பத்திரப் பதிவு ஆவணங்கள் அறிவோமா?
பத்திரப்
பதிவுக்கு அவசியமான மற்றும் தேவையான ஆவணங்கள் பத்திரப் பதிவு ஆவணங்கள் ஆகும். அவையாவன,
வில்லங்கச் சான்றிதழ் (EC), நிலவரைபடப் புத்தகம் (FMB), பட்டா, சிட்டா, அடங்கல், அ
பதிவேடு என்பன ஆகும். இவை ஒவ்வொன்றையும் கீழே
விரிவாகக் காண்போம்.
வில்லங்கச் சான்றிதழ் (EC – Encumbrance
Certificate)
சொத்தின்
உரிமை பற்றிய தற்போதைய நிலை என்ன என்பதை அறிய வில்லங்கச் சான்றிதழ் உதவுகிறது. ஓர்
இடத்தை வாங்குவதற்கு முன்பு 50 ஆண்டுகளுக்கு வில்லங்கம் பார்ப்பது நல்லது.
நில வரைபடப்புத்தகம் (FMB – Field
Measurement Book)
அளவை
எண்ணுக்கு உரிய (சர்வே எண்) இடமானது எங்கே இருக்கிறது என்பதை நிலவரைபடப் புத்தகம் தெரிவிக்கிறது.
ஓர் இடத்தின் நான்கு புறமும் இருக்கக் கூடிய நிலப்பரப்பானது அளவை எண்ணுடன் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மேலும் நிலத்தின் பரப்பளவு, அளவை எண், உட்பிரிவு எண், நடைபாதை, தண்ணீர் செல்லும் பாதைகள்,
கிணறு, உயர் மின்னழுத்த இணைப்பு போன்ற பல்வேறு விவரங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.
பட்டா
உரிமையாளரை
உறுதிப்படுத்தும் தனிநபரின் ஆவணமே பட்டா ஆகும். இந்த பட்டா மூலம்தான் நிலத்தின் உரிமை
யாருக்கு உள்ளது என முடிவு செய்யப்படுகிறது. இது வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்படும்
ஆவணம் ஆகும். இதில் அந்த இடம் அமைந்திருக்கும் மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா எண்,
உரிமையாளர் பெயர், புல எண், உட்பிரிவு எண், நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, இடத்தின்
பரப்பளவு, தீர்வை (வரி) போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
சிட்டா
சிட்டா
என்பது நிலத்தின் உரிமையாளர் குறித்த அரசின் பதிவேடு ஆகும். ஒரு தனிநபருக்கு எவ்வளவு
நிலம் இருக்கிறது என்பதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு இது ஆகும். இதில் சொத்தின்
உரிமையாளர் பெயர், பட்டா எண், நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, தீர்வை (வரி) செலுத்திய
விவரம் போன்றவை இடம் பெற்றிருக்கும்.
அடங்கல்
கிராமத்தில்
இருக்கும் மொத்த அளவை எண்கள் அடங்கிய பதிவேடு அடங்கல் ஆகும். இதில் குறிப்பிட்ட அளவை
எண்ணுக்குரிய இடம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண், நன்செய் நிலமா அல்லது புன்செய்
நிலமா போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
அ பதிவேடு
இது
பழைய அளவை எண் பதிவேடு ஆகும். இப்பதிவேட்டில் பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், பட்டா
எண், உரிமையாளர் பெயர், இடத்தின் பரப்பளவு, தீர்வை (வரி), விவசாய நிலமா அல்லது அரசு
நிலமா அல்லது நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா அல்லது மானாவாரி நிலமா அல்லது தரிசு
நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என்பன போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
ஓர்
இடத்தை வாங்குவதற்கு முன்பாக மேற்காணும் அனைத்து ஆவணங்களையும் பெற்று அத்துடன் இடத்தின்
தற்போதைய பத்திரம் மற்றும் தாய்ப் பத்திரம் (முந்தையப் பத்திரம்) ஆகியவற்றையும் பெற்று
நன்கு ஆராய்ந்து, தேவைப்பட்டால் வழக்கறிஞரின் சட்டப்பூர்வமான கருத்தையும் பெற்று வாங்குவது
நல்லது.
*****




















