Thursday, 15 February 2024

சூரியன் வருவது யாராலே?

சூரியன் வருவது யாராலே?

நாமக்கல் கவிஞரின் இந்தப் பாடலின் சில தேர்ந்தெடுக்கப்பட சில வரிகள் நான் முதல் வகுப்பு படித்த போது பாடநூலில் இருந்தது. இப்போது படிக்கும் போதும் சரி, நினைவில் இருப்பதிலிருந்து பாடிப் பார்க்கும் போதும் சரி ஒரு பரவசம் வருகிறது. இவ்வளவு பெரிய கருப்பொருளை அவ்வளவு சிறிய வயதில் மாணவர்களுக்கான பாடமாக வைக்கலாமா என்று அப்போதே இந்தப் பாடலைப் பற்றிய விமர்சனங்கள் உண்டு. இந்தப் பாடலை ஆசிரியர் பாட, நாங்கள் பின்தொடர்ந்து பாட அந்தக் காலத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது. இப்போதும் இந்தப் பாடலுக்கான தேவையும் அவசியமும் இருப்பதாகவே உணர்கிறேன். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்களேன். பலரும் பயன் பெற பாடலையும் பகிருங்களேன்.

சூரியன் வருவது யாராலே?

சந்திரன் திரிவதும் எவராலே?

காரிருள் வானில் மின்மினிபோல்

கண்ணிற் படுவன அவைஎன்ன?

 

பேரிடி மின்னல் எதனாலே?

பெருமழை பெய்வதும் எவராலே?

யாரிதற் கெல்லாம் அதிகாரி?

அதைநாம் எண்ணிட வேண்டாவோ?

 

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்

தரையில் முளைத்திடும் புல் ஏது?

 

மண்ணில் போட்டது விதையொன்று

மரஞ்செடி யாவது யாராலே?

 

கண்ணில்தெரியாச் சிசுவை எல்லாம்

கருவில் வள்ர்பதுயார் வேலை?

எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்

ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ?

 

எத்தனை மிருகம்! எத்தனை மீன்!

எத்தனை ஊர்வன பறப்பனபார்!

எத்தனை பூச்சிகள் புழுவகைகள்!

எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!

 

எத்தனை நிறங்கள் உருவங்கள்!

எல்லா வற்றையும் எண்ணுங்கால்

அத்தனை யும்தர ஒருகர்த்தன்

யாரோ எங்கோ இருப்பதுமெய்.

 

அல்லா வென்பார் சிலபேர்கள்;

அரன் அரியென்பார் சிலபேர்கள்;

வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தையென்பார்கள்;

 

சொல்லால் விளங்கா ‘நிர்வாணம்

என்றும் சிலபேர் சொல்வார்கள்;

எல்லா மிப்படிப் பலபேசும்

ஏதொ ஒருபொருள் இருக்கிறதே!

 

அந்தப் பொருளை நாம்நினைத்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்,

எந்தப் படியாய் எவர் அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன?

 

நிந்தை பிறரைப் பேசாமல்

நினைவிலும் கெடுதல் செய்யாமல்

வந்திப்போம் அதை வணங்கிடுவோம்;

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

*****

No comments:

Post a Comment