சேமிப்புக்குக் கை கொடுப்போம்
அவசரத்தில் கைகொடுப்போரே உண்மையான உறவுகள் என்பதைச் சொல்லித்
தெரிய வேண்டியதில்லை. அது போல ஆபத்தில் உதவுவோரே உண்மையான நண்பர்கள் என்பதையும் கோடிட்டுக்
காட்ட வேண்டியதில்லை.
அவசரத்திலும் ஆபத்திலும்
உறவுகளும் நட்புகளும் கைகொடுத்து உதவலாம் அல்லது உதவாமலும் போகலாம். சேமிப்பு அப்படி
இல்லை. அவசர காலம், ஆபத்துக் காலம் என்று எல்லா காலத்திலும் சேமிப்பு கைகொடுத்து உதவும்.
சேமிப்பை உண்மையான உறவாகவும் உண்மையான நண்பராகவும் சொல்வது அவ்வளவு பொருந்தும்.
சேமிப்பதற்குப் பல வழிமுறைகள் இருக்கின்றன. அதன் அடிப்படை என்பது
ஒன்றுதான். செலவைக் கட்டுபடுத்தி மிச்சம் செய்வதுதான் அதன் அடிப்படை. வரவுக்கு மீறி
செலவு செய்யாமல் இல்லாமல் இருந்தால் சேமிப்பு என்பது தானாக உருவாகி விடும்.
வரவைத் தாண்டிச் செலவழிப்பவர்களால் ஒரு போதும் சேமிக்க முடியாது.
அப்படிப்பட்டவர்கள் சேமிப்பையும் ஒரு செலவாகக் கருதி தினந்தோறும் சேமிப்புக்கென ஒரு
தொகை ஒதுக்குவது நல்லதொரு வழிமுறையாக அமையும். அல்லது சேமிப்பிற்கான காசை எடுத்து வைத்து
விட்டுப் பிறகு செலவழிப்பது ஏற்றதொரு முறையாக அமையும்.
சிறுவயதில் விளையாட்டுப் பொருளைப் போலக் கொடுக்கப்படுவது என்றாலும்
உண்டியல்தான் சேமிப்பிற்கான ஆதார வடிவம். அந்த உண்டியலைப் பிறகு நாம் பர்ஸாக மாற்றியிருக்கலாம்.
பையாக வைத்திருக்கலாம். அஞ்சலகமாகவோ, வங்கியாகவோ மாற்றியிருக்கலாம். சேமிப்பிற்கான
ஒரு பொருளோ, ஒரு கணக்கோ இருக்க வேண்டியது அவசியம் என்பது இதன் அடிப்படையாகும்.
சேமிப்பை ஒரு பழக்கமாக உருவாக்கிக் கொள்வது அவசியம். சேமிப்பு
ஒரு பழக்கமாக உருவெடுத்தால்தான் சேமிப்பின் பலனை நாம் பெற முடியும். அன்றாடம் குளிப்பதைப்
போல, பல் துலக்குவதைப் போல, ஆடைகளைத் துவைப்பதைப் போல அதையும் ஒரு பழக்கமாக்கிக் கொள்ள
வேண்டும்.
அதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. மாதம் முப்பது நாளும் இம்முறையில்
சேமிக்கலாம். சேமிப்பதற்கேற்ப ஓர் உண்டியலையோ, ஒரு பையையோ வாங்கி வைத்துக் கொள்வது
உசிதம். முதல் நாள் ஒரு ரூபாய் சேமித்தால், இரண்டாம் நாள் இரண்டு ரூபாய் சேமிப்பது,
மூன்றாம் நாள் மூன்று ரூபாய் சேமிப்பது என்று தொடங்கி முப்பதாவது நாள் முப்பது ரூபாய்
என்று சேமிப்பது நல்லதொரு வழிமுறை. இப்படிச் சேமித்தால் மாத முடிவில் எவ்வளவு சேமித்திருப்பீர்கள்
தெரியுமா? 465 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதையே வருடம் முழுவதும் தொடர்ந்தால் 5580
ரூபாய் சேமித்திருப்பீர்கள். அவ்வாறு இல்லாமல் முதல் நாள் ஒரு ரூபாய், இரண்டாம் நாள்
இரண்டு ரூபாய் என 365 நாளும் தொடர்ந்தால் வருட முடிவில் 66,795 சேமித்திருப்பீர்கள்.
உங்களுக்கு எப்படி வசதியோ அப்படிச் சேமிக்கலாம்.
உங்கள் வசதியைப் பொருத்து முதல் நாள் பத்து ரூபாய், இரண்டாம்
நாள் இருபது ரூபாய் என்று கூட சேமிக்கலாம். முதல் நாள் நூறு ரூபாய், இரண்டாம் நாள்
இருநூறு ரூபாய் என்று கூட சேமிக்கலாம். முதல் நாள் ஆயிரம் ரூபாய், இரண்டாம் நாள் என்றும்
கூட சேமிக்கலாம். இப்படி சேமிப்புக்கான ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொண்டு அதன்படி சேமிக்கும்
பழக்கத்தை வளர்த்துக் கொள்வதால் உண்டாகும் சேமிப்பானது அவசர காலத்திலும் ஆபத்துக் காலத்திலும்
உங்களுக்கு நண்பரைப் போல உறவைப் போல உதவும் என்பது நிச்சயம்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஏதாவதொரு வடிவில் சேமிப்பைப் பழக்கமாக
வளர்த்துக் கொள்வதுதான்.
*****
No comments:
Post a Comment