து
என்னவாகிறது என்று பாருங்கள். 100 ரூபாயின் மதிப்பு 22 ஆகி விடுகிறது. ஆனால் 100 ரூபாய்க்கு
நாம் இன்று வாங்கும் பொருளை 30 ஆண்டுகள் கழித்து வாங்க 431 ரூபாய் தேவைப்படுகிறது.
இதுதான் பணவீக்கம் செய்யும் மாயம்.
இப்போது பணவீக்கம் 7% ஆக
இருந்தால் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் 100 ரூபாயின் மதிப்பும், 100 ரூபாயுள்ள பொருளின்
மதிப்பும் எப்படியெல்லாம் மாறுகிறது அதாவது குறைகிறது மற்றும் அதிகரிக்கிறது என்பதைக்
கீழே உள்ள அட்டவணையின் மூலமாகப் பார்ப்போமா?
ஆண்டுகள்
|
100
ரூபாய் பணத்தாளின் மதிப்புக் குறைதல்
|
100
ரூபாய் மதிப்புள்ள பொருளின் மதிப்பு அதிகரித்தல்
|
துவக்கம்
|
100
|
100
|
5
|
70
|
140
|
10
|
49
|
196
|
15
|
34
|
275
|
20
|
24
|
386
|
25
|
17
|
541
|
30
|
12
|
759
|
7% பணவீக்கம்
என்றால் ஐந்தாண்டுகளில் 100 ரூபாயின் மதிப்பு 70 ஆகக் குறைந்து விடுகிறது. ஆனால்
100 ரூபாயுள்ள பொருளின் மதிப்பு 140 ஆகி விடுவதைப் பாருங்கள். இது இப்படியே ஐந்தாண்டுகளில்
குறைவும் மற்றும் அதிமாகவும் ஆகி முப்பதாண்டுகள் கழித்து என்னவாகிறது பாருங்கள். முப்பதாண்டுகள்
கழித்து உங்கள் 100 ரூபாயின் மதிப்பு 12 ஆகி விடுகிறது. ஆனால் 100 ரூபாய் கொடுத்து
வாங்கிய பொருளை அப்போது 759 கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. அதாவது ஐந்திலிருந்து
ஏழு என்று இரண்டு சதவீதம் பணவீக்கம் அதிகரித்தால் முப்பதாண்டுகள் கழித்து 431க்கு வாங்கிய
பொருளை 759 கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது அல்லவா!
இப்போது யோசித்துப் பாருங்கள்,
இந்தப் பணவீக்கம் 8%, 9%, 10% என அதிகரித்தால் என்னவாகும் என்று?
இந்தப் பணவீக்கக் கணக்குப்
புரிந்தால் நீங்கள் சேமிக்கும் தொகை எத்தகைய வட்டி விகிதத்தில் வளர வேண்டும் என்பதையும்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எப்படியும் பணவீக்கம் 5% க்கு மேல் இருக்கும் என்பதால்
நீங்கள் சேமிக்கும் தொகைக்கான வட்டி விகிதம் அதை விட அதிகமாகக் கூட்டு வட்டியில் வளரும்
விதத்தில் இருக்க வேண்டும்தானே!
நாளை இந்தப் பணவீக்கத்தை
அடிப்படையாகக் கொண்டு மாதம் ரூபாய் 10,000 சம்பாதிக்கும் ஒருவர் ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும்
எவ்வளவு சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.
இத்தகவல்கள் உங்களுக்குப்
பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு
நாளை இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.
நன்றி!
வணக்கம்!
*****