தடுப்பூசி – நம்பிக்கையின் புலப்பாடு
கொரோனா – தடுப்பூசி குறித்துப் பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன.
இந்நிலையில் பெரும்பான்மையானோர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டும் ஆயிற்று.
அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா
போன்ற நாட்டில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, அனைவரையும் முகக்கவசம் அணியச் செய்வது
போன்றவை சவால் நிறைந்தன.
மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாவிட்டாலும் கொரோனா பரவக் கூடாது,
முகக்கவசம் அணியாவிட்டாலும் பரவக் கூடாது என்றால் தடுப்பூசிதான் அதற்குரிய வழியாகத்
தெரிகிறது.
தற்போது வரை கண்டுபிடித்துள்ள
தடுப்பூசியை இன்னும் மேம்படுத்த வேண்டும், அதன் தடுக்கும் திறனுக்கான சாத்தியக்கூறை
அதிகப்படுத்த வேண்டும் என்பதை வேண்டுமானால் நாம் கருத்தாக முன்வைக்க முடியுமே தவிர,
முற்றிலும் தடுப்பூசி வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்து விட முடியாது.
தொடர்ந்து ஊரடங்கைப் பிறப்பிப்பதும் அதை நீட்டித்துக் கொண்டு
செல்வதும் வாழ்வாதரத்தைப் பாதிக்கக்கூடியன என்பதால் தடுப்பூசி போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை
ஏற்றுக் கொண்டும் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டும் நம்பிக்கையோடு கொரோனாவை எதிர்கொள்வதே
சரியானதாகவும் இருக்கும்.
தற்போதைய நிலையில் கொரோனாவுக்கான மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுக்
கொண்டிருப்பதும் நம்பிக்கைத் தரக் கூடியனவாக இருக்கின்றன.
தடுப்பூசிச் செலுத்திக் கொள்வதை நமது பாரம்பரிய மருத்துவத்துக்கு
எதிரானதாகப் பார்க்க வேண்டியதில்லை. பாரம்பரிய மருத்துவத்தால் நமது நோய் எதிர்ப்பாற்றலை
அதிகரித்துக் கொள்ளும் அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது இரட்டைப் பாதுகாப்பைத்
தரும்.
இனிவரும் காலங்களில் பாரம்பரியமும், ஆங்கில மருத்துவ முறையும்
இணைந்து கலப்பு மருத்துவமுறையைத் தேவைக்கேற்ப கைக்கொள்வதே ஏற்ற மருத்துவ முறையாக அமையும்.
*****
No comments:
Post a Comment