பணம் எடுக்கும் தேதியை ஏன் 29 அல்லது 30 ஆக நிர்ணயிக்க வேண்டாம் என்பதற்கான
காரணம் தெரியுமா?
வங்கிக்குச் சென்று மாதா
மாதம் பணம் செலுத்தும் முறைகள் முடிவுக்கு வந்து விட்டன. தற்போதைய தகவல் தொழில்நுட்பம்
தரும் வசதிகளாலும் வாய்ப்புகளாலும் தவணைத்தொகைக்கான பணத்தைச் செலுத்துவதற்கும் நேரில்
செல்ல வேண்டியதில்லை.
ஒரு தொடர் வைப்போ (R.D),
கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையோ (EMI), மாதாந்திர முதலீட்டுத் திட்டமோ (SIP) நாம்
ஒரு தேதியைக் குறிப்பிட்டு விருப்பம் தெரிவித்து விட்டால் அந்தத் தேதியில் வங்கிக்
கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதிகள் தற்போது வந்து விட்டன.
அப்படிப் பணத்தை வங்கிக்
கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வதற்கான தேதியை ஏன் 29 அல்லது 30 ஆக நிர்ணயிக்கக் கூடாது
என்றால் பிப்ரவரி மாதத்தில் இதனால் பிரச்சனைகள் ஏற்படும். பிப்ரவரி மாதத்திற்கு 28
நாட்கள்தான் வரும். லீப் ஆண்டில் மட்டும் 29 நாட்கள் வரும். இதனால் பணம் எடுத்துக்
கொள்வதற்கான விருப்ப நாளை நாம் 1 லிருந்து 28 தேதிகளும் ஒன்றாக நிர்ணயித்துக் கொள்வதுதான்
சரியானதாக இருக்கும்.
மாதாந்திர வருமானத்தை வங்கிக்
கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்டு பெறுபவர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத்
எடுத்துக் கொள்வதற்கான தேதியைத் தங்களின் ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் தேதிக்கு ஐந்து
நாட்களுக்குப் பிறகு கொடுப்பது உசிதமாக இருக்கும்.
ஏன் அப்படிச் செய்ய வேண்டும்
என்கிறீர்களா?
சில மாதங்களில் ஊதியப் பட்டுவாடா
தாமதப்படலாம். தொடர் விடுமுறைகள் வந்து அதன் காரணமாகப் பண பரிவர்த்தனைகள் செய்யப்படுவதில்
தடங்கல்கள் ஏற்பட்டு ஊதியம் வந்து சேர்வதில்
சிரமங்கள் ஏற்படலாம். இதனால் ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் தேதியிலிருந்து குறைந்தபட்சம்
ஐந்து நாட்கள் கழித்துப் பணம் எடுப்பதற்கான தேதியை நிர்ணயித்து அதற்கான விருப்பத்தைத்
தெரிவித்து விண்ணப்பம் கொடுப்பது சாலச் சிறந்ததாகும்.
அப்படிக் கொடுப்பதால் வங்கிக்
கணக்கில் பணமில்லை என்று தவணைகளோ, முதலீடுகளுக்கான தொகை எடுப்புகளோ தவறிப் போகவோ அல்லது
அபராதம் செலுத்தும் நிலைமைக்குப் போகவோ வாய்ப்பில்லை.
பெரும்பாலும் பலருக்கு ஊதியம்
மாதத்தின் முதல் ஐந்து தேதிக்குள் வங்கிக் கணக்கில் பட்டுவாடா செய்யப்படும். இதனால்
தவணை, முதலீட்டுத் திட்டங்களுக்கான பணம் எடுப்பதற்கான தேதிகளை 10 லிருந்து 28க்குள்
ஒரு தேதியை நிர்ணயித்துக் கொடுப்பது ஏற்புடையதாக இருக்கும் அல்லவா!
அதே நேரத்தில் தங்களின் வங்கிக்
கணக்கில் எப்போதும் நிரந்தரமாகக் குறிப்பிட்ட தொகை இருக்கும் என்றால் நீங்கள் 1லிருந்து
28க்குள் எந்தத் தேதியை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்வதற்கான விருப்பத் தேதியாகக்
கொடுத்துக் கொள்ளலாம்.
இது எதற்காக என்றால், பணம்
தொடர்பான விசயங்களில் காரணம் அறிந்து காரியங்களைச் செயல்படுத்தினால் பல பிரச்சனைகள்
ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அந்தத் தவிர்ப்புக்காகத்தான் இத்தகவலும் அது குறித்த காரண
விளக்கமும்.
இந்தத் தகவல் உங்களுக்குப்
பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மற்றுமொரு பயனுள்ள தகவலோடுநம்முடைய வலைப்பூவில்
நாளை சந்திப்போம்.
நன்றி!
வணக்கம்!
*****