Saturday, 17 February 2024

தமிழ்நாட்டில் ஏன் பஞ்சுமிட்டாயைத் தடை செய்திருக்கிறார்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் ஏன் பஞ்சுமிட்டாயைத் தடை செய்திருக்கிறார்கள் தெரியுமா?

பஞ்சு மிட்டாய் சேலை கட்டி…

என்று திரைப்பாடல் வரை பிரபலமாகப் பாடப்பட்ட

குழந்தைகள் குதூகலமாக விரும்பித் தின்னும்

பஞ்சுமிட்டாயைத்

தமிழ்நாட்டில்

ஏன் தடை செய்திருக்கிறார்கள் தெரியுமா?

பஞ்சுமிட்டாயின் பிங் நிறத்திற்காக அதில் ரோடாமைன்-பி என்கிற ரசாயன நிறமூட்டியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ரசாயன நிறமூட்டியானது புற்றுநோயை உருவாக்கக் கூடிய காரணிகளைக் கொண்டது. இதுதான் பிங் நிற பஞ்சு மிட்டாயைத் தடை செய்வதற்கான காரணம்.

அதென்ன ரசாயன நிறமூட்டி என்கிறீர்களா? நாம் கேசரி, ஜாங்கிரி, அல்வா போன்றவற்றிற்குக் கண்ணைப் பறிக்கும் நிறம் வேண்டும் என்பதற்காகக் கேசரி பவுடர், அல்வா பவுடர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம் அல்லவா! அவைதான் நிறமூட்டிகள். அது போன்ற ஒரு நிறமூட்டிதான் இளஞ்சிவப்பு நிற பஞ்சுமிட்டாயை உருவாக்க உதவும் ரோடாமைன்-பி என்ற ரசாயன நிறமூட்டியும். அப்படியானால் கேசரி பவுடர், அல்வா பவுடர் போன்றவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இல்லையா என்றால், அவற்றிலும் இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சிக்குரிய அறிவியல் உண்மை.

அப்படியானால் நாம் உணவுகளில் நிறமூட்டிகளையே பயன்படுத்தக் கூடாதா என்றால் இயற்கையான நிறமூட்டிகளைப் பயன்படுத்தலாம். செயற்கையான ரசாயன நிறமூட்டிகளைப் பயன்படுத்தக் கூடாது.

இயற்கையில் கரோட்டின், குளோரோபில், ரிபோப்ளேவின், சாப்ரான், குர்குமின் போன்ற இயற்கை நிறமூட்டிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களுக்கு நிறமூட்டலாம். ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற இயற்கை நிறமூட்டிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. கரோட்டின் நிறமியின் மூலமாகச் சிவப்பு நிறத்தை உருவாக்கலாம். குளோரோபில் மூலமாகப் பச்சை நிறத்தை உருவாக்கலாம். ரிபோபிளேவின் மூலமாக ஆரஞ்சு நிறத்தை உருவாக்கலாம். சாப்ரான் மூலமாகக் குங்குமப்பூ நிறத்தை உருவாக்கலாம். குர்குமின்  மூலமாக மஞ்சள் நிறத்தை உருவாக்கலாம்.

மெக்டொனால்ட், கொகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் அங்குள்ள கட்டுபாடுகள் காரணமாக இயற்கையான நிறமூட்டிகளையே நிறமூட்டப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் ரசாயன நிறமூட்டிகளைப் பயன்படுத்துகின்றன என்பதில் எவ்வளவு முரண்பாடு இருக்கிறது பாருங்கள்.

ஆகவே கடைகளில் விற்கப்படும் ரசாயன நிறமூட்டிகளைக் கொண்டு நிறமூட்டப்பட்ட உணவு பதார்த்தங்களை இயன்ற வரை தவிர்க்கப் பாருங்கள் என்பதை விட முற்றிலுமாகத் தவிர்க்கப் பாருங்கள் என்பதே சரியானது.

வீடுகளில் உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் போது ரசாயன நிறமூட்டிகளைத் தவிர்த்து இயற்கை நிறமூட்டிகள் மூலமாக நிறமூட்ட வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் நிறமூட்டாமலே அந்த உணவுப் பொருட்களைத் தயாரிக்கலாமே. கேசரி சிவப்பாக இல்லையென்பதற்காக அதன் சுவை குறைந்து விடப் போகிறதா என்ன?  ஜாங்கிரியும் சிவப்பாக இல்லையென்றாலும் இனிப்பாகத்தானே இருக்கப் போகிறது?

*****

No comments:

Post a Comment