Saturday, 15 January 2022

நா பிறழ் பயிற்சிக்கான தகர வர்க்கப் பாடல்

நா பிறழ் பயிற்சிக்கான தகர வர்க்கப் பாடல்

            ‘நா பிறழ்தல்’ பயிற்சியால் தமிழ் உச்சரிப்பு செம்மையாகும். ‘நா பிறழ்தல்’ பயிற்சிக்கான சொற்றொடர்களும் செய்யுள்களும் தமிழில் நிரம்ப உண்டு. அவற்றில் ஒன்றுதான் கவி காளமேகம் இயற்றிய ‘தத்தித் தாது ஊதுதி’ எனத் தொடங்கும் தகர வர்க்க மடக்கில் அமைந்த கீழ்காணும் பாடல்.

"தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது"

            துவக்கத்தில் இப்பாடலைப் படிப்பதில் சிரமம் இருக்கலாம். கீழ்கண்ட வகையில் பிரித்துப் படிப்பது அச்சிரமத்தைப் போக்க உதவும்.

“தத்தித் தாது ஊதுதி தாது ஊதித் தத்துதி

துத்தித் துதைதி துதை தத்து தாது ஊதுதி

தித்தித்த தித்தித்த தாது எது தித்தித்த

எத் தாதோ தித்தித்த தாது.”

இத்துடன் பாடலின் பொருளையும் அறிந்து கொண்டால் பாடலை ஆர்வமுடன் பயிற்சி செய்ய அது உதவும்.

தத்தி தாது ஊதுதி - தேன் உண்ணும் வண்டானது தத்தி பூவின் தாதினை அதாவது மகரந்தத்தை ஊதி அதாவது உண்டு. வினை ‘தி’ என்பதைக் கொண்டு முடியலாம் என்பதால் ‘ஊது’ என்பது ஊதுதி என அமைந்துள்ளது.

தாது ஊதித் தத்துதி  - மகரந்தத்தை ஊதி அதாவது உண்டதால் தேனுண்ட மயக்கத்தால் தத்தித் தத்தி

துத்தித் துதைதி‘துத்தீ’ என ஒலியெழுப்பியடி அடுத்தப் பூவுக்கு என்று பொருள் கொள்ளுதலோடு துத்தி என்பதைத் துத்திச் செடியாகக் கொண்டு துத்திச் செடியில் உள்ள மலராகப் பொருள் கொள்ளுதலும் உண்டு.

துதைது அத்தாது ஊதுதி - அடுத்தப் பூவுக்குச் சென்று அப்பூவின் தாதினை  ஊதி அதாவது தேனை உண்டு

தித்தித்த தித்தித்த தாது எதுபல பூக்களின் தேனை உண்டதில் தித்தித்த தாது எது? அதாவது தித்தித்த தேன் எது?

தித்தித்த எத் தாதோ - தித்தித்த தேன் உண்ட பூ எதுவோ

தித்தித் தாது  - அப்பூவின் இதழே தித்தித்த இதழ்.

இப்பாடலில் தாது என்பது பூ, பூவின் இதழ், பூவின் தேன் ஆகிய மூன்றையும் முப்பொருளில் குறித்து வருவது கவனிக்கத்தக்கது.

இப்பாடலைப் பன்முறை பயிற்சி செய்து கிட்டிய நாபிறழ் அனுபவத்தை நீங்கள் கருத்துப் பெட்டியில் பகிரலாம்! தங்களின் பகிர்வு தமிழ் கூறும் நல்லுலகுக்கு உந்துதல் தரக் கூடியதாகவும் அமையக் கூடும் அல்லவா!

*****

No comments:

Post a Comment