Tuesday, 27 February 2024

முதலீட்டிற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியவை!

முதலீட்டிற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியவை!

முறைபடுத்துபவர்கள் எனப்படும் ரெகுலேட்டர்கள் இல்லாத துறைகளில் முதலீடு செய்யாதீர்கள். அது முதலீட்டுக்கு ஆபத்தாக முடியும்.

அங்கீகாரம் பெறாத மனைகள் அல்லது நிலங்களை வாங்கும் போது அவசரம் காட்டாதீர்கள். தீர விசாரிப்பதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒதுக்கலாம். அதன் மூலம் தேவையில்லாத அநாவசிய நிதி சார்ந்த பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கலாம்.

உதாரணமாக நிதித்துறையில் இந்தியாவின் மத்திய வங்கி எனப்படும் ரிசர்வ் வங்கியானது நிதி நிறுவனங்கள் அனைத்தையும் முறைப்படுத்துபவராக இருக்கிறது. மத்திய வங்கி எனப்படும் ரிசர்வ் வங்கியின் முறைபடுத்துதல் இல்லாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது. அப்படி முதலீடு செய்வதால் முதலீட்டை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்.

அது போல பங்கு சந்தை சார்ந்த துறைகளில் பங்கு பரிவர்த்தனை ஒழுங்காற்று ஆணையம் எனும் செபி முறைபடுத்துபவராக இருக்கிறது. செபியின் அனுமதி இல்லாத பங்குச் சார்ந்த எதிலும் முதலீடு செய்யக் கூடாது. அப்படி முதலீடு செய்வதால் முதலிழக்கும் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பலரும் ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக அந்த நிதி நிறுவனம் மத்திய வங்கி எனப்படும் ரிசர்வ் வங்கியினால் அனுமதிக்கப்பட்ட நிதி நிறுவனமா என்பதை பார்க்கத் தவறுகிறார்கள். கிரிப்டோ போன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு முன்பாக அந்தப் பரிவர்த்தனைகள் பங்கு பரிவர்த்தனை ஒழுங்காற்று ஆணையமான செபியின் வரம்புக்குள் வருகிறதா என்பதையும் கவனிக்கத் தவறுகிறார்கள்.

நீங்கள் நிதி தொடர்பான எத்தகைய பரிவர்த்தனை அல்லது முதலீட்டைச் செய்வதாக இருந்தாலும் அரசால் கட்டுப்படுத்தப்படும் மற்றம் முறைபடுத்தப்படும் அமைப்புக்குள் அவை வருகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

நிலம் மற்றும் வீடு வாங்குவதிலும் அரசின் ஒப்புதல் பெற்ற மனைகளா? இடங்களா? என்பதையெல்லாம் உறுதிபடுத்திக் கொண்ட பிறகே அவற்றை வாங்க வேண்டும். இதற்கென உள்ள வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறையின் ஆவணங்களை நன்கு பரிசோதித்த பின்பே வாங்க வேண்டும். தேவையேற்படின் இதற்கென உள்ள அங்கீகாரம் பெற்ற ஆலோசகர்களின் உதவிகளைப் பெறவும் தயங்கக் கூடாது.

ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக அதன் நீண்ட கால நிதிநிலை வளர்ச்சி அதாவது டிராக் ரெக்கார்ட் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அத்துடன் ஒரு நிறுவனத்தின் போக்கு மற்றும் வெளிப்படை தன்மை போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். நிலம் அல்லது வீட்டுமனை வாங்குவதிலும் நீங்கள் இது போன்று பட்டா, சிட்டா தொடர்பான விவரங்களை நீண்ட கால அளவுக்குப் பரிசோதிக்க முடியும். ஆகவே நிதி தொடர்பான எந்த விவகாரங்களிலும் அவசரப்படாமல் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து, உரிய வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்பு செய்வதே பாதுகாப்பான மற்றும் சரியான வழிமுறையாகும்.

நண்பர்கள் சொல்கிறார்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகக் குருட்டுத்தனமாக நம்பி நிதி முதலீடுகளைச் செய்வதோ, வீட்டுமனைகளை வாங்குவதோ தீராப் பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டு விடக் கூடியன. எப்போதும் பணம் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு முன்பாகப் பல முறை யோசியுங்கள். துறை சார்ந்த நிபுணர்களைக் கலந்தாலோசியுங்கள். பிறகு நிதி தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும் எடுங்கள்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

*****

No comments:

Post a Comment