Monday 12 February 2024

ஓவியர் ஆழி வே. இராமசாமியின் ‘மறு கன்னம்’ – ஓர் எளிய நூல் அறிமுகம்!

ஓவியர் ஆழி வே. இராமசாமியின் ‘மறு கன்னம்’ – ஓர் எளிய நூல் அறிமுகம்!

ஓவியர் ஆழி வே. இராமசாமி ஓர் ஓவியர், ஆசிரியர், எழுத்தாளர், மனித நேயமிக்க பண்பாளர். தனது ஓவிய நூல்கள் மூலமாகத் தமிழகத்தில் பல ஓவியர்களை உருவாக்கிய ஓவிய ஆளுமை. அறிவியல், ஆன்மிகம், பொது அறிவு, சிறார் இலக்கியம் என்று பரந்து பட்ட தளங்களில் எழுதிய மிகச் சிறந்த எழுத்து ஆகிருதியும் கூட.

அவரது ‘மறு கன்னம்’ என்ற நூல் சிறுவர்களுக்கான கதைகள் அடங்கிய தொகுப்பு. ஆழியின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஆழி சத்யன் இத்தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். இத்தொகுப்பில் ஆழியின் ஓவிய ஆளுமை, எழுத்து ஆளுமை ஆகிய இரண்டையும் காண முடிகிறது. அவர் எழுதிய கதைகளுக்கு அவரே ஓவியங்களையும் தீட்டியுள்ளார். இக்கதைகள் அனைத்தும் 1960லிருந்து பல்வேறு சிறார் இதழ்களில் வெளிவந்தவை. இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ‘நேர்மை’ என்ற சிறுகதையை ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூலில் நீங்கள் படித்திருக்கலாம். தமிழகத்தைத் தாண்டி ‘உல்லாச பயணம்’ என்ற சிறார் கதை கர்நாடக அரசின் தமிழ் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. ஆழியின் கதைச் சிறப்புக்கு இவையெல்லாம் சான்றுகள்.

இத்தொகுப்பில்,

1. ஏழைப்பெண்,

2. அப்படியும் இப்படியும்,

3. குடுமி சார்,

4. நேர்மை.

5. காணாமல் போனவன்,

6. அவர்கள் நண்பர்கள்,

7. உல்லாசப் பயணம்,

8. பிச்சுவும் பிள்ளையாரும்,

9. இது கூடத் தெரியாதா?

10. பாட்டியின் தகரப் பெட்டி,

11. அதுதான் ரகசியம்

ஆகிய பதினோரு கதைகள் இடம் பெற்றுள்ளன.  இப்பதினோரு கதைகளும் நல்லுணர்வை மையமாகக் கொண்டவை. வாழ்க்கையில் நம்பிக்கையையும் நேர்மையையும் மனிதாபிமானத்தையும் வளர்ப்பவை.

ஆழியின் கதைகளின் சாராம்சம் மெல்லுணர்வு. கதைகளில் எதிர்மறைப் பாத்திரங்கள் குறைவு. ‘அப்படியும் இப்படியும்’ என்ற கதையில் வரும் சின்னம்மா மீனாட்சியைத் தவிர மற்ற அனைவரும் மனம் திருந்தக் கூடிய நற்பாத்திரங்களே. பெரும்பாலான கதைகள் வறுமை நிலையையும், வறுமை நிலையினால் உண்டாகும் தாழ்வு உணர்வையும் சித்தரித்து அதற்குத் தீர்வு தேடக் கூடிய கதைகள். ஏழ்மை நிலையில் இருப்பவர்களைத் தாழ்வாகப் பார்க்கவோ, திருடர்களாக கருதவோ தேவையில்லை என்ற பக்கம் நின்று வாதிடக் கூடியவை. 1960க்கும் 1980க்கும் இடைபட்ட கால சூழலில் பள்ளிச் சிறார்களின் மனமானது கல்வி சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும், பழக்க வழக்கங்கள் சார்ந்தும் எப்படியெல்லாம் இயங்கியிருக்கின்றன என்பதை நுட்பமாகப் பதிவு செய்திருப்பவை.

ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் சஞ்சலப்படும் மனதை ஆற்றுப்படுத்துவதும், கிராமியப் பின்னணியில் பயிலும் மாணவர்களின் தாழ்வுணர்வைக் களைதலும், எளிமையை இகழாமல் ஏற்றுக் கொள்ளச் செய்வதும், சிறு சிறு மனப் பிணக்குகளைப் பொறுமையாக அலசிப் பார்த்துத் தீர்த்துக் கொள்ளுதலும் என்று ஆழியின் கதைகள் அனைத்தும் உளவியல் சார்ந்த மனமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டவையாக இருக்கின்றன. இந்த நோக்கத்திற்காக அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் களமும், பாத்திரங்களும், சூழலும் அவற்றைச் சித்தரிப்பதற்காக அவர் தேர்ந்து கொள்ளும் எழுத்தும் கன கச்சிதமானவை. எந்த இடத்திலும் கூடுதலாக ஒரு வார்த்தையோ, தேவையில்லாத சூழல் சித்தரிப்பையோ இக்கதைகளில் கண்டு விட முடியாது. அந்த வகையில் சிறுவர்களுக்கான நேர்த்தியான கதைகள் அடங்கிய தொகுப்பு எனலாம் இத்தொகுப்பை.

மனித குணத்தின் ஒரு சில அடிப்படைகள் எக்காலத்திலும் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இக்கதைகளைக் காலத்தால் பிந்தியவை என்று குறைத்தும் மதிப்பிட்டு விட முடியாது. கதைகள் பேசும் பொருள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவையாகவே இருக்கின்றன.

நூலின் அமைப்பும் நூலுக்காகத் தேர்ந்து கொண்ட கதைகளும் நூலின் தரத்தை உயர்த்துகின்றன. அதே நேரத்தில் நூலில் அடங்கியுள்ள கதைகளுக்கு பொருளடக்கம் இல்லாதது, எந்தக் கதை எப்போது எந்த இதழில் இடம் பெற்றது என்ற தகவல் இல்லாதது ஆகியன போதாமை உணர்வை உண்டாக்குகின்றன.

ஓவியத்திற்காகவும் சிறுவர் இலக்கியத்திற்காகவும் ஏராளமான நூல்கள் எழுதியுள்ள ஆழியின் நூல்களை அவரது மைந்தன் பதிப்பிக்கத் தொடங்கியிருப்பது ஓவிய உலகுக்கும், சிறுவர் இலக்கிய உலகுக்கும் கிடைத்த கொடுப்பினை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து ஆழியின் நூல்களைப் பதிப்பிப்பதில் முனைப்பு காட்டி வரும் ஆழியின் குடும்பத்தினருக்கும், கீழ்வேளூரில் இயங்கி வரும் மகிழம் இலக்கிய களத்திற்கும் இலக்கிய உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.

நூல் குறித்த விவரங்கள் :

நூலின் பெயர் : மறு கன்னம்.

நூலாசிரியர் : ஆழி வே. இராமசாமி.

தொகுப்பாசிரியர் : ஆழி சத்தியன்,

நூலின் விலை : 120 ரூபாய்.

நூலைப் பெற அணுக வேண்டிய முகவரி : சித்ரகலா பதிப்பகம், அகரக்கடம்பனூர், கீழ்வேளூர் – 611104, நாகப்பட்டினம் மாவட்டம்.

தொடர்பு எண் : 94433 82614.

இது போன்ற பயனுள்ள நூலறிமுகங்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி! வணக்கம்!

*****

No comments:

Post a Comment